ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்.. ஏறத்தாழ சரிசம பதவிகளில் வெற்றி.. அதிமுக, திமுக இடையே கடும் போட்டி
சென்னை: தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக கூட்டணிகள் நடுவே வலுவான போட்டி நிலவி வருகிறது.
தமிழகத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக காலியான இருந்த ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 91,975 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் 2.30 லட்சம் வாக்காளர்கள் போட்டியிட்டனர். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள மாவட்டங்களில் காலியாக உள்ள 91,975 பதவியிடங்களுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
அதன்படி 156 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 260 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 37,830 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4,700 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் என மொத்தம் 45,336 இடங்களுக்கான முதல் கட்ட தேர்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. இதில் மொத்தம் 76.19 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
அது போல் 158 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 2544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 4,924 கிராம ஊராட்சி மன்றத் தலைவர்கள் என மொத்தம் 46,639 பதவிகளுக்கு இரண்டாம் கட்டமாக கடந்த 30-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 77 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
முதல் கட்ட தேர்தலின்போது புகார்களின் பேரில் புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, அரியலூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருவாரூர் ஆகிய 9 மாவட்டங்களில் 30 வார்டுகளுக்கு மறுவாக்கு பதிவு நடந்தது. இதில் 72.7 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
மேலும் வாக்குச் சீட்டு மாறியது உள்ளிட்ட புகார்களாக 5 மாவட்டங்களில் 9 வாக்குச் சாவடிகளுக்கு புதன்கிழமை நடந்த மறுவாக்குப் பதிவில் 59.42 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலில் வாக்குகள் போடப்பட்ட பெட்டிகள் அனைத்தும் 315 வாக்கு எண்ணும் மையங்களில் சீல் வைக்கப்பட்டு அவற்றுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்னதாக காலை 7 மணிக்கு தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையின் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டது.
ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு வாக்குகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணி நிலவரப்படி, ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் திமுக கூட்டணி 1367, அதிமுக 1198 பதவியிடங்களில் முன்னிலை அல்லது வெற்றி பெற்றிருந்தது. அமமுக 50 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. நாம் தமிழர் 1 இடத்தில் வெற்றி பெற்அறது.
மாவட்ட கவுன்சிலர் பதவியிடங்களில் அதிமுக கூட்டணி 200, திமுக கூட்டணி 197 தொகுதிகளில் முன்னிலை அல்லது வெற்றி பெற்றிருந்தது.












Click it and Unblock the Notifications