ஆளுநர் மாளிகை முன் குண்டு வீச வேண்டிய அவசியமில்லை.. அவப்பெயர் ஏற்படுத்துவதா.. அமைச்சர் ரகுபதி சுளீர்
சென்னை: கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கும் தமிழக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். எதிரிகளுக்கும் பாதுகாப்பு தருவார் முதல்வர் ஸ்டாலின் அப்படி இருக்கும் போது ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பிற்பகல் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. பெட்ரோல் குண்டு வீசிய சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த கருக்கா வினோத் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மேலும் இரண்டு பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனர்.

கருக்கா வினோத் மீது ஏற்கனவே பலமுறை பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஆளுநர் மாளிகை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில், ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர் என பதிவிடப்பட்டுள்ளது.
இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளது. அதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மூலம் ஆளுநருக்கு தொடர் அச்சுறுத்தல் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினத்திற்கு ஆளுநர் சென்ற போது கான்வாய் தாக்கப்பட்ட சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்றும் ஆளுநர் மாளிகை அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஆளுநர் மாளிகை சார்பில் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருக்கிறார். சாலையில் சென்ற மனநோயாளி ஒருவர் வெடிகுண்டு வீசியதற்கு அரசு எப்படி பொறுப்பேற்க முடியும்.

பெட்ரோல் குண்டு வீசப்படுவதற்கு முன்பு தடுத்து கைது செய்திருக்கிறோம். விசாரணை நடைபெற்று வருகிறது. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று நிரூபிப்போம். ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு தரவில்லை என்று சொல்ல முடியாது. முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. சாலையில் செல்பவர் போகிற போக்கில் வெடிகுண்டு வீசினால் யார் என்ன செய்ய முடியும்
ஒரு எதிர்கட்சித்தலைவரைப் போல ஊர் ஊராக சென்று ஆளுநர் பிரச்சாரம் செய்து வந்தார் ஆளுநர். எதிரியாக இருந்தாலும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அப்படி இருக்கும் போது ஆளுநர் மாளிகையில் எப்படி குண்டு வீசுவோம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. சாலையில் சென்றவர் குண்டு வீசினால் உளவுத்துறையின் தோல்வி என்று சொல்ல முடியாது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications