"ஆமா.. மோடியிடம் நீட் தேர்வு பற்றி பேசினீங்களா".. எல்.முருகன் தந்த விளக்கத்தை பாருங்க..!
பிரதமர் மோடியை தமிழக 4 பாஜக எம்எல்ஏக்கள் சந்தித்து என்ன பேசினார்கள்?
சென்னை: பிரதமர் மோடியிடம் என்ன பேசினோம் என்று பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி தந்துள்ளார்.. அப்போது நீட் தேர்வு குறித்து மோடியிடம் பேசினீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கும், நீண்ட விளக்கத்தை முருகன் தந்துள்ளார்.
பிரதமர் மோடியை 4 தமிழக பாஜக எம்எல்ஏக்கள் இன்று சந்திக்க போகிறார்கள் என்ற செய்தி வந்ததுமே தமிழக அரசியல் பரபரப்பானது.
தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி, 4 பாஜக எம்எல்ஏக்களும் பிரதமரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெறுவார்கள் என்று சொல்லப்பட்டது.. மேலும், பாஜக எம்எல்ஏக்கள் செயல்பட வேண்டும் என்பது குறித்து பிரதமர் ஆலோசனை வழங்குவார் என்றும், சட்டப்பேரவை தேர்தலில் பாஜவின் பின்னடைவுக்கு என்ன காரணம் என்பது கேட்டறிவார் என்றார்கள்.

சந்திப்பு
அதேசமயம், சில தமிழக நலன்கள் குறித்து பிரதமரிடம் பாஜக எம்எல்ஏக்கள் எடுத்துரைக்க வாய்ப்பிருக்கதாகவும், குறிப்பாக, மத்திய அரசை எதிர்த்து சட்டமன்றத்தில் திமுக கொண்டு வரும் தீர்மானங்களுக்கு பாஜக நிலைப்பாடு என்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்றும் இந்த சந்திப்பு குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகின.

திமுக
ஒன்றியம், ஜெய்ஹிந்த், உட்பட விவகாரங்கள் தமிழ்நாட்டில் சர்ச்சையாக வெடித்து விவாதங்களை கிளப்பி விட்டு வருகிறது.. அதுமட்டுமல்லாமல் நீட் தேர்வு விவகாரத்தை தமிழக பாஜக இப்போது கையில் எடுத்துள்ளது.. திமுகவை சரமாரியாக விமர்சித்து கொண்டிருக்கிறது.. கோர்ட் வரை கேஸ் போட்டுள்ளது.. எனவே, நீட் தேர்வு குறித்தும் திமுகவின் நிலைப்பாட்டை அல்லது தமிழகத்துக்கு சாதகமான ஒரு முடிவு குறித்து பேசுவார்கள் என்றும் நம்பப்பட்டது.

எதிர்பார்ப்பு
இதுபோக, பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கோபமும் அதிகமாகி உள்ளதால், நிச்சயம் இதற்கும் ஒரு தீர்வு காணுவார்கள், அல்லது மக்களின் கோபத்தை தெரியப்படுத்தவாவது செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.. கடைசியில் இது எதுவுமே, மோடியிடம் பேசவில்லையாம்.. தமிழ்நாட்டில் ஆன்மிக சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்களாம்.

பிரதமர் மோடி
பிரதமரை சந்தித்துவிட்டு செய்தியாளர்களிடம் எல்.முருகன் பேசியுள்ளார்.. அப்போது பிரதமரிடம் தாங்கள் என்ன பேசினோம் என்று அவரே பேட்டி தந்துள்ளார்.. அதில், தமிழ்நாட்டில் ஆன்மிக சுற்றுலா தலங்களை மேம்படுத்த வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்தோம்... தென் தமிழகத்திலும் அதிகமான தொழில் வளர்ச்சியை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமரிடம் வைத்திருக்கிறோம். இன்றைய தமிழக அரசியலில் நடக்கின்ற தேச பிரிவினைவாதம் அல்லது தேசத்துக்கு எதிரான சில சக்திகளுடைய செயல்பாடுகள் இருப்பதை பிரதமர் மோடியின் கவனத்திற்கு கொண்டு சென்று இருக்கிறோம்.." என்றார்.

திட்டங்கள்
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏதேனும் அறிவுரை வழங்கினாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பாஜக உறுப்பினர்கள் தண்ணீர் சேமிப்பு பற்றியும் நதிநீர் இணைப்பு குறித்து பேசியபோது ஜல்சக்தி தொடர்பாக ஒரு இயக்கத்தை தொடங்கி நடத்த வேண்டும் என்று பிரதமர் கோரிக்கை வைத்தார்... அதேபோன்று மத்திய அரசாங்கத்தின் திட்டங்களையும் மக்களிடம் எடுத்து செல்லுங்கள் என்றும் அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்" என்றார்.

தீர்ப்பு
நீட் தேர்வு தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேசப்பட்டதா என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு, "நீட் தேர்வு தொடர்பாக பிரதமரிடம் நாங்கள் பேசவில்லை. ஆனால் நீட் தேர்வானது 2016 -ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.. நீட்தேர்வு சுப்ரீம்கோர்ட் தீர்ப்பின்படி நடந்து கொண்டிருக்கிறது. அதனால் தடை செய்ய முடியாது என்று தெரிந்தும் திமுக அதனை தேர்தல் அறிக்கையில் கொண்டு வந்துள்ளது..

கிராமப்புற மாணவர்கள்
நிறுத்த முடியாது என்று அவங்களுக்கே தெரியும். அதற்காகத்தான் ஒரு குழுவை அவர்கள் அமைத்திருக்கிறார்கள். அந்த குழு நீட் தேர்வினுடைய பாதகங்களை ஆராய்வதாக தெரிவித்திருக்கிறார்கள்... அதே நேரத்தில் நீட் தேர்வு காரணமாகவும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாகவும் 400க்கும் மேற்பட்ட அரசு பள்ளி கிராமப்புற மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைத்திருக்கிறது.

குழு
இது நீட் தேர்வின் சாதகங்கள்... ஆனால் அது குறித்து அவர்கள் ஆய்வு செய்யவில்லை. நீட் தேர்வின் பாதிப்புகள் பற்றி மட்டுமே ஆராய்வதற்கு அந்த குழு அமைக்கப்பட்டு இருக்கிறது... நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று அவர்களுக்கு தெரியும். தெரிந்துதான் இந்த ஒரு ஆணையத்தை அவர்கள் அமைத்திருக்கிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications