பரபரக்கும் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை... கை கோர்க்கப்போகின்றனரா அந்த இரு துருவங்கள்?
சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை பரபரத்து கொண்டிருக்கும் நிலையில் இதனை எதிர்கொள்ளும் வகையில் அரசியலில் இருதுருவங்களாக இருக்கும் மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோரை கை கோர்க்க வைக்கும் அதிமுக சீனியர்கள் சிலர் படுதீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர் என்கின்றனர் அக்கட்சி வட்டாரங்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி நள்ளிரவில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்கு தமிழகத்தை உலுக்கியது. இந்த சம்பவத்தில் ஓம் பஹதூர் என்ற காவலாளி கொல்லப்பட்டார். மேலும் கோடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த வழக்கு பல மர்ம முடிச்சுகளுடன் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. கோடநாடு கொலை,கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களாக கூறப்பட்டவர்கள் அடுத்தடுத்து சினிமா கட்சிகளை மிஞ்சும் வகையில் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.

கோடநாடு வழக்கு விசாரணை
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தின்போதே, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இந்த விவகாரத்தில் தொடர்பு உள்ளதாக புகார் கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது திமுக ஆட்சியில் கோடநாடு கொலை-கொள்ளை வழக்கு மீண்டும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இவ்வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குமுறிய எடப்பாடி
ஆனால் இந்த மறுவிசாரணை என்பதே தம்மை சிக்க வைக்கும் சதி என குமுறினார் எடப்பாடி பழனிசாமி. இது தொடர்பாக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்திடமும் எடப்பாடி பழனிசாமி புகார் செய்தார். மேலும் சட்டசபையிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இன்னொருபுறம் இவ்வழக்கில் சசிகலா, இளவரசி உள்ளிட்டோரையும் விசாரிக்க வேண்டும் என ஒரு வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் உத்தரவு
இதனிடையே கோடநாடு கொலை-கொள்ளை வழக்கை எந்த பாரபட்சமும் காட்டாமல் முறையாக விசாரணை செய்ய வேண்டும்; அதிமுகவினர் சொல்வது போல அரசியல் பழிவாங்கல் என்பது இல்லாமல் உள்ளது உள்ளபடி வெளிப்பட வேண்டும் என்கிற உத்தரவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறப்பித்துள்ளாராம். இதனால் கோடநாடு கொலை-கொள்ளை வழக்கில் நடந்தது என்ன என்பதை முழுமையாக வெளிப்படுத்தும் வகையில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. திமுக அரசின் இந்த நடவடிக்கை குறித்து அதிமுக தரப்பில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.
Recommended Video

எடப்பாடியுடன் ஆலோசனை
சில நாட்களுக்கு முன்னதாக மாஜி முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அதிமுக மாஜிக்கள் சிலர் சந்தித்து பேசினர். அப்போது, இந்த விவகாரத்தில் சசிகலாவின் உதவி இருந்தால்தான் உங்களுக்கு சிக்கல் இல்லாமல் இருக்கும். அதிமுகவில் சசிகலாவை இணைப்பது குறித்து நீங்களே நேரில் சேன்று சந்தித்து பேசுங்கள். 2026-வரைக்கும் திமுக ஆட்சியை ஒன்றும் செய்திட முடியாது. அதனால், சசிகலாவை அதிமுகவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே அரசியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அதிமுகவுக்கு வலிமை கிடைக்கும்.. கட்சி வலிமையாக இருந்தால்தான் திமுகவை எதிர்கொள்ள முடியும். இல்லையெனில், திமுக, சசிகலா என இரண்டு எதிரிகளை நாம் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் என மந்திராலோசனை நடத்தி உள்ளனர்.

எடப்பாடி சொன்ன பதில்
அத்துடன் தற்போதைய ஒரே வழி சசிகலாவை சந்தித்து சமாதானம் ஆவதுதான்.. அதற்கான வழியை மட்டும் பாருங்க அண்ணே எனவும் எடப்பாடி பழனிசாமிக்கு அந்த சீனியர்கள் அட்வைஸ் செய்திருக்கிறார்கள். ஆனால், அதற்கு எடப்பாடி பழனிசாமியோ, கோடநாடு விவகாரத்தை எனக்கு எதிராக ஸ்டாலினிடம் சொல்லி தூண்டிவிடுவதே நம்மவர்தான்.. அதே நபர்தான் சசிகலாவிடமும் பேசிக் கொண்டிருக்கிறார். சசிகலாவிடம் எனக்கு எதிராக அத்தனையையும் தூண்டிவிடுவதும் நம்மவர்தான்.. நம்மவர் சொல்வதை சசிகலா இப்போது முழுமையாக நம்புகிறார். அப்படிப்பட்ட நிலையில் சசிகலாவிடம் எப்படி நான் சமாதானமாக முடியும்? நடப்பது நடக்கட்டும்.. என்னை ஆளை விடுங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று காட்டமாகவே சொன்னாராம் எடப்பாடி பழனிசாமி. இருப்பினும் , சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வைக்க சில முயற்சியை எடுத்து வருகின்றனராம் அதிமுக சீனியர்கள். இந்த முயற்சி கை கூடினால் அடுத்தடுத்த பரபரப்புகள் தமிழக அரசியல் களத்தில் அனல் பறக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications