ரயிலில் ஏறி ஜாலியா சுற்றும் ராஜநாகங்கள்.. 20 ஆண்டுகளில் விசித்திர வேட்டை பயணம்! நம்ப முடியாத சம்பவம்
சென்னை: சமீபகாலமாக சிலவகை பாம்புகள் காடுகளை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது அனைவரும் அறிந்ததே.. ஆனால் ஒரு பாம்பு ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் தண்டவாளங்களுக்கு அருகே அடிக்கடி வந்து போகிறதாம். இது ஒரு புதிய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. அதை பற்றி பிபிசி தமிழ் வெளியிட்டுள்ள செய்தியை இங்கே சுருக்கமாக காண்போம்...
இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் வழியாகச் செல்லும் ரயில் பாதைகள், ராஜநாகங்களின் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.. குறிப்பாக கோவா போன்ற மாநிலங்களில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளுக்கு இடையே நீண்ட தூர ரயில் பாதைகள் அமைந்துள்ளன..
தண்டவாளத்தில் ராஜ நாகங்கள்
இந்தப் பாதைகளில் ஊர்ந்து வரும் ராஜநாகங்கள், தற்செயலாக ரயில் தண்டவாளங்களை அடைகின்றன.. சில நேரங்களில் உணவு தேடியோ அல்லது பாதுகாப்பான மறைவிடம் தேடியோ வரும் இந்தப் பாம்புகள், அங்கு நிற்கும் ரயில்களுக்குள் புகுந்து விடுகிறதாம்..
இப்படி ரயில்களில் ஏறும் ராஜநாகங்கள், நீண்ட தூரம் பயணம் செய்து தங்களின் இயற்கையான வாழ்விடத்தை விட்டு வெகு தொலைவில் உள்ள நகரங்களுக்கும் மக்கள் வாழும் பகுதிகளுக்கும் சென்று சேர்ந்து விடுமாம்..

ரயிலில் பாம்பு
கடந்த 20 வருஷத்துல கோவா பகுதியில் வனவிலங்கு மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்ட ராஜநாகங்களை ஆய்வு செய்தபோது, ஒரு திடுக்கிடும் உண்மை வெளிவந்துள்ளது.. மீட்கப்பட்ட மொத்த பாம்புகளில் பெரும் பகுதியானது ரயில் நிலையங்கள் அல்லது ரயில் தண்டவாளங்களுக்கு அருகிலேயே பிடிபட்டுள்ளன..
குறிப்பாக வடக்கு மற்றும் தெற்கு கோவா பகுதிகளில் உள்ள பல ரயில் நிலையங்கள் காடுகளுக்கு மிக அருகிலேயே இருப்பதால், பாம்புகள் எளிதாக அங்கு வந்து விடுகின்றன.. இவ்வாறு ரயில்கள் மூலம் இடம் மாறும் ராஜநாகங்கள், புதிய இடங்களில் தங்களுக்குத் தேவையான உணவோ அல்லது தங்குமிடமோ கிடைக்காமல் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.. இது அந்தப் பாம்புகளின் உயிர்வாழ்விற்கே ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது..
விஷப்பாம்புகள்
ராஜநாகங்கள் என்பது சாதாரணப் பாம்புகளை போல கிடையாது.. அவை கடித்தால் மனிதர்கள் உயிர் பிழைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகும்.. இத்தகைய கொடிய விஷம் கொண்ட பாம்புகள் ரயில்கள் மூலம் மனிதர்கள் அதிகம் வாழும் குடியிருப்புகளுக்குள் வரும்போது, அது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஒரு பெரிய சவாலாக மாறுகிறது.. மனிதர்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் இதனால் அதிகரிக்கின்றன..
இந்த விரிவான ஆய்வு தான், சர்வதேச அளவில் புகழ்பெற்ற அறிவியல் இதழ்களில் வெளியிடப்பட்டு, உலகம் முழுவதும் உள்ள சூழலியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.. இது வெறும் சுவாரஸ்யமான தகவல் மட்டுமல்ல, வனவிலங்கு பாதுகாப்பில் நாம் எவ்வளவு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு எச்சரிக்கையும் கூட..
ராஜநாகம் அரிய வகை உயிரினம்
ரயில்கள் மூலம் விஷப்பாம்புகள் ஊடுருவுவதைத் தடுக்க முறையான வழிகாட்டுதல்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம் தேவைப்படுகின்றன..
அதேபோல், காடுகளை சிதைக்காமல் பாதுகாப்பதன் மூலமே ராஜநாகம் போன்ற அரிய வகை உயிரினங்கள் ஊருக்குள் வருவதை தவிர்க்க முடியும்.. வருங்காலங்களில் இத்தகைய விபத்துகளை தவிர்க்க ரயில்வே துறையும் வனத்துறையும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும் என்று பிபிசி செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது..












Click it and Unblock the Notifications