பத்திரப்பதிவில் அடுத்த அதிரடி.. "செக் பண்ணுங்க".. சார் பதிவாளர்களுக்கு போன உத்தரவு.. இனி கவலையில்லை
சென்னை: பதிவுத்துறையானது, அனைத்து சார் பதிவாளர்களுக்கும் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து சுற்றறிக்கை ஒன்றும் அனுப்பப்பட்டுள்ளது.. என்ன அது?
தமிழகத்தில், 575 சார் --பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றை கண்காணிக்க, 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதில் சார் - பதிவாளர் அலுவலகங்களின் எல்லைகள், கடந்த பல ஆண்டுகளாக வரையறை செய்யப்படாமல் இருந்தது.. குறிப்பாக, வருவாய் துறையின் வட்டம் என்று சொல்லப்படும் தாலுகா எல்லைகளும், சார் பதிவக எல்லைகளும் முரண்பட்டன.

குழப்பங்கள்: ஒரு சார் - பதிவக எல்லையில், ஒன்றுக்கு மேற்பட்ட தாலுகாக்கள் இருக்கும் நிலை உள்ளதால், பட்டா மாறுதல் பணிகளில், பல்வேறு குழப்பங்களும் ஏற்பட்டன.. எனவேதான், ஒரு சார் - பதிவாளர் அலுவலக எல்லைக்குள் வரும் அனைத்து கிராமங்களும், ஒரே தாலுகாவை சேர்ந்ததாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று ஏற்கனவே பதிவுத்துறை தெரிவித்திருந்தது.
மொத்தமுள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்களில், ஒவ்வொரு சார் - பதிவாளர் அலுவலக எல்லையும், தாலுகா எல்லையும் வேறுபட்டு இருப்பதால், தாலுகா எல்லைக்கு ஏற்ப, சார் - பதிவாளர் அலுவலக எல்லைக்குள், அனைத்து கிராமங்களும் இடம்பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதற்காக, சார் - பதிவாளர் அலுவலக வாரியாக பட்டியல்கள் பெறப்பட்டு, ஆய்விலும் உள்ளது.
பதிவுத்துறை: இப்படிப்பட்ட சூழலில், அடுத்த அதிரடியை பதிவுத்துறை கையில் எடுத்துள்ளது.. அதன்படி, தாலுகா வாரியாக கிராமங்கள் குறித்த விபரங்களை, இன்று ஒரே நாளில் சரிபார்த்து அறிக்கை அனுப்பவேண்டும் என்று சார் பதிவாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, சார் - பதிவாளர்களுக்கு பதிவுத்துறை பிறப்பித்துள்ள உத்தரவில் உள்ளதாவது:
"சார் - பதிவாளர்கள் தங்கள் அலுவலக எல்லைக்குள் உள்ள அனைத்து கிராமங்களின் விபரங்கள், தாலுகா வரைபட விபரங்கள், தாலுகா வரைபட விபரங்களுடன் ஒத்துப்போகிறதா என்று சரிபார்க்க வேண்டும். இந்த விபரங்களை, இன்று ஒரே நாளில் சரிபார்த்து, தலைமை அலுவலகத்துக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளது.
பெருத்த நம்பிக்கை: கிராம விபரங்கள் குறித்த அறிக்கையை பதிவுத்துறை கேட்டுள்ளதால், விரைவில் சார் பதிவாளர் அலுவலக அனைத்து கிராமங்களும் இடம்பெற்றுவிடும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications