சீ இதான் பிரச்சினையே..மாநாட்டுக்கே தவிக்கும் தவெக? பழம் தின்று கொட்டை போட்ட திமுக-அதிமுக! என்னாச்சு?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் கடைசி வாரத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் அதிமுக - திமுக போல சீனியர்கள் இல்லாதது தான் தவெக-வுக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருக்கிறது என்கின்றனர் அக்கட்சியை சேர்ந்தவர்கள். திராவிட அரசியலை முன்னெடுக்கும் விஜய் ஏன் சீனியர்களுக்கு மதிப்பு கொடுப்பதில்லை என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.
புலி வருது கதையாக தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு எப்போது நடக்கும் என்ற தேதியை ஒரு வழியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார் நடிகரும் அக்கட்சியின் தலைவருமான விஜய். அக்டோபர் 27ஆம் தேதி விக்ரவாண்டியில் மாநாடு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதமே கட்சியின் பெயரை அறிவித்தாலும், அதற்குப் பிறகு கொடி அறிமுகம், பாடல் வெளியீடு முதல் மாநில மாநாடு என சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் செய்தி வந்த பிறகு தான் விஜய் அதனை அறிவிப்பதாக இருக்கிறது.
முதல் மாநில மாநாட்டை புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் கூட அல்லது லெட்டர் பேடு கட்சிகள் கூட சிறப்பாக செய்து வரும் நிலையில் மிகப்பெரும் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய்யால் ஏன் சாதிக்க முடியவில்லை என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மாநாடு நடத்தும் இடம். தேதி, அனுமதி பெறுவது என பல சிக்கல்கள் இருக்கிறது. பிரபல அரசியல் கட்சி ஒன்று விஜய்க்கு நெருக்கடி தருவதாக கூறப்பட்டாலும் பிற கட்சியில் இருக்கும் ஒருங்கிணைப்பு விஜய் கட்சியில் இல்லை என்று கூறுகின்றனர் பல ஆண்டுகளாய் அரசியலை உற்று நோக்கும் நிபுணர்கள்.
சில மூத்த அரசியல் கட்சி நிர்வாகிகளிடம் பேசியபோது,”விஜய் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்க விஷயம். அவரது கொள்கை என்ன என்பது தெரிந்த பின்பு தான், அவரது பாதை வெற்றி பெறுமா என்பது தெரியவரும். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திராவிட அரசியல் செய்பவர்கள் தான் நிலைக்க முடியும் என்பதே வரலாறு. இதனை வரலாறே பல சமயங்களில் நிரூபித்து இருக்கிறது. வித்தியாசமாக அரசியல் செய்கிறேன் எனக் கூற வந்த கமலஹாசன் கூட தற்போது திராவிட அரசியல் கட்சியில் தான் கூட்டணி சேர்ந்திருக்கிறார்.
இப்படியாக நூற்றுக்கணக்கான அரசியல் கட்சிகளை சொல்ல முடியும். அந்த வகையில் விஜய் தனது கொள்கைகளை அறிவித்த பின் தான் அவரது அரசியல் பாதை எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியும். அதே நேரத்தில் விஜய்யிடம் ஒரு தடுமாற்றம் இருப்பதை பார்க்க முடிகிறது. விஜய்க்கு பிறகு ஒரே ஒரு நிர்வாகி மட்டுமே அனைவருக்கும் தெரிந்த முகமாக இருக்கிறார். மாநாடு தொடர்பாகவும் அல்லது வேறு எந்த விவகாரங்களாக இருந்தாலும் புஸ்ஸி ஆனந்த் தான் பேசுகிறார். அவருக்கு பிறகு அல்லது அவருக்கு இணையாக கட்சியில் யார் இருக்கிறார்கள்? இணை நிர்வாகிகள், இளைஞரணி, மகளிரணி என யாரையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.
பொதுவாக அரசியல் கட்சி மாநாடு எனும் போது அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று தொண்டர்கள் நிர்வாகிகளை சந்திக்க வேண்டும். அவ்வாறு முடியவில்லை என்றாலும் மண்டல வாரியாக கூட நிர்வாகிகளை சந்தித்து மாநாட்டுக்கு ஆள் திரட்ட வேண்டும். அதிமுக திமுக போன்ற கட்சிகளில் எம்ஜிஆர் ஜெயலலிதா உள்ளிட்டோர் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள். அதற்குப் பிறகு மாநாட்டுக்காக ஒரு குழு அமைக்கப்படும்.
உதாரணத்திற்கு சமீபத்தில் நடந்த அதிமுக மாநாட்டுக்கு கூட ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜு, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட சீனியர்கள் அடங்கிய குழுவை அமைத்து எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டதோடு, மாநாட்டு பந்தல் அமைப்பு தொடங்கி உணவு ஏற்பாடு வரை தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.
அதேபோல் மற்றொரு அரசியல் கட்சியான திமுகவும் சமீபத்தில் இளைஞர் அணி மாநாட்டை நடத்தியது. அதிலும் சீனியர்கள் ஜூனியர்கள் என ஒரு குழு அமைக்கப்பட்டு மாநாட்டுக்கான பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் தேமுதிக, பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளும் பல மாநாடுகளை தமிழகம் முழுவதும் நடத்தி இருக்கின்றன, நடத்தப் போகின்றன.
ஆனால் ஒருவர் மட்டுமே அனைத்து பணிகளையும் தலையில் போட்டுக் கொண்டு செய்வதில்லை. பிரித்து வேலை பார்த்தால் தான் அந்த பணி முழுமையாக நிறைவடையும். அந்த வகையில் விஜய் ஒரு நிர்வாகியை மட்டுமே நம்பி இருப்பது போன்று தோன்றுகிறது. இதனால் அவர் சொல்வதை மட்டுமே கேட்கும் நிலையில் இருக்கிறது. இதனால் தான் பல பிரச்சினைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது. அணிகளை பிரித்து அதற்கு நிர்வாகிகளை நியமிப்பதை விட, அவர்களுக்கு பணிகளைக் பிரித்துக் கொடுத்து ஒருங்கிணைத்து செயல்பட்டால் தான் எந்தவித பணியையும் முடிக்க முடியும்.
அரசியல் அதற்கு விதிவிலக்கல்ல. திமுக, அதிமுக போன்ற பெரும் கட்சிகள் கூட தேர்தல் சமயங்களில் பேச்சுவார்த்தை குழு, வேட்பாளர் நியமனக்குழு, பிரச்சார குழு என பல குழுக்களை நியமித்து தான் செயல்படுகிறது. திராவிட அரசியல் பாணியை முன்னெடுக்க நினைக்கும் விஜய் அதே பாணியைத்தான் பின்பற்ற வேண்டும். ஒருவரை நம்பியோ அல்லது தான் மட்டுமே அனைத்து பணிகளையும் செய்து விடுவேன் என நினைப்பது தமிழக அரசியலைப் பொறுத்தவரை சாத்தியம் இல்லை” என்கின்றனர்.












Click it and Unblock the Notifications