"வெட்கமா இல்லையா? தவெக தூய கட்சி இல்லை.. கலப்பட கட்சி”.. சரமாரியாக தாக்கிய கேபி முனுசாமி!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, செங்கோட்டையனையும், தவெகவையும் கடுமையாக விமர்சித்துப் பேசி உள்ளார். விஜய் அண்மையில் ஈரோட்டில் பேசும்போது தவெக தூய சக்தி எனக் கூறி இருந்த நிலையில், “தவெக தூய கட்சி இல்லை, கலப்படக் கட்சி” என கேபி முனுசாமி விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியில் அதிமுக துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி பங்கேற்றுப் பேசுகையில், விஜய் தலைமையிலான தவெகவை சரமாரியாக விமர்சித்துள்ளார்.

கேபி முனுசாமி பேசுகையில், “புரட்சித் தலைவர் எம்ஜிஆருக்குப் பிறகு புரட்சித் தளபதி விஜய்யாம்.. வெட்கமாக இல்லையா? இப்படிப்பட்ட கலவையான மக்கள் தான் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள். அது தூய கட்சி அல்ல, கலப்படக் கட்சி. தூய்மையான கட்சி என்கிறார் விஜய். அது எப்படி தூய்மையான கட்சி ஆகும்? நீங்கள் இன்னும் ஆட்சிக்கு வரவில்லை. ஆட்சிக்கு வந்து என்ன திட்டங்கள் செய்கிறீர்கள், அதை எவ்வளவு ஒழுக்கமாகச் செய்கிறீர்கள் என்பதைப் பார்த்துத்தான் தூய்மையா இல்லையா என்று சொல்ல முடியும்.
ரசிகர்களை வைத்து கட்சி ஆரம்பித்தீர்கள். அப்படி என்றால் அது தனித்தன்மையான கட்சி என்று சொல்லலாம். இன்றைக்கு பல்வேறு கட்சிகளில் இருந்து உங்கள் கட்சிக்கு வந்துள்ளனர். அப்படி வந்தவர்கள் எல்லாம் சந்தர்ப்பவாதிகள். எங்கே இடம் கிடைக்கும்? எங்கே தலைமைப் பதவி கிடைக்கும்? தேர்தலில் பதவி கிடைக்கும் என நினைப்பவர்கள் தான் உங்களோடு சேர்ந்திருக்கிறார்கள்.
உங்கள் கொள்கை பரப்பு செயலாளர்கள் எல்லாம் யார்? இந்தியா முழுவதும் லாட்டரி டிக்கெட் விற்பவன். ஏற்கனவே திமுகவில் இருந்து அங்கிருந்து வெளியேறி விசிகவுக்கு சென்றார். அங்கிருந்து வெளியே வந்து பல கட்சிகளில் வரப் பார்த்தார். நம் கட்சிக்கே வர முயன்றார். அதிமுகவில் உடனே பெரிய பதவிக்கு வர முடியாது. உழைப்பவர்களுக்குத்தான் இங்கு பதவி. பதவி கிடைத்ததும் அங்கு சென்றுவிட்டார்.
அப்படித்தான் நம் கட்சியில் இருந்தும் ஒரு ஆள் தவெகவுக்கு போயிருக்கிறார். செங்கோட்டையனை அமைச்சர் ஆக்கியது அதிமுக தான். அமைச்சர் பதவி கிடைக்க கட்சி காரணம். அதிமுகவில் பதவி சுகம் அனுபவித்த செங்கோட்டையன், பல்வேறு வகையான இடையூறுகளை செய்தார். பொதுச் செயலாளர் கூப்பிட்டு அறிவுரைகள் சொன்னார். கேட்கவில்லை. கட்சித் தலைமைக்கு பொது வெளியில் கெடு விதிக்கலாமா?
தவெக தூய்மையான கட்சி இல்லை, கலப்படக் கட்சி. செங்கோட்டையன் போயிருக்கிறார். ஆதவ் அர்ஜுனா பல கட்சிகளில் இருந்து வந்தவர். இன்னொருவர் பாஜகவில் இருந்து நம் கட்சிக்கு வந்துவிட்டு இப்போது தவெகவுக்கு வந்திருக்கிறார். எங்கு வாய்ப்பு கிடைக்கும் என சுத்தும் கூட்டம் தான் விஜய் உடன் இருக்கிறது. நாளை விஜய்யையும் காலி செய்துவிட்டு வேறு பக்கம் செல்வார்கள். அப்படிப்பட்டவர்கள் தான் அங்கு இருக்கிறார்கள். விஜய் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்” எனக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 மாத காலமே உள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சார கூட்டங்களை நடத்தி வருகிறார். அண்மையில் செங்கோட்டையன் ஏற்பாட்டில் ஈரோடு மாவட்டத்தில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார் விஜய்.
இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசிய விஜய், “பெரியாரைச் சொல்லி கொள்ளையடிக்கிற இவர்கள் தான் அரசியல் எதிரி. கொள்கை எதிரி திமுக தான். எதிரிகள் யாரும் என்று சொல்லிவிட்டு களத்துக்கு வந்திருக்கிறோம் . திமுக ஒரு தீய சக்தி.. தவெக ஒரு தூய சக்தி. இந்த இரு கட்சிகளுக்கு இடையேதான் போட்டியே.” எனப் பேசி இருந்தார்.












Click it and Unblock the Notifications