திமுகவினரின் மூளையில் உதித்த திட்டம் போல சொல்றீங்களே.. மாநில கல்வி கொள்கை மீது எல்.முருகன் காட்டம்
சென்னை: "ஸ்டிக்கர் ஒட்டும் விளம்பர மாடல் திமுக அரசின் புதிய வெளியீடுதான் மாநில கல்விக் கொள்கை. ஏதோ திமுகவினரின் மூளையில் உதித்த அரிய திட்டம் போல கூறுகிறீர்களே." என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கையை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். அதில் 11 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு கிடையாது என்றும் 10 மற்றும் 12 வகுப்பிற்கு மட்டுமே பொதுத்தேர்வு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 3, 5, மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படக் கூடாது எனவும், தமிழ் மற்றும் ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்க்ப்பட்டுள்ளது.

மாநில கல்விக் கொள்கை குறித்து எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் மு.க.ஸ்டாலின் தினந்தோறும் நடத்தி வரும் விளம்பர மாடல் அரசியலில் இன்றைய வெளியீடுதான் மாநில கல்விக் கொள்கை. தமிழில் புதிது புதிதாக பெயர் வைத்து, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி காலத்தை ஓட்டி வரும் திமுக அரசின் அடுத்த வெளியீடாகவே இந்த மாநில கல்விக் கொள்கை வெளியாகி இருக்கிறது.
அரைத்த மாவையே அரைப்பது, ஏற்கெனவே இருப்பதை புதிய கோப்பு ஒன்றில் போட்டு வெளியிடுவது, இதையே தனது நிர்வாகத் தந்திரம் என நினைத்துக் கொண்டிருக்கும் முதல்வர், மாநில கல்விக் கொள்கை என்ற பெயரில் இதையே மீண்டும் செய்துள்ளார். தமிழகத்தில் ஏற்கெனவே இருந்து வரும் கல்விக் கொள்கையில் இருந்து என்ன மாற்றத்தை இவர் வெளியிட்டு இருக்கிறார்? 83 பக்கங்களில் வெளியாகி இருக்கும் இந்த மாநில கல்விக் கொள்கையை யாரும் புரிந்து கேள்வி கேட்டு விடக்கூடாது என்பதற்காகவே, புரியாத தமிழில் எழுதி இருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில் இருந்து மொழி பெயர்க்கப்பட்டு, இவர்கள் தமிழில் வெளியிட்டுள்ள மாநில கல்விக் கொள்கையே புரியவில்லை என்றால், பள்ளிக் கல்வித் துறை மீது திமுக அரசு காட்டும் ஆர்வம் அந்த லட்சணத்தில் இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கும் இருமொழிக் கொள்கை செயல்படுத்தப்படும் என்கிறார்கள். அப்படி என்றால் தனியார் பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கை கூறியபடி மூன்றாவது மொழி இருப்பதை திமுக அரசு ஏற்றுக் கொள்கிறதா? அரசுப் பள்ளி மாணவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? அவர்களுக்கு மட்டும் இந்த வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?
திமுகவினர் நடத்தும் பள்ளிகளிலும், முதல்வரின் சொந்தக் குடும்ப உறுப்பினர்கள் நடத்தும் பள்ளிகளிலும் தேசிய கல்விக் கொள்கைப்படி திமுகவினருக்கு மூன்று மொழி கற்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால், தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய, பட்டியலின, ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களுக்கு அந்த வாய்ப்பு கிடையாது. இதற்கு பெயர் தான் திமுகவின் சமூக நீதியா?
இந்த லட்சணத்தில், பள்ளிகளில் சமூக நீதிக் கல்வி கொண்டு வரப்போவதாக மாநில கல்விக் கொள்கையில் அறிவித்திருக்கிறார்கள். முதலில் திமுகவில் சமூக நீதி இருக்கிறதா? தந்தைக்கு பின்பு மகன் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றி வரும் போலி திராவிடம் பேசும் திமுகவினர், சமூக நீதியைப் பற்றி தமிழக மக்களுக்கு பாடம் எடுக்கின்றனர்.
ஆண்டாண்டு காலமாக தமிழகத்தில் இருந்து வந்த மொழி, கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை அழித்த திமுகவுக்கு சமூக நீதியை பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. தாய்மொழி வழிக் கல்வி கற்பிக்கப்படும் என்று மாநில கல்விக் கொள்கை கூறுவது வியப்பாக இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் தாய்மொழி வழிக் கல்வி தானே இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் காலம் தொட்டு, தமிழகத்தில் தாய்மொழி வழிக் கல்வி தானே இருக்கிறது. தேசிய கல்விக் கொள்கை அதனைத் தானே வலியுறுத்துகிறது.
ஏதோ திமுகவினரின் மூளையில் உதித்த அரிய திட்டம் போல கூறுகிறீர்களே. இது ஏற்கெனவே இருக்கும் கல்வி முறை தான். தமிழ் கலாச்சாரம், பண்பாடு பற்றிய வரலாற்று பாடங்கள் இடம்பெறும் என்ற அறிவிப்பும் திமுக அரசின் வெற்று நாடகமே. மாமன்னர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் பற்றி கூட பிரதமர் நரேந்திர மோடி பேசிய பிறகு தான், திமுகவினருக்கு கூட தெரிகிறது.
தமிழகத்தின் மாமன்னர்களின் நீண்டநெடிய வரலாற்றை பாட புத்தகங்களில் இருட்டடிப்பு செய்து வருவது யார்? தனது தந்தை மறைந்த முதல்வர் கருணாநிதியின் வீரபராக்கிரமங்களை விளக்குவது மட்டுமே போதும் என்று இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல்வருக்கு நான் சில கேள்விகளை முன் வைக்கிறேன். திராணியும் தெம்பும் இருந்தால் பதில் சொல்லட்டும்.
1) தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, தமிழ் எழுத்துகள் கூட சரி வர தெரியவில்லையே ஏன்?
2) தமிழ்நாட்டு மாணவர்கள் தமிழில் பேசவும், எழுதவும் சிரமப்படுவது ஏன்?
3) தமிழகப் பள்ளி மாணவர்கள் எண்களை அடையாளம் காணக்கூட சிரமப்படுவதாக ஆய்வுகள் கூறுகிறதே, அது ஏன்?
4) தமிழகத்தில் பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் இருப்பது ஏன்? மரத்தடியில் வகுப்புகள் நடைபெறுவது ஏன்?
5) பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏதும் இல்லாமல் மாணவ, மாணவியர் அவதிப்படுவது ஏன்?
6) பள்ளி உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி என்னாயிற்று?
7) தமிழக அரசு பள்ளிகளில் தரமில்லை எனக் கூறி, ஏழை கூலித் தொழிலாளி கூட தனது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது ஏன்?
8) ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில் ஆயிரக்கணக்கில் மாணவர் சேர்க்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வரிசையில் நின்று பெற்றோர்கள் குழந்தைகளை சேர்க்கிறார்களே ஏன்?
9) ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறதே அது ஏன்?
10) பல பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்களே வகுப்பெடுக்கும் அவலம் ஏன்?
11) அரசுப் பள்ளி மாணவர்கள் ஆய்வகப் பயிற்சிக்கு தனியார் பள்ளிகளுக்கு செல்வது ஏன்?
பள்ளிக் கல்வியை மேம்படுத்த மத்திய அரசு வழங்கி வரும் நிதியை பெற்றுக்கொண்டு, அதை மடைமாற்றும் போலி திராவிட மாடல் ஆட்சி, பள்ளி கல்வித் துறையை இயக்கும் லட்சணம் இதுதான். கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழக அரசு செலுத்த வேண்டிய கல்வி கட்டணத்தை செலுத்தவில்லை. மத்திய அரசு தனது பங்குக்கு நிதியை வழங்கிய பிறகும், தமிழக அரசு அதனை செலுத்தாத காரணத்தால் தனியார் பள்ளிகள் கட்டணத்தை செலுத்துமாறு பெற்றோர்களை நிர்பந்திப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் முதல்வருக்கு தெரியுமா?
நான் எழுப்பிய இந்த கேள்விகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலில் பதில் சொல்லட்டும். தமிழில் பெயர் வைத்தால் மட்டும் அது மக்கள் பயன்பெறும் திட்டமாகி விடாது. விளம்பரத்துக்காக தமிழில் திட்டங்களை அறிவித்து விட்டு, அடுத்த நாளே மூடு விழா நடத்தும் திமுக அரசு, மாநில கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் வெளியிட்டுள்ள அரைத்த மாவை அரைக்கும் இன்றைய விளம்பர நாடகத்தை தமிழக மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
ஆமா.. தமிழக சட்டசபை தொகுதிகள் 234 தான் என நிர்ணயிக்கப்பட்டது எப்படி? ஏன் 300 இல்லை? சுவாரசியம் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட்












Click it and Unblock the Notifications