சென்னையில் இனி சொத்து வாங்கும் முன் என்னென்ன கவனிக்க வேண்டும்? இதை மட்டும் மறந்துடாதீங்க
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நிலம், வீட்டுமனை, வீடு ஏதாவது ஒன்றை வாங்கும்போது, சொத்திற்கான ஆவணங்களை சரிபார்த்து பெற வேண்டியது அவசியம் ஆகும்.. வெள்ள பாதிப்பு அடிக்கடி ஏற்படுவதால் என்னவெல்லாம் பார்க்க வேண்டும் என்பதை பார்ப்போம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வீடு, நிலம், அடுக்குமாடி குடியிருப்பு வாங்கும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நீர் நிலை ஆக்கிரமிப்புகள் மிக அதிகமாக உள்ளது. சென்னையில் சொத்து வாங்க போகிறீர்கள் என்றால், மழை காலங்களில் தண்ணீர் தேங்கும் வாய்ப்பு உள்ளதா என்பதை கண்டுபிடித்துவிட்டு வாங்குங்கள். கண்டுபிடிப்பது மிகவும் சவாலான காரியம் எல்லாம் இல்லை.

நீங்கள் வாங்கப்போகும் பகுதிகளில் தண்ணீர் தேங்கியதா இல்லையா என்பதை பத்திரிக்கை செய்திகளை வைத்து எளிதாக அறிய முடியும். 2015 முதல் 2023 வரை கூகுளில் போய் உங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கியதா இல்லை என்பதை கண்டுபிடித்துவிட முடியும். அப்படி முடியாவிட்டால் நேராக அந்த பகுதியில் உள்ள மக்களிடம் 2015 வெள்ளத்தின் போது எப்படி இருந்தது என்பதையும், 2023 வெள்ளத்தின் போது எப்படி தண்ணீர் வந்தது என்பதையும் கேட்டு தெரிந்து கொள்ளலாம். அவர்கள் சொல்லிவிடுவார்கள்.
ஆசைப்பட்டு வாங்கிய இடம் நீர் நிலைகளில் அல்லது நீர் நிலை வழித்தடங்களாக இருந்தால் காலத்திற்கு அவதிப்பட நேரிடும். டிடிசிபி அனுமதி உள்ளது, சிஎம்டிஏ அனுமதி உள்ளது என்று சொன்னாலும் தண்ணீர் போக வழி உள்ளதா, அல்லது இடுப்பளவு தண்ணீரில் பல காலம் வாழ வேண்டுமா, ஏரியில் வெள்ளம் வந்தால் எப்படி வெளியேறும் என்பதை பாருங்கள். ஏனெனில் ஒவ்வொரு வருடமும் ஒரே நாளில் பேய்மழை பெய்வது அதிகரித்துள்ளது. 36 மணி நேரம், 48 மணி நேரம் என்று மழை விழுகும் பாணியே மாறிவிட்டது. எனவே மக்களே வீடு, இடம், அடுக்குமாடி வாங்கும் போது இதைத்தான் முதலில் பார்க்க வேண்டும். இவற்றில் பிரச்சனை இல்லை என்றால் மட்டுமே இடம் வாங்குவதை பற்றி யோசிக்க வேண்டும்..
அதன்பின்னரே கிரைய ஒப்பந்தம், விற்பனைப் பத்திரம் போன்றவற்றை பார்க்க வேண்டும். அப்படியே பல நாட்களாக கட்டடமாக இருந்தால் சொத்து வரி ரசீது, காலி இடமாக இருந்தால் காலி இட வரி ரசீது, தடையில்லா சான்று, பட்டா, கட்டட வரைபடம் , வில்லங்க சான்றிதழ், சிட்டா நகல், குடிநீர் இணைப்பு மற்றும் மின் இணைப்பு வரிச்சான்று ஆகியவற்றை சரிபார்த்து பத்திரத்தில் குறிப்பிட்டவரின் பெயர் இருக்கிறதா என்பதை, உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல் பத்திரத்தில் தாய்பத்திரம் இருந்தால், அதை பெற்று வக்கீலிடம் கொடுத்து சரிபார்த்து, வில்லங்கசான்றுடன் இணைத்துப்பார்த்து, அதன் பின்பு சொத்தை வாங்குவது நல்லது. ஏனெனில் வில்லங்கசான்றிதழில் வில்லங்கம் வந்தால் வாழ்நாள் முழுவதும் அவதிப்படும் நிலை வரும். எல்லாம் சரியாக இருக்கிறது என்றால் இடத்தை தாராளமாக வாங்கலாம். சொத்து வாங்கிய உடன் உடனடியாக பட்டாவும் வாங்கிவிடுங்கள்.
பட்டா வாங்காமல் விட்டால் சிக்கல் வரலாம். பட்டா வங்கிய பின்னர், இடத்தை கம்பி வேலி போட்டு அடைத்து வையுங்கள். அது வீடு கட்டும் வரை உங்களுக்கு பாதுகாப்பை தரும். அடிக்கடி இடத்தை போய் பாருங்கள். ஏனெனில் மோசடியாளர்கள் ஆக்கிரமிக்க வாய்ப்பு உள்ளது. முக்கியமான விஷயம், வீடு , நிலம், மனை அடுக்குமாடி என எதுவாங்கினாலும் வாக்குறுதிகளை மட்டும் நம்பி வாங்கிவிடாதீர்கள். எழுத்துப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்புங்கள். கவர்ச்சியான வாக்குறுதியில் கவிழ்ந்துவிடாதீர்கள். அப்படி கவிழ்ந்தவர்கள் தான் இன்று நீரில் வெள்ளம் வரும் போது எல்லாம் மிதக்கிறார்கள்.'












Click it and Unblock the Notifications