சென்னை ஃபோர்டு கார் தொழிற்சாலையை 'டாடா' விலை பேசியது என்னாச்சு? தமிழக அரசு கோட்டை விட்டதா? -ஈஸ்வரன்
சென்னை: சென்னை ஃபோர்டு கார் தொழிற்சாலையை 'டாடா' விலை பேசியது என்னாச்சு? என கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வினவியுள்ளார்.
பல ஆயிரம் தமிழர்கள் வேலைவாய்ப்பு விவகாரத்தில் தமிழக அரசு கோட்டை விட்டுவிட்டதா? என அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி அங்கம் வகித்து வரும் நிலையில் ஈஸ்வரன் அரசுக்கு எழுப்பியுள்ள இந்தக் கேள்வி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது தொடர்பாக ஈஸ்வரன் விடுத்துள்ள பதிவின் விவரம் வருமாறு;

டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் குஜராத்தில் சணந்த் என்ற இடத்தில் மூடப்பட்ட ஃபோர்ட் நிறுவனத்தை 750 கோடி விலை பேசி வாங்கி விட்டதாக இன்று செய்திகள் வந்திருக்கின்றது. ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் உற்பத்தியை நிறுத்தி அனைத்து கார் உற்பத்தி நிறுவனங்களையும் மூடியதை நாம் அறிவோம். அதனால் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்தார்கள்.

ஃபோர்டு நிறுவனம்
தமிழகத்தில் சென்னை மறைமலை நகரில் இயங்கி வந்த ஃபோர்டு நிறுவனம் மூடப்பட்டதால் பல ஆயிரம் பேர் வேலையிழந்தனர். தமிழக அரசின் அழைப்பின் பேரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் அவர்கள் சென்னைக்கு வந்து முதலமைச்சரை சந்தித்து சென்னை ஃபோர்ட் நிறுவனத்தை கையகப்படுத்துவதைப் பற்றி பேசினார்கள்.

என்ன சலுகைகள்
தமிழக அரசின் தரப்பில் என்ன சலுகைகள் வழங்கப்படும் என்பதெல்லாம் தமிழக அரசின் சார்பில் பேசப்பட்டதாக அறிகிறோம். பல்லாயிரம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்காமல் இருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை ஃபோர்ட் தொழிற்சாலையை டாடா நிறுவனம் வாங்கும் என்று எதிர்பார்ப்புகள் இருந்தன.

அரசு கோட்டை விட்டதா?
ஆனால் குஜராத்தில் உள்ள ஃபோர்ட் தொழிற்சாலை டாடா நிறுவனம் திடீரென்று வாங்கியிருக்கிறார்கள் என்றால் நடந்தது என்ன. மத்திய அரசின் நிர்ப்பந்தமா? தமிழக அரசு கோட்டை விட்டு விட்டதா? பல ஆயிரம் தமிழர்கள் வேலையை பாதுகாக்கின்ற முயற்சியில் தோற்றுப் போனோமா. மிக கவனமாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தமிழக அரசு தள்ளப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications