தீர்ப்பை கேட்டதும்.. பெண் போலீஸ் கான்ஸ்டபிளை பிடித்தபடி அழுத குன்றத்தூர் அபிராமி
சென்னை: தனது இரு குழந்தைகளைக் கொன்ற வழக்கில் சாகும் வரை ஆயுள் தண்டனை அளிக்கப்பட்ட தீர்ப்பைக் கேட்டதும் நீதிமன்றத்திலேயே குன்றத்தூர் அபிராமி கதறி அழுதார். அவர் அருகில் இருந்த பெண் காவலர் பக்கம் திரும்பி அபிராமி கதறி அழுத நிலையில், கள்ளக்காதலன் மீனாட்சி சுந்தரமும் நீதிமன்ற வளாகத்திலேயே கண்ணீர்விட்டு அழுதார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த விஜய் மற்றும் அபிராமி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் விஜய் சென்னையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்துள்ளார். இதனால் சென்னை புறநகர்ப் பகுதியான குன்றத்தூரில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 7 வயதில் அஜய் என்ற மகனும், 4 வயதில் கார்னியா என்ற மகளும் இருந்தனர்.

2018ல் அபிராமி, டிக் டாக் உள்ளிட்ட செயலிகளில் சில வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இதன் மூலமாகப் பிரியாணி கடை வைத்திருந்த மீனாட்சி சுந்தரம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அபிராமி ஒரு கட்டத்தில் மீனாட்சி சுந்தரத்துடன் சில வாரங்கள் வெளியில் தங்கி இருக்கிறார். இதனையறிந்த குடும்பத்தினர், குழந்தைகளைக் காட்டி அழைத்து வந்துள்ளனர்.
ஆனாலும் மீனாட்சி சுந்தரத்துடன் வாழவே அவருக்கு விருப்பம் இருந்திருக்கிறது. இந்த நிலையில் மீண்டும் குழந்தைகளை காரணம் காட்டி நம்மை அழைத்து வந்துவிடுவார்களோ என்று எண்ணிய அபிராமி, குழந்தைகள் இருவருக்கும் பாலில் அதிகளவிலான தூக்க மாத்திரை கொடுத்துவிட்டு தலையணை வைத்து அமுக்கி கொலை செய்துள்ளார். இதன்பின் வீட்டில் இருந்து தப்பிய அபிராமி, நாகர்கோவிலுக்கு தப்பிச் சென்றுள்ளார்.
குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகள் மூலமாக மீனாட்சி சுந்தரத்தைக் கைது செய்துள்ளனர். அவர் மூலமாக அபிராமியை தொடர்பு கொண்டு அவர் எங்கிருக்கிறார் என்பதை போலீசார் தெரிந்து கொண்டுள்ளனர். இதன்பின் மீனாட்சி சுந்தரத்துடன் நாகர்கோயில் சென்ற போலீசார், அபிராமியை கைது செய்தனர்.
இதன்பின் வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், காஞ்சிபுரம் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செம்மல் இன்று தீர்ப்பு அளித்தார். அதில் குழந்தைகளைக் கொலை செய்த அபிராமி குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதேபோல் கொலை செய்ய ஐடியா கொடுத்த பிரியாணி கடை மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் தீர்ப்பு விவரம் வெளியான நிலையில், இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பைக் கேட்ட அபிராமி அங்கேயே கண்ணீர்விட்டு கதறி அழுதார். அபிராமியின் அருகில் இருந்த பெண் காவலர் பக்கம் முகத்தைத் திருப்பிக் கொண்டு அபிராமி கதறி அழுதார். அதேபோல் கள்ளக் காதலன் மீனாட்சி சுந்தரமும் அழத் தொடங்கினார். குன்றத்தூர் அபிராமியும், மீனாட்சி சுந்தரமும் நீதிமன்ற வளாகத்திலேயே கதறியபடி போலீசாரால் அழைத்து செல்லப்பட்டனர். இந்த காட்சிகள் சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications