தாம்பரம் இனி தள்ளாடுமோ.. தென் மாவட்ட அரசு பஸ்களுக்கு கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு கடைசி ஸ்டாப்பிங்
சென்னை: தாம்பரம் வரை இயக்கப்பட்ட தென் மாவட்ட அரசு பஸ்கள் இன்று முதல் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்பானது தென்மாவட்ட பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவே கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டது. இதையடுத்து கோயம்பேட்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்கள் தற்போது கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து இயக்கப்படுகின்றன.
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு பயன்பாட்டுக்கு வந்தபோதும், ஏராளமான சிக்கல்கள் கிளம்பின.. குறிப்பாக மழைக்காலத்தில் பஸ் ஸ்டாண்டுக்குள்ளேயே தண்ணீர் தேங்குவதாகவும், பல்வேறு பகுதிகளிலுள்ள மக்களால் கிளாம்பாக்கம் வந்துசெல்ல போக்குவரத்து வசதி இல்லை என்றும் சலசலப்புகள் எழுந்தன. இந்த சிக்கல்கள் எல்லாம் மெல்ல மெல்ல சீர்செய்யப்பட்டு வந்தன.

சீர்செய்யப்பட்ட குறைகள்
அதேபோல, எஸ்கலேட்டர், தங்குமிடம், நவீன கழிப்பறை, உணவகம் என பல வசதிகளும் செய்யப்பட்டன. சென்னையின் பிற பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
ஆனால், கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் சில போக்குவரத்து கழக பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்பட்டன. இதனால் தாம்பரத்தில் எதிர்பாராத அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால்தான், கிளாம்பாக்கம் வரை மட்டுமே போக்குவரத்துக் கழகங்கள் பேருந்துகளை இயக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று முதல் அதிரடி மாற்றம்
தாம்பரம் வரை இயக்கப்பட்ட தென் மாவட்ட அரசு பஸ்கள் இன்று முதல் கிளாம்பாக்கத்துடன் நிறுத்தப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவிப்பு வெளியிட்டு, இது குறித்து செய்திக்குறிப்பையும் வெளியிட்டிருக்கிறது.
அதில், "தாம்பரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தாம்பரம் போக்குவரத்து காவல்துறை வழங்கியுள்ள பரிந்துரைப்படி தமிழகத்தின் தென்மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டு, திண்டிவனம் வழியாக தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த அரசு பஸ்கள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும்.
பயணிகள் மகிழ்ச்சி
இதையொட்டி, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் பயணிகளின் நலன் கருதி மாநகர போக்குவரத்துக்கழகத்தில் தற்போது 80 வழித்தடங்களில் 589 பஸ்கள், 3795 நடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இத்துடன் கூடுதலாக 104 பஸ்கள் 815 நடைகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறையின் இந்த அறிவிப்பானது பயணிகளுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications