கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு மீண்டும்?.. கிளாம்பாக்கத்தில் விழுந்த "சாபம்".. ஓவரா இருக்கே.. பாஜக ஒரே போடு
சென்னை: கிளாம்பாக்கத்துக்கு ரயில்வே ஸ்டேஷன், மெட்ரோ ரயில் திட்டம் வரும்வரை, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று பாஜக முக்கிய கோரிக்கையை வைத்திருக்கிறது.
கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு விவகாரம் சட்டசபையில் வெடித்து கிளம்பி உள்ளது... நேற்றும், இன்றும் தமிழக சட்டசபையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம்தான் தலைதூக்கியது.

"அவசரப்பட்டு ஏன் பஸ் ஸ்டாண்டை திறந்தீங்க" என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பவும், இதற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்..
முதல்வர் பதில்: "கிளாம்பாக்கத்தில், சிறு பிரச்சினைகள் இல்லை, எல்லாமே பெரிய பிரச்சினைகளே இருந்தன. அத்தனையும் தீர்த்து வைத்து தான் பேருந்து நிலையத்தை திறந்து வைத்துள்ளோம். இன்னும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், நேரடியாக வாருங்கள் சொல்லுங்கள் தீர்த்து வைக்க காத்திருக்கிறோம் என்றார் முதல்வர்.
"கிளாம்பாக்கத்தை மக்கள் ஏற்றுக்கொண்டு அங்கே பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். பஸ்களில் பயணிக்கும் பயணிகள் யாரும் பிரச்சினைகளை எழுப்பவில்லை. பேருந்துகளில் பயணிக்காதவர்கள்தான் பிரச்சினைகளை எழுப்புகிறார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சேகர்பாபு: கிளாம்பாக்கத்தில் அடிப்படை வசதி இல்லை என்று யாரும் குறை சொல்லவில்லை.. இரவு நேரத்தில் பேருந்துகள் இல்லை என்ற குறைபாடு மட்டும்தான் வருகிறது என்று அமைச்சர் சேகர் பாபுவும் விளக்கமளித்துள்ளார்.
ஆனாலும் 2 அமைச்சர்களின் விளக்கத்தை எதிர்க்கட்சிகள் இதனை ஏற்கவில்லை.. குறிப்பாக, திமுக அரசை தொடர்ந்து பாஜக விமர்சித்து வரும் நிலையில், இந்த கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு மேட்டரையும் கையில் எடுத்துள்ளது..
எச்சரிக்கை: கிளாம்பாக்கம் பிரச்சனையை சரிசெய்யாவிட்டால், மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஏற்கனவே, எச்சரித்திருக்கிறார்.. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் விமர்சித்திருக்கிறார்.
இந்நிலையில், கிளாம்பாக்கத்தில், பிரச்சினைகள் இருக்கிறது என்றால், யார் சொல்கிறார்களோ அவர்களை நேரடியாக பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறோம் என்று அமைச்சர் சேகர் பாபு சொல்லவும், இதையும் பாஜக விடவில்லை.. முதல்வரே கிளாம்பாக்கத்துக்கு ஒரு பயணி போல நேரடியாக சென்று உண்மையை அறிய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகிறது.
மின்சார ரயில்: இது தொடர்பாக தமிழகவின் செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத், ஒரு அறிக்கையே வெளியிட்டுவிட்டார். அந்த அறிக்கையில் உள்ளதாவது: "மின்சார ரயில் நிலையம் விரைந்து அமைப்பதோடு, மெட்ரோ ரயில் திட்டத்தை கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வரை நீடிக்கும் வரையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கான பிரச்னை ஓரளவுக்காவது குறையும்.
கிளாம்பாக்கம் பஸ் நிலைய பிரச்சனையில், தவறான தகவல்களை தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கும் இரு அமைச்சர்களையும் மக்கள் நம்பவில்லை. அதனால், முதல்வரே கிளாம்பாக்கத்துக்கு ஒரு பயணி போல நேரடியாக சென்று உண்மையை அறிய வேண்டும்.
நல்ல முடிவுகள்: இந்த விஷயத்தில் மக்கள் பாதிக்கப்படாத வண்ணம், நல்ல முடிவுகளை உடனே எடுக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், தினந்தோறும் கிளம்பாக்கத்துக்கு பல்வேறு சிரமங்களுடன் சென்று திரும்பும் பயணியர் சாபத்துக்கு திமுக அரசு ஆளாக நேரிடும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், ஒரு இட்லி 25 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இட்லியின் விலையே இவ்வளவு அதிக என்றால், மற்றப் பொருட்களின் விலையை சொல்ல வேண்டியதில்லை.
அமைச்சர்களுக்கு லஞ்சமாக பணம் கொடுத்து, பஸ் நிலையத்தில் கடைகளை எடுத்தவர்கள், அனைத்து பொருட்களையும் மிக அதிக விலைக்கு விற்பதை, தமிழக அரசு தடுக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் விலைக் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ், நியாயமான விலைக்கு பொருட்களை விற்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவனம் பெறும் கோரிக்கை: கிளாம்பாக்கத்துக்கு ரயில்வே ஸ்டேஷன், மெட்ரோ ரயில் திட்டம் வரும்வரை, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று பாஜக வைத்திருக்கும் இந்த கோரிக்கை மிகுந்த கவனம் பெற்று வருகிறது...!












Click it and Unblock the Notifications