எதற்கெடுத்தாலும் முந்திக்கொண்டு பேசும் அண்ணாமலை.. இதற்கு மட்டும் ஏன் வாய்திறக்கவில்லை? -ஈஸ்வரன்
சென்னை: எல்லா விவகாரங்களிலும் முந்திக்கொண்டு பேசும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக ஆட்சியில் துணைவேந்தர் பதவி ரூ.50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது பற்றி ஏன் வாய் திறக்கவில்லை என கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
துணை வேந்தர் பதவிக்கு ரூ.50 கோடி வரை கை மாறியதை அன்று வேடிக்கை பார்த்துவிட்டு இன்று அதைப் பற்றி சொல்வது ஏன் என பன்வாரிலாலை வினவியுள்ளார்.
இது தொடர்பாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

துணை வேந்தர் பதவி
தமிழகத்தில் கடந்த காலத்தில் துணை வேந்தர் பதவி 50 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது என்று அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொது நிகழ்ச்சியில் பேசி இருக்கிறார். முன்னாள் தமிழக ஆளுநர், இன்று வேறு மாநிலத்தில் ஆளுநராக இருப்பவர் துணைவேந்தர்கள் தேர்வுகளில் 50 கோடி ரூபாய் வரை லஞ்சம் கை மாறி இருக்கிறது என்று சொல்லி இருப்பது பொய்யாக இருக்க வாய்ப்பில்லை.

கொங்கு ஈஸ்வரன் கேள்வி
ஆனால் இறுதியாக அந்த நியமனங்களை செய்தது அதே ஆளுநர் தான் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது. துணைவேந்தர்கள் நியமனத்திலும் அவர்களது செயல்பாடுகளிலும் ஆளுநர்களின் ஆளுமை எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழக ஆளுநர் உயர்கல்வித்துறை அமைச்சர்களை கூட அழைக்காமல் அனைத்து துணைவேந்தர்களையும் தன்னிச்சையாக அழைத்து கூட்டம் நடத்தியதை பார்த்திருக்கிறோம்.

பன்வாரி லால்
கேரளாவில் அனைத்து துணைவேந்தர்களையும் பதவி விலகும் படி ஆளுநர் உத்தரவிட்டு இருப்பதையும் அறிகிறோம். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் அமைக்கின்ற தேடுதல் குழு துணைவேந்தர் நியமனத்திற்காக மூன்று பேரை பரிந்துரைப்பது நடைமுறை. நேர்காணல் மூலமாக அதில் ஒருவரை தேர்வு செய்வது அந்த மாநிலத்தினுடைய ஆளுநர் தான். அப்படி இருக்கும்போது ஒரு ஆளுநர் 50 கோடி லஞ்சம் கைமாறியதை வேடிக்கை பார்த்திருப்பது விந்தையாக இருக்கிறது.

அண்ணாமலை
அன்றைக்கே தட்டி கேட்டிருக்கலாம் அல்லது நிராகரித்திருக்கலாம். ஆனால் இரண்டு, மூன்று ஆண்டுகள் கழித்து இப்படி நடந்திருக்கிறது என்று சொல்வதற்கான பின்னணி புரியவில்லை. அதைவிட ஆச்சரியம், அனைத்து நிகழ்வுகளிலும் முந்திக்கொண்டு கருத்து தெரிவிக்கின்ற பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை இந்த விஷயத்தை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன்.












Click it and Unblock the Notifications