தீபாவளி வாழ்த்து.. இப்போ உதயநிதி சொல்லிட்டாரு.. சீக்கிரம் ஸ்டாலினும் சொல்வார்.. எல் முருகன் பரபர
சென்னை: கோயம்பேட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் எல் முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். தீபாவளிக்கு இதுவரை வாய்திறக்காதவர்களும் இப்போது வாய் திறந்து வாழ்த்து சொல்லி இருக்கிறார்கள் இதுவே எங்களுக்கு வெற்றி தான் என்று குறிப்பிட்ட அவர், முதலமைச்சரும் விரைவில் வாழ்த்து சொல்வார் என நம்புகிறோம் என்றும் தெரிவித்தார்.
இன்று நமது நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி பொதுமக்கள் தீபாவளியை மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகிறார்கள்.

தீபாவளி: பட்டாசு வெடிக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த கட்டுப்பாடுகளைப் பின்பற்றி பட்டாசும் வெடித்து வருகிறார்கள். இந்தச் சூழலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாடினார். தூய்மை பணியாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கி அவர் தீபாவளியைக் கொண்டாடினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், "உலகெங்கும் உள்ள தமிழக மக்கள் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இந்த தீபாவளி உங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுப்பதாக அமையட்டும். ராமர் பிறந்த இடமான அயோத்தியில் கோயில் கட்டப்பட்ட பிறகு கொண்டாடப்படும் முதல் தீபாவளியாக இந்த தீபாவளி வருவது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.
எல் முருகன்: இந்த நாளில் நல்ல விஷயங்களை எல்லாம் நாம் எடுத்துக் கொண்டு தீய விஷயங்களை ஒழிக்க வேண்டும். மேலும், நாட்டின் வளர்ச்சிக்கும் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். இதற்காக நாம் திமுக என்னும் நரகாசுரனை 2026ல் ஒழிக்க வேண்டும். 2026ல் திமுகவை ஒழித்த பிறகு வரும் தீபாவளியை நிச்சயம் நாம் வெகு சிறப்பாகக் கொண்டாடுவோம்" என்றார்.
தீபாவளி வாழ்த்து தொடர்பாகப் பேசிய அவர், "இங்குச் சிலர் தீபாவளிக்கு எல்லாம் வாழ்த்தே சொல்ல மாட்டோம் என்றார்கள். ஆனால், இப்போது நம்புகிறவர்களுக்காவது வாழ்த்துகள் என்று துணை முதல்வர் உதயநிதி சொல்லி இருக்கிறார். தீபாவளிக்கு வாயைத் திறக்காதவர்கள். இன்று ஏதோ வாயைத் திறந்து வாழ்த்தி இருக்கிறார்கள். இதுவே நல்ல விஷயம் தான்.
தீபாவளி வாழ்த்து: மேலும், விஜய் கூட தீபாவளிக்கு வாழ்த்து சொல்லி இருக்கிறார். அவருக்கும் வாழ்த்துக்கள். தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில் அப்படி என்ன தயக்கம் என்று எங்களுக்குப் புரியவில்லை.. தீபாவளி என்று இல்லை அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். ஏனென்றால், அனைவருக்கும் பொதுவான பதவியில் இருப்பவர் தான் முதல்வர். அவர் அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும். ஆனால், அவரும் வாழ்த்து சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.
உதயநிதி: கடந்த சில நாட்களுக்கு முன்பு மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு மற்றும் திராவிட முன்னேற்றக் கழக பவள விழாவை முன்னிட்டு சென்னையில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. சென்னை கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சுமார் 4,250 கழக நிர்வாகிகளுக்கு நலத்திட்ட உதவிகளைத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "நம்பிக்கை உள்ளவர்களுக்கு, கொண்டாடுபவர்களுக்குத் தீபாவளித் திருநாள் வாழ்த்துகளையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications