பரதன் ஓபிஎஸ்.. ஈபிஎஸ் ராமனாக மாறுவாரா? “உங்களுக்காக நானே பேசுறேன்”.. தானாக முன்வந்த பூங்குன்றன்!
எடப்பாடி பழனிசாமி ராமனாக மாறுவாரா? பரதனான ஓ.பன்னீர்செல்வத்தை அரவணைப்பாரா? என பூங்குன்றன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வெற்றி பெற ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஜெயலலிதாவின் உதவியாளராகப் பணியாற்றிய பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இரு தரப்பும் போட்டியிடுவதாக அறிவித்திருந்த நிலையில், ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் நேற்று தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெற்ற படிவங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் தென்னரசு
அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களில் 92 சதவீதம் பேர், ஈபிஎஸ் அணியைச் சேர்ந்த தென்னரசுவை ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளராக வழிமொழிந்துள்ளனர். இதன் மூலம், தென்னரசுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கவுள்ளது. இந்நிலையில், இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார் அதிமுக வேட்பாளர் தென்னரசு. தங்கள் அணி வேட்பாளரை திரும்பப் பெற்ற ஓபிஎஸ், தென்னரசுவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வாரா எனும் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், ஓபிஎஸ், தென்னரசுவுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

பரதன் ஓபிஎஸ்
இதுகுறித்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவியாளராகப் பணியாற்றிய பூங்குன்றன் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "ஓபிஎஸ் மீண்டும் பரதன் ஆகிவிட்டாரா? அப்படி என்றால் இபிஎஸ் ராமன் ஆகிவிட்டாரா? விட்டுக்கொடுத்து விட்டுக் கொடுத்து மீண்டும் மீண்டும் தன்னை பரதன் என்று நிரூபித்து கொண்டிருக்கிற ஓபிஎஸ் அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். என்னுடைய ஆசை, வேட்பாளர் தென்னரசுவுக்கு ஓபிஎஸ் பணியாற்ற வேண்டும்.

தென்னரசு - உண்மை விசுவாசி
தென்னரசு ஜெயலலிதாவிற்கு பிடித்தவர். அவரது அன்பால் எல்லோரையும் கவர்ந்தவர். தலைமை மீது மிகுந்த விசுவாசம் கொண்டவர். தொண்டராக பணியாற்றி படிப்படியாக ஏறி ஒரு நல்ல நிலைக்கு வந்தவர். பல போராட்டங்களில் துவண்டு விடாமல் வெற்றி கண்டவர். அந்த கழக விசுவாசிக்கு எல்லோரும் ஒன்று கூடி உழைக்க வேண்டும். இபிஎஸ்ஸும், ஓபிஎஸ் அவர்களுக்குரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்பதே இன்றைய தேவை. இபிஎஸ் ராமனாக மாறுவாரா? பரதனை அரவணைப்பாரா?

ஈபிஎஸ் ராமனாக மாறுவாரா
எவ்வளவோ விட்டுக் கொடுத்த ஓபிஎஸ், நீங்கள் எதை செய்தாலும் ஏற்றுக்கொண்டு வந்தார். உங்களது ஆசை என்னவென்று சொன்னால் ஓபிஎஸ்ஸிடம் பேசுவதற்கு நான் தயார். கழக நன்மைக்காக அவர் எதையும் விட்டுக் கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. அவர்களுக்குரிய அங்கீகாரத்தை கொடுத்து நீங்கள் ஒன்றுபட்டால், ஓட்டுக்கள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும் என்பதே எல்லோருடைய நம்பிக்கை." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications