நாளை கார்த்திகை ஆரம்பம்.. இப்பவே கோயம்பேட்டில் விழுந்த இடி.. வெள்ளை பூண்டு, பூக்கள் விலையை பாருங்க
சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் விலை எக்கச்சக்கமாக உயர்ந்துள்ள நிலையில், பூண்டு விலையும் அதிகரிக்க துவங்கியிருக்கிறது.. திடீரென பூ மார்க்கெட்டுகளில், பூக்கள் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. இதற்கு என்ன காரணம்?
கடந்த சில நாட்களாகவே, பெரிய வெங்காயம் விலை உயர்ந்தபடியே உள்ளது.. வரத்து குறைவு, விளைச்சல் குறைவு, தேவை அதிகம், தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால், வெங்காய விலையில் தொடர் ஏற்றம் காணப்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில், வெங்காய தட்டுபாட்டைக் குறைக்க இந்தியாவின் பல பகுதிகளுக்கும் ரயில் மூலம் வெங்காயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சென்னை, டெல்லி, போன்ற பல்வேறு பகுதிகளுக்கு இதுவரை 4850 டன் வெங்காயம் ரயில்வே மூலம் சப்ளை செய்யப்பட்டிருக்கிறது.. மேலும், மத்திய அரசிடம் தற்போது 4.5 லட்சம் டன் வெங்காயம் கையிருப்பில் உள்ளது.
விலை குறைய வாய்ப்பு: இப்படிப்பட்ட சூழலில், வெங்காயம் விலை குறைய போவதாக தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி மீண்டும் காரிஃப் பயிர் வரத்து தொடங்கியுள்ளது. இதன் காரணமாக இனிவரும் நாட்களில் வெங்காய விலை குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு கிலோ 70 முதல் 90 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வரும் வெங்காயம் விலை வரும் நாட்களில் இன்னும் குறைய வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள்.
வெங்காயத்தின் விலையால் ஏற்கனவே இல்லத்தரசிகள் நொந்துபோயுள்ள நிலைய்ல, பூண்டு விலையும் அதிகரிக்க துவங்கிவிட்டது. சென்னை கோயம்பேட்டிற்கு, தமிழகம் மட்டுமின்றி ராஜஸ்தான், காசி, மத்திய பிரதேசம் மற்றும் வேலி, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து 150 டன் அளவிலான பூண்டுகள், விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கமாகும்.
மத்திய பிரதேசம்: ஆனால், மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து 25 டன் பூண்டு மட்டுமே விற்பனைக்கு வருகிறதாம். இதனால், தட்டுப்பாடு ஏற்பட்டு, பூண்டு விலையும் அதிகரிக்க துவங்கியிருக்கிறது.. கிலோ ரூ.300 முதல் ரூ.350 வரை கடந்த வாரம் விற்கப்பட்டு வந்த முதல்ரக பூண்டு, இப்போது ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுவே வெளி மார்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ பூண்டு ரூ. 450 முதல் ரூ. 550 வரை விற்பனை செய்யப்பட்டு வருவது இல்லத்தரசிகளை மேலும் கவலைக்குள்ளாக்கி வருகிறது.
இதனிடையே, கார்த்திகை மாதம் நாளை பிறப்பதால், கோயம்பேட்டில் பூக்கள் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.. நேற்று காலை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டது.
பூக்கள் விலை உயர்வு: அதில், ஒரு கிலோ மல்லி 750 இருந்து 900 ரூபாய்க்கும், ஐஸ் மல்லி 750ல் இருந்து 800ரூபாய்க்கும், ஜாதி மல்லி மற்றும் முல்லை 600ரூபாய்க்கும், கனகாம்பரம் 1000ல் இருந்து 1,200ரூபாய்க்கும், அரளி பூ 100 இருந்து 200ரூபாய்க்கும், சாமந்தி 100ல் இருந்து 140ரூபாய்க்கும், சம்பங்கி 60ல் இருந்து 120ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 30ல் இருந்து 100ரூபாய்க்கும், சாக்லேட் ரோஸ் 50ல் இருந்து 150ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications