வருந்துகிறேன்.. பட்டியல் சமூக மக்களை நக்கல் செய்த அதிமுக நிர்வாகி.. வழிக்கு வந்த கோவை சத்யன்!
சென்னை: பட்டியல் சமூக மக்களை நக்கல் செய்யும் தொனியின் அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து பலரும் கோவை சத்யன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கடுமையாக சாடி வந்த நிலையில், மன்னிப்பு கேட்க முடியாது என்று பிடிவாதம் பிடித்தார். இந்த நிலையில், தவறு என்று நான் சுட்டி காட்டியது யார் மனதையோ புண்படுத்தி இருந்தால் அதற்கு வருந்துகிறேன் என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
அண்மையில் பைசன் பட விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில், எங்களின் படங்களையும், பிரச்சனைகளையும் சாதாரணமாக அமுக்கிட்டாங்க.. பிதுக்கிட்டாங்க என்று மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிக்கிறார்கள் என்று வருத்தத்துடன் தெரிவித்திருந்தார். சோசியல் மீடியாவில் பா.இரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றி மாறன் ஆகியோரின் சாதியத்திற்கு எதிரான படங்களை இப்படி கூறி நக்கல் செய்து வந்தார்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களின் துயரத்தை வாழ்வியலாக கொண்ட படங்களை இப்படி விமர்சிப்பது பல்வேறு விமர்சனங்களை பெற்று வந்தது. இந்த நிலையில் அரசியலிலும் இந்த வார்த்தைகளை அரசியல்வாதிகள் பயன்படுத்தி தொடங்கி இருக்கின்றனர். அதிமுகவின் செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் தொலைக்காட்சி விவாதத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தம் தொடர்பாக பேசினார்.
அதில் கோவை சத்யன், பெயரை பார்த்தவுடன் இவர் ஒடுக்கப்பட்டவர்.. இவர் பிதுக்கப்பட்டவர்.. இவர் நசுக்கப்பட்டவர்.. என்று சொல்ல முடியுமா? இது தவறான அரசியல் இல்லையா என்று தெரிவித்தார். இதனை அந்த தொலைக்காட்சி நெறியாளர் உடனடியாக கண்டித்தார். அதேபோல் விவாதத்தில் பங்கேற்றிருந்த விசிக எம்எல்ஏ ஆளுர் ஷா நவாஸ், திமுகவின் கருணா உள்ளிட்டோரும் கண்டித்தனர்.
இதையடுத்து கோவை சத்யன் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்த்த பலரும் கோவை சத்யன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று கூறிவந்த நிலையில், அவர் தனது எக்ஸ் பக்கத்தில், வாக்காளர் பெயரை பார்த்து இவர் நசுக்கப்பட்டவர், ஓடுக்கப்பட்டவர் என்று அடையாளம் கண்டு நீக்க முடியுமா?
இப்படி சொல்வது தவறான அரசியல் சாயம் என்று நான் பேசியதை கேட்டு பதிவு போடவும் பரம்பரை கொத்தடிமைஸ். மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. தைரியம் இருந்தால் தயாநிதி மாறன், ஆர்எஸ் பாரதியை கேட்க சொல் பார்ப்போம் என்று பதிவிட்டுள்ளார். இதனால் திமுக, விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பலரும் கோவை சத்யன் மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதனை அதிமுக தலைமையும் கண்டிக்காமல் அமைதியாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் விவகாரம் பெரிதாகிய நிலையில், கோவை சத்யம் வருத்தம் தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், உதயநிதி தொகுதியில் 11.5% போலி வாக்காளர்கள் என்பதை ஆதாரமாக காண்பித்து மாலை முரசு விவாதம் நடந்தது.
அதில் பெயரை பார்த்தவுடன் ஜாதி ரீதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்து விடுவார்கள் என்று பரப்புவது மலிவு அரசியல் அது தவறு என்று சொன்னதை வெட்டி ஜாதி சாயம் பூசும் திமுகவிற்கும், அதற்கு சாமரம் வீசுபவர்களுக்கு ஆதாரத்துடன் இந்த காணொளி வெளியிட்டு உள்ளேன்.தவறு என்று நான் சுட்டி காட்டியது யார் மனதையோ புண்படுத்தி இருந்தால் அதற்கு வருந்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications