Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நில அளவீடு டூ பத்திரப்பதிவு! ரியல் எஸ்டேட் செய்றவங்க திருடர்களா? ஜெயம் ரவி படத்துக்கு பெயிரா கண்டனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீபத்தில் திரைக்கு வந்துள்ள "காதலிக்க நேரமில்லை" என்கிற திரைப்படத்தில், ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் எல்லாம் திருடர்கள் என்பது போல பேசியுள்ள வசனத்திற்கு பெயிரா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.. ரியல் எஸ்டேட் தொழில்முனைவோர்களின் மனதை, புண்படுத்தக்கூடிய அந்த கீழ்த்தரமான வசனத்தை, படத்திலிருந்தே நீக்க வேண்டும் என்று திரைப்பட தணிக்கை குழுவினருக்கு பெயிரா கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த வாரம் தைத்திருநாள் (பொங்கல்) அன்று திரைக்கு வந்துள்ள காதலிக்க நேரமில்லை என்கிற திரைப்படத்தில், "ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் எல்லாம் திருடர்கள்" என்பது போல வசனம் இடம்பெற்றுள்ளதற்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

land measurement document registration real estate

படக்குழு: இது குறித்து தணிக்கை குழுவினருக்கும், காதலிக்க நேரமில்லை படக்குழுவினருக்கும் ஃபெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உள்ளதாவது:

"கடந்த பொங்கலன்று (14.01.2025) ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்துள்ள காதலிக்க நேரமில்லை என்கின்ற தமிழ் படத்தில் வரும் ஒரு காட்சியில் கதாநாயகியின் (நித்தியா மேனன்) தந்தை (பாடகர் மனோ) பேசும் ஒரு வசனமானது, "நம்ம ஊரில் திருடர்கள் எல்லாம் ஏன் காணாமல் போய்விட்டார்கள் தெரியுமா? அவர்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் தொழில் செய்ய வந்து விட்டார்கள்?" என வசனம் பேசும் காட்சி அமைந்துள்ளது.

இல்லக்கனவு: இந்த வசனமானது மனிதனின் அடிப்படை வாழ்வியலில் இன்றியமையாத ஒன்றான இல்லக்கனவினை நினைவாக்கிட கட்டமைக்கும் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்கள் மீது மோசமாக தரம் தாழ்த்தி கக்கிய வன்மமாகதான் உள்ளது. மேலும் இந்த வசனத்தில் ஒரு சில ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் என்று குறிப்பிட்டிருந்தால் கூட அது ஓரளவிற்கு ஏற்புடையதாக இருந்திருக்கும். ஆனால் அதைவிடுத்து சினிமா சுதந்திரம் என்கிற அடிப்படையில் ஒட்டுமொத்த ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களையும் விமர்சித்து இருப்பது என்பது எந்த வகையிலும் ஏற்று கொள்ள இயலாத வகையில் உள்ளது.

இந்த வசனமானது ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்களின் மனங்களை காயப்படுத்தியதோடு மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியில் அவர்களுக்கு இருக்கும் நற்பெயரையும் கெடுத்து, மன உளைச்சலை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் அவர்களிடையே ஒருவித கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

திரைப்படக்குழுவினர்: முதலில் காதலிக்க நேரமில்லை திரைபடக்குழுவினர் தெளிவாக ஒன்றினை புரிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டில் நீதிமன்றம் தொடங்கி மற்ற அனைத்து துறைகளிலும் நல்லவர்களும் இருப்பார்கள் மற்றும் தீயவர்களும் இருப்பார்கள். ஒரு சிலர் செய்யும் தவறுகளால் ஒரு துறையையே தவறாக பேசுவதென்பது ஏற்று கொள்ள கூடியதல்ல. மேலும் திரைத்துறையில் நடக்காத தவறுகளா? திரைத்துறையிலும் குற்ற பின்னணி உள்ள ஒரு சிலர் இருக்கதானே செய்கிறார்கள். இளைய தலைமுறையினரின் சீர்கேட்டிற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக திரைப்படங்கள் உள்ளன என்கின்ற கருத்து பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே நிலவத்தானே செய்கிறது.

எனவே திரைத்துறையை குறித்து கூடுதலாக விவாதிக்கத் தொடங்கினால் அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதனைக் குறித்து படக்குழுவினர் அறியாதது அல்ல. ஒரு சிலர் புரிதல் இல்லாமல் செய்யும் தவறுக்காக ஒட்டு மொத்த திரைத் துறையையும் குறித்து அவதூறுவாக பேசுவது எனபது நாகரிகமல்ல. அது போலத்தான் ரியல் எஸ்டேட் துறையும்.

பெரிய தாக்கம்: இத்திரைப்படத்தில் வரும் மேற்கூறிய வசனமானது இடம் பெறுவது சில நொடிகள் தானே, இதனால் என்ன பெரிய தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தி விட போகிறது என எளிதில் கடந்து சென்று விட முடியாது. ஏனெனில் திரைப்படங்கள் மக்களின் வாழ்வில் இரண்டற கலந்துள்ளது. மேலும் தேசம், சாதி, மதம், இனம், மொழி, அரசியல் கடந்து பாலின வேறுபாடில்லாமல் பெரியவர் முதல் குழந்தைகள் என எவ்வித பாகுபாடும் இல்லாமல் மக்களிடையே இரண்டற கலந்து மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அனைவரையும் சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கக்கூடிய வலிமை திரைப்படங்களுக்கு மட்டுமே உண்டு.

கடந்த காலங்களில் திரையிடப்பட்ட சில திரைப்படங்களில் பேசப்பட்ட வசனங்கள் வரலாற்றையே புரட்டி போட்டிருக்கின்றன. ஏன் குறிப்பாக திரைப்படங்களில் பல நிலைகளில் கோலோச்சியவர்களும், கதாநாயகர்களாக நடித்தவர்களும் சில நாடுகளில் அதிபர்களாகவும், அமைச்சர்களாகவும், இந்தியாவில் பலர் மத்திய அமைச்சரவையிலும் மற்றும் மாநிலங்களில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளில் பொறுப்பு வகித்தும், தற்பொழுதும் முக்கிய பொறுப்புகளில் இருந்தும் வருகிறார்கள்.

குறிப்பாக தமிழகத்திற்கு திரைத்துறையானது ஐந்து முதலமைச்சர்கள் மற்றும் தற்பொழுது பொறுப்பில் உள்ள முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரையும் கொடுத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் பல அரசியல் மற்றும் சமூக மாற்றங்களுக்கு திரைப்படங்களின் வாயிலாக பேசப்பட்ட வசனங்கள் மிக முக்கிய காரணியாகவும், காலத்தால் அழியாது நிலைத்து நிற்பவையாகவும் திகழ்கிறது என்றால் அதுமிகையாகாது.

வசனம்: எனவே திரைப்படங்களில் இடம் பெறும் வசனங்களை எளிதில் கடந்து போகவோ அல்லது மறந்து போகவோ முடியாது. ரியல் எஸ்டேட் துறை குறித்த எந்த ஒரு அறிவும், புரிதலும், தெளிவும் இல்லாமல் இப்படி ஒரு வசனத்தை படத்தில் காட்சிபடுத்தியிருப்பது என்பதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் உங்களது கண்ணோட்டத்தில் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் தொழில் குறித்து வைத்துள்ள தவறான புரிதலை சீர்படுத்திக் கொள்ளும் வகையில் மிகச் சுருக்கமாக இந்த பதிவினை செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

தமிழ்நாடு முழுவதும் இத்தொழிலில் ஆயிரக்கணக்கானவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நூற்றுக்கும் மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்களையும் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சார்பு தொழிலையும் கொண்டு பெருமளவில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இத்துறையானது மிக முக்கிய பங்காற்றி வருகிறது. அது மட்டுமல்லாமல் மிகப்பெரிய வர்த்தக சந்தையையும் கொண்டுள்ளது.

வருவாய்: மேலும் இந்த தொழிலின் மூலம் தமிழக அரசிற்கு ஆண்டிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஒரு திரைப்படம் எடுப்பது என்பது எவ்வளவு பெரிய சவாலோ அதைவிட பல மடங்கு பெரியது ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்கள் பல வகையிலும் எதிர்கொள்கின்ற சவால்கள்.

ரியல் எஸ்டேட் தொழில் செய்வது என்பது அத்தனை எளிதானதல்ல. தமிழக அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சட்ட திட்டங்களின்படி செயல்பட்டு பல தரப்பிலிருந்து வரும் சவால்களையும் பொருளாதார சிக்கல்களையும் நெருக்கடிகளையும் நித்தம் நித்தம் எதிர்கொண்டு வரும் தொழிலாகும்.

இல்லக்கனவுகள்: ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் இன்றியமையாதவைகள் உண்ண உணவு, உடுக்க உடை மற்றும் இருக்க இருப்பிடமாகும். அதுபோல் ஒவ்வொரு மனிதனுக்குமான கனவு இலட்சியம் தனக்கென சொந்த வீடு என்பதாகும். மக்களின் இல்லக்கனவுகளை நினைவாக்கி அவர்கள் தம் குடும்பத்தினருடன் நிம்மதியாக வாழ்வாங்கு வாழ வழிவகை செய்யும் உன்னதமான தொழிலினை மேற்கொள்பவர்கள் தான் ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்கள்.

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு அடிப்படை ஆதாரம் நிலம். அதற்கான சரியான பகுதியில் நிலத்தை தேர்வு செய்து, நிலத்தின் உரிமையாளருக்கு அதற்குரிய தொகையினை கொடுத்து தமிழக அரசு நிர்ணயித்துள்ள உரிய கட்டணத்தை செலுத்தி முறையாக பத்திர பதிவு செய்ய வேண்டும்.

அளவையர்: பிறகு அந்த நிலத்தை நில அளவையர் கொண்டு அளந்து சீர் செய்து சமன்படுத்திட வேண்டும். அதற்கடுத்து வீடு, மனை, லே-அவுட் உருவாக்குவதற்கு (CMDA,DTCP&TNRERA) வகுத்துள்ள சட்ட திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி முறைப்படுத்தி அதற்குரிய கட்டணத்தை செலுத்தி அனுமதி கிடைக்க பெற்ற பின்பு முறையான அபிவிருத்திகளை மேற்கொண்ட பிறகு தான் வீடு மனை போன்றவற்றை விற்பனை செய்ய முடியும்.

சில நேரங்களில் அனுமதி கிடைக்க தாமதம் ஏற்பட்டு குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு பதிவு செய்து கொடுக்க முடியாமல் போகும் பட்சத்தில் அபிவிருத்தியாளர்களின் முதலீடு, அதற்கான வட்டி, உரிமையாளர் மற்றும் முதலீட்டாளர்களின் அழுத்தம், சந்தையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களினால் அழுத்தம் போன்ற பல காரணிகளால் பெருமளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டு ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து கடினமான சூழ்நிலைக்கு தள்ளபடுவதும் உண்டு.

வாழ்வாதாரம்: இது போன்ற நிகழ்வுகள் திரைத்துறையிலும் நடந்தேறி இதன் காரணமாக திரைத்துறையைச் சேர்ந்த பலர் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வறுமையின் பிடியில் மன வேதனைகளோடு வாழ்க்கையை கடத்தியும் வருகிறார்கள்.
லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பினை தந்துவரும், ரியல் எஸ்டேட் தொழில்முனைவோர்களின் மனதை ஈட்டியால் குத்தக்கூடிய "திருடர்கள்" என்ற கீழ்த்தரமான வார்த்தையை, சென்சார் குழுவினர் அனுமதித்துள்ளது அதிர்ச்சியையும், வேதனையையும் தந்து வருகிறது. இதனால் ரியல் எஸ்டேட் தரப்பினர் மீது பொதுமக்களுக்கு நம்பகத்தன்மையும் குறைய வாய்ப்புள்ளது

கோரிக்கை: ஆகவே தணிக்கை குழுவினரும், படக்குழுவினரும், ரியல் எஸ்டேட் தொழில் முனைவோர்களின் உண்மை தன்மையை உணர்ந்து, காதலிக்க நேரமில்லை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள மேற்கண்ட சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க வேண்டும் என்றும், இனிவரும் திரைப்படங்களிலும் ரியல் எஸ்டேட் துறை உள்ளிட்ட எந்த ஒரு துறையினையும் குறித்து பொத்தாம் பொதுவாக தவறாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெறா வண்ணம் கவனத்துடன் செயல்படுவது அவசியம் என்றும் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்" என்று அக்கடிதத்தில் டாக்டர் ஹென்றி கேட்டுக் கொண்டுள்ளார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+