கறவை மாடு வளர்ப்போர் யாருக்கு பால் ஊற்றுவார்கள்? ஆவின் Vs அமுல்! எதார்த்தத்தை உடைத்து பேசும் ஈஸ்வரன்
சென்னை: அமுல் வருகையால் ஆவின் முடங்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கும் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்த வேண்டும் என அட்வைஸ் செய்துள்ளார்.
ஏற்கனவே கர்நாடகாவை சேர்ந்த நந்தினி அரசு பால் நிறுவனமும் அதிக விலை கொடுத்து தமிழ்நாட்டில் பால் கொள்முதல் செய்து வரும் நிலையில், அமுலும் வந்தால் ஆவினின் நிலைமை மோசமாகும் எனக் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பாக ஈஸ்வரன் கூறியிருப்பதாவது;

''பால் கொள்முதல் விலை கட்டுப்படியாகவில்லை என்று விவசாயிகளும் பால் உற்பத்தியாளர்களும் தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டு உள்ளார்கள். பால் கொள்முதல் விலையேற்றம் குறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து விளக்கங்களை எடுத்து கூறினோம்.
தனியார் பால் நிறுவனங்கள் ஆவின் நிறுவனங்களை விட லிட்டருக்கு பத்து ரூபாய் வரை அதிகமாக கொடுக்கிறார்கள். அதனால் பால் உற்பத்தியாளர்கள் தனியார் பால் நிறுவனங்களுக்கு விரும்பி பாலை கொடுப்பதால் ஆவின் நிறுவன பால் கொள்முதல் 10 லட்சம் லிட்டர் வரை ஒவ்வொரு நாளும் குறைந்து போனது.
கர்நாடகாவை சேர்ந்த நந்தினி அரசு பால் நிறுவனமும் அதிக விலை கொடுத்து தமிழ்நாட்டில் பால் கொள்முதல் செய்து வருகிறது. தற்போது குஜராத்தை சேர்ந்த அரசு நிறுவனமான அமுல் பால் நிறுவனமும் தமிழ்நாட்டில் அதிக விலை கொடுத்து பால் கொள்முதல் செய்வதாக செய்திகள் வருகின்றன.
இந்த சூழ்நிலையில் பால் உற்பத்தியாளர்களுடன் பேசி பால் கொள்முதல் விலையை உயர்த்தவில்லை என்றால் ஆவின் பால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடங்கித்தான் போகும். மற்ற அனைவரும் பாலுக்கு அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யும் போது ஏழை விவசாயிகள் ஆவின் பால் நிறுவனத்திற்கு ஏன் பாலை விற்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.
எனவே இதில் உள்ள எதார்த்தமான நியாயத்தை உணர்ந்து பால் கொள்முதல் விலையை உயர்த்தி ஆவின் பால் நிறுவனத்தையும் ஏழை விவசாயிகளையும் தமிழ்நாடு அரசு காப்பாற்ற முன்வர வேண்டும்.''












Click it and Unblock the Notifications