24 மணி நேரத்தில்.. தமிழக அரசியலே ஆடிப்போச்சே.. ஒரே நேரத்தில் ஸ்டன் ஆன திமுக, அதிமுக, காங்கிரஸ், தவெக
சென்னை: தமிழ்நாடு அரசியலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்து உள்ளன. ஒரே நேரத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தமிழக வெற்றிக்கழகம் என்று பல கட்சிகளை ஸ்டன் ஆக வைக்கும் சம்பவங்கள் நடந்துள்ளன.

திமுக - காங்கிரஸ் மோதல்
திமுக எம்பி திருச்சி சிவா நிகழ்ச்சி ஒன்றில் பேசியது பெரிய அளவில் சர்ச்சையானது, கலைஞர் கருணாநிதி என்னை காரில் அழைத்து செல்வார். எனது 23, 24 வயதில் என்னிடம் அவர் கூறுவார். சில பேர் இதை நினைப்பாங்க, என்ன சின்ன பையனிடம் போய் சொல்கிறார் என்று.. ஆனால் அவருக்கு தெரியும்.. இதை போய் நான் கூட்டத்தில் பேசுவேன் என்று.. மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பேன் என்று தெரியும். அதனால் என்னிடம் நிறைய பேசுவார். அப்போது ஒரு நாள் காமராஜர் வந்து தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்று தமிழ்நாடு முழுக்க கண்டன கூட்டம் போடுறார். காமராஜருக்கு ஏசி இல்லையென்றால் அலர்ஜி வந்துவிடும். அதற்காக நான், அவர் தங்குகிற விடுதிகளில் எல்லாம் ஏசி வசதி செய்ய உத்தரவு கொடுத்தேன். ஆனால் என்னை எதிர்த்து தான் கூட்டம் போடுகிறார் என்று சொன்னார்.
இதேபோல், காமராஜரை அவசர காலத்தில் கைது செய்ய துடித்தனர். ஆனால் அது முடியவில்லை. அப்போது அவர் ஒரு நிகழ்ச்சிக்காக திருப்பதி போக இருந்தார். உடனே திமுகவின் தலைமையகத்தில் இருந்து அவருக்கு போன் சென்றது. தயவு செய்து நீங்க திருப்பதி போக வேண்டாம் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் அதற்கு நான் திமுக காரன் இல்லை. காங்கிரஸ்.. என்னை தடுக்க நீங்க யார்.. என்று குறிப்பிட்டார்.
இதற்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில், காமராஜர் நேர்மைக்கும், நிர்வாகத் திறமைக்கும் மட்டுமல்ல எளிமைக்கும் பெயர்போனவர் என்பதை உலகறியும். தமிழ்நாட்டில் காமராஜர் கால்தடம் படியாத இடம் ஏதாவது இருக்கிறதா என்று ஆச்சர்யப்படக்கூடிய அளவில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தவர் காமராஜர். அந்த மூலை முடுக்குகளில் எல்லாம் ஏசி அறைகளும் , ஐந்து நட்சத்திர விடுதிகளும் இல்லை. ஒரு முதலமைச்சராக அரசினர் விடுதியில் தங்கி வெப்பம் அதிகமாக இருந்தால் மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். தனக்கு காவலாக நின்றவர்களைக் கூட உறங்கச் சொல்லிவிட்டு தனித்தே உறங்கிப் பழக்கப்பட்ட எளிமையாளர் .
அவர் ஏசி அறை இல்லாமல் உறங்கமாட்டார் என்று சகோதரர் திருச்சி சிவா சொல்வது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. எமது தலைவர் காமராஜருக்கு எதிராக கடந்த காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. காமராஜர் வாழ்ந்த வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது என்று விமர்சனம் வைத்துள்ளார். இது காங்கிரஸ் திமுக இடையிலான மோதலாக மாறி உள்ளது. கிட்டத்தட்ட கூட்டணிக்கு உள்ளேயே மிகப்பெரிய பூதாகரமான மோதலாக வெடித்து உள்ளது.
எடப்பாடி போட்ட புதிர்
காட்டுமன்னார் கோவில் பகுதியில் எடப்பாடி பழனிசாமி நேற்று பேசுகையில், விழுப்புரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு.. அனுமதி அளிக்கப்படுவதில்லை.. திருச்சியில் விசிக மாநாட்டிற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறார்கள்.. விசிகவின் கொடிக்கம்பம் நடுவதைத் தடுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்த கூட்டணியில் இருக்க வேண்டும்?
இந்த அவமானப்பட்டுமா திமுக உடனான கூட்டணியில் தொடர வேண்டும்? சிந்தித்து பாருங்கள்.. அதிமுகவைப் பொறுத்தவரை எங்கள் கூட்டணியில் சேரும் கட்சிகளுக்கு ரத்தன கம்பளம் விரித்து வரவேற்போம். கூட்டணி என்பது சூழ்நிலைக்கு தக்கவாறு அமைப்பது சரியாக இருக்கும்.
அடுத்து பாருங்க.. ஒரு பெரிய கட்சி எங்க கூட்டணிக்கு வரப்போகிறது.. பிரம்மாண்டமான கட்சி.. எதிர்பார்த்துக்கொண்டு இருங்கள்.. வருவதை பாருங்கள்.. ஸ்டாலின் அவர்களே.. பிரமாதமான கட்சி எங்கள் கூட்டணிக்கு வரப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.. நாங்கள் 234 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெல்வோம். அதோடு தனித்து ஆட்சி அமைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். எடப்பாடி பழனிசாமி கூறிய கட்சி எது என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் பாஜக கூட்டணிக்கு காங்கிரஸ் வராது. விசிக, சிபிஎம்க்கு இப்போதுதான் எடப்பாடி அழைப்பே விடுத்துள்ளார். அதனால் அவர்கள் இல்லை. அமமுக கூட்டணியில் உள்ளது. இது போக நாம் தமிழர் - தமிழக வெற்றிக் கழகம் மட்டுமே உள்ளது. இரண்டில் எந்த கட்சி கூட்டணி வருகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜகவிற்கு ஷாக் - தவெக வருதா?
இன்னொரு பக்கம் அதிமுக - விஜய் கூட்டணி உருவாகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஒரு பக்கம் பாஜக - அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணையப் போவதாக தகவல்கள் வர தொடங்கி இருந்தன. இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்து வந்ததாக, ஆகஸ்ட் இறுதிக்குள் இதில் முடிவெடுக்க டெல்லி உத்தரவிட்டு உள்ளதாம். அதாவது ஆகஸ்ட் இறுதிக்குள் ஆம் - இல்லை என்று முடிவெடுக்க வேண்டும். ஏனென்றால் அப்போதுதான் களப்பணிகளை செய்ய முடியும் என்பதால் இந்த நாள் குறிக்கப்பட்டு உள்ளதாம்.
சமீபத்தில் எடப்பாடி - பாஜக நயினார் நாகேந்திரன் ஆகியோர் ஆலோசனை செய்தனர். அதில், திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காக ஒன்றிணைந்திருக்கிறோம். ஒத்த சிந்தனையுள்ளவர்கள் ஓரணியில் ஒன்றாகியிருக்கிறோம் என்பதை நாம் இணைந்து மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லவேண்டும். இருக்கிற 10 மாதங்களில் இதனை நாம் அழுத்தமாக செய்ய வேண்டும்.
விஜய் கட்சியை கூட்டணிக்குள் கொண்டு வர உங்கள் மேலிடம் எடுக்கும் முயற்சி எந்த அளவில் இருக்கிறது? என்று எடப்பாடி கேட்க, பாஜகவுக்கு தொடர்பில்லாத நபர்கள் மூலம் சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. அந்த முயற்சி அடுத்தக் கட்டத்துக்கு நகரவில்லை. தற்போது விஜய் பற்றி யோசிக்காமல் இருக்கின்றனர். நிச்சயம் அவரை நம் கூட்டணிக்குள் எங்கள் தேசிய தலைவர்கள் கொண்டு வந்துவிடுவார்கள் என நயினார் பகிர்ந்திருக்கிறார்.. அதோடு விஜய்க்கு 50 தொகுதிகளுக்கு மேல் தரப்படாதும் என்றெல்லாம் பேசி இருக்கிறார்கள்.
ஆனால் இப்போது பாஜகவிற்கு விஜய் நோ சொல்லி உள்ளார். எனவே பாஜக லிஸ்டில் இல்லை. இதனால் ஒருவேளை பாஜக இல்லாத.. அதிமுக - விஜய் என்ற புதிய கூட்டணி உருவாகுமோ என்ற கேள்வி எழாமல் இல்லை. ஏனென்றால் அண்ணா, பெரியாரை விமர்சனம் செய்தது, முருகர் மாநாடு என்று பல விஷயங்களில் பாஜக - அதிமுக இடையே கருத்து வேறுபாடு உள்ளது. இதனால் அதிமுக பாஜக கூட்டணியை உடைத்து தமிழக வெற்றிக் கழகம் உடன் கூட்டணி வைத்தாலும் வியப்பில்லை. ஆனால் இங்குதான் வேறு ஒரு சிக்கல் எழுந்துள்ளது. அதே சமயம் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் எடுத்துள்ள முடிவு அதிமுகவிற்கு சிக்கலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் எடப்பாடி போடும் இந்த புதிர் காரணமாக எடப்பாடி பழனிசாமி - விஜய் கூட்டணி உருவாகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications