பஞ்சாயத்து பேசும் போலீஸ்! பணி நேரத்தில் மது! கிரிமினல்களிடமே அடி வாங்கும் நிலை! சட்டம் ஒழுங்கு எங்கே
சென்னை: அண்ணா திமுக ஆட்சி காலங்களில் தமிழ்நாடு காவல்துறையின் ஈரல் அழுகி கெட்டுவிட்டது என்கிற கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் இந்நாளைய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின். தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 'திராவிட' மாடல் திமுக ஆட்சியிலும் காவல்துறையின் ஈரல் அழுகி கெட்டுதான் கிடக்கிறது; காவல்துறைக்கு ஆபரேஷனே இன்னமும் நடத்தப்படவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில்தான் முதல்வர் ஸ்டாலின் கீழ் இருக்கும் காவல்துறையின் செயல்பாடுகள் இருக்கிறது என்பது வேதனையானது.
தமிழ்நாட்டில் 2026 சட்டசபை தேர்தலில் பிரதான பேசுபொருளாக, தற்போதைய ஆளும் திராவிட மாடல் அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் அஸ்திரமாக இருக்கப் போவது சட்டம் ஒழுங்கு சீர்கேடுதான். ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிற, உலுக்குகிற கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.

தமிழ்நாடு போலீசார் செய்து வரும் 'அதிகார சேட்டைகள்'தான், கட்டப் பஞ்சாயத்துகள்தான் போலீஸை கண்டாலே பொதுமக்களுக்கு எந்த ஒரு பயமும் இல்லை என்பதாக கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறவும் காரணமாக இருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
திமுக ஆட்சியில் அமர்ந்த நாள் முதலே போலீசாரின் அதிகார சேட்டைகள் உக்கிரமாகிவிட்டன என்பதை 2021-ம் ஆண்டு ஜூன் 6-ந் தேதி சேலம் முருகேசன் போலீசாரால் கொலை செய்யப்பட்டதில் இருந்து புரிந்து கொள்ள முடியும். கடந்த சில நாட்களாக போலீசாரின் 'நிஜமுகம்' ' ஈரல் கெட்டுப் போன முகம்' பல்வேறு நிகழ்வுகளில் அம்பலமாகிக் கொண்டுதான் இருக்கிறது.
உதாரணமாக, சென்னை, அண்ணாநகர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. இதற்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளது. இது சாதாரணமான உத்தரவு என்பதாக கடக்க முடியாது. ஏனெனில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த போலீசார் வழக்கை உடனே பதிவு செய்யவில்லை. சிறுமியின் தாயாரை அடித்து காவல் நிலையத்தில் சித்ரவதை செய்தனர்; சிறுமியின் தந்தையின் கால்களை உடைத்து காவல்நிலையத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்தனர். ஏனெனில் சிறுமியை பலாத்காரம் செய்த குற்றவாளிகளுடன் சமரசமாக போக மறுத்தனர் பெற்றோர் என்பதால்..
பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுத் தராமல் குற்றவாளிகளுக்கு கூட்டாளிகளாக தமிழ்நாடு போலீஸ் செயல்பட்டதால் இப்போது உச்சநீதிமன்றம் வரை இந்த வழக்கு போயிருக்கிறது.
இந்த விஷயத்தில், அரசு மிக கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதாலோ என்னவோ அண்ணா நகர் பாணியிலேயே இன்னொரு பலாத்கார சம்பவத்தில் 'பஞ்சாயத்து' பேசியுள்ளது சென்னை போலீஸ். இந்த சம்பவம் சென்னை திருவொற்றியூரில் நடந்தது. குற்றவாளிகள் வேறு யாரும் அல்ல.. சிறுமியின் தந்தையும் அண்ணன் முறையிலான உறவு பையனும்தான்... இருவரும் மன்னிக்க சொல்கிறார்களாம்.. போலீசார் பஞ்சாயத்து பேசுகிறார்களாம்..
போலீசார் வழக்கும் பதிவு செய்வது இல்லை.. பஞ்சாயத்து செய்கிறார்கள்.. கொலையை செய்துவிட்டு கோர்ட்டில் சரணடைந்துவிட்டால் போலீசும் ஒன்றும் செய்யாது என்கிற கள நிலைமையை உருவாக்கி வைத்திருக்கிறது தமிழ்நாடு போலீசார். இதனைத்தான் ஓசூர் வழக்கறிஞர் கண்ணன் சம்பவம் வெளிப்படுத்தியது. ஓசூர் நீதிமன்ற வளாகத்தில் கண்ணன் என்ற வழக்கறிஞர் அரிவாளால் சரமாரியாக வெட்டப்படுகிறார்; அந்த வளாகத்தில் ஒரு போலீசார் கூட இல்லை போல.. ஒருவர் கூட தடுக்கவில்லை. ஆற அமர ஒரு மனித உயிரை வெட்டிய குற்றவாளி கூலாக கோர்ட்டில் சரணடைந்துவிட்டு ஜெயிலுக்குப் போய்விட்டார்.
பொதுவாக தமிழ்நாடு போலீசார் பாலியல் வழக்குகளில் பஞ்சாயத்து பேசுவதை சென்னை சம்பவங்கள் மட்டுமல்ல பல பகுதி வழக்குகளும் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. தஞ்சாவூரில் 4 பேரால் இளம் பெண் ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்; புகார் கொடுத்தால் வாங்கி பதிவு செய்து குற்றவாளிகளை வேட்டையாட வேண்டிய போலீசார், புகாரை வாங்க மறுத்துள்ளார்; அரசு மருத்துவர் சிகிச்சை தர மறுத்துள்ளார் என நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட இளம்பெண் கதறி இருக்கிறார். இதனால் புகாரை வாங்க மறுத்த பெண் போலீஸ் அதிகாரி, ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
இதேபோல கைதியை நீதிமன்றத்துக்கு அழைத்துவிட்டு சிறைக்கு அழைத்துப் போகும் வழியில் போலீஸ் வாகனத்திலேயே காவலர் ஒருவர் மது அருந்திய வீடியோவும் அண்மையில் வெளியானது.
இப்படி போலீசார் தங்களது அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதால் போலீசாரை கண்டாலே பொதுமக்கள் அச்சப்படுவதே இல்லை. அதுவும் 'குடிமகன்கள்' தங்கள் பங்கு சேட்டையை காட்டுகிற சம்பவங்கள் பல்வேறு இடங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது; சமூக வலைதளங்களில் வீடியோக்களாகவும் பகிரப்படுகிறது.
மெரினா கடற்கரையில் ஒரு திருமணம் தாண்டிய காதல் ஜோடி, போலீசாரை சல்லிக்காசாக மதிக்காமல் பேசியது. அந்த அளவுக்கு போலீஸ் மீது பயம் இல்லாமல் போனது. இதைவிட உச்சமாக, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் விசாரணைக்கு அழைக்கச் சென்ற 2 போலீசாரை கம்பால் அடித்தும், கன்னத்தில் ஓங்கி அறையும், தூக்கிப் போட்டு மிதித்தும் 9 பேர் கொண்ட கும்பல் அசிங்கப்படுத்தியது. சில இடங்களில் போலீசாரை மக்களே சிறைபிடிப்பதும் நடக்கிறது. படிப்பறிவில்லாத சில மாநிலங்களில் மட்டுமே கேள்விப்பட்ட இதுபோன்ற சம்பவங்கள், முதல்வர் ஸ்டாலினின் கீழ் இயங்கும் தமிழ்நாடு போலீசாருக்கு அரங்கேறியதெல்லாம், நினைத்து பார்க்கவே முடியாத கசப்பு கனவுகள். ஸ்காட்லாந்து யார்டுக்கு நிகரான தமிழக போலீசார் இப்போது வழிகாட்டுதல் இல்லாத, முடிவெடுக்க முடியாத இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதோ என்பதை இந்த சம்பவங்கள் எழுப்புகின்றன.
இந்த கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதைப் போல தமிழ்நாட்டில் 2026 சட்டசபை தேர்தலில் பிரதான பேசுபொருளாக, தற்போதைய ஆளும் திராவிட மாடல் அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் அஸ்திரமாக இருக்கப் போவது சட்டம் ஒழுங்கு சீர்கேடுதான். ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிற, உலுக்குகிற கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.. ஆகையால் கெட்டுப் போய் கிடக்கும் காவல்துறையின் ஈரலுக்கு சரியான ஆபரேஷனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் சரியாக செய்தால்தான் மக்கள் நிம்மதி பெருமூச்சுவிடுவார்கள்; மக்கள் தெருக்களில் சுதந்திரமாகவும் நடமாடவும் முடியும். எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் திராவிட மாடல் அரசு மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் எனவும் நம்புவோம்!












Click it and Unblock the Notifications