"ஒரு சவாரி வந்திருக்கு எஸ்தர், போயிட்டு வந்துடட்டுமா".. மறுத்த மனைவி.. அடுத்து நடந்த பெரும் துயரம்
சென்னையில் மனைவி தீக்குளித்து இறந்ததால் கணவன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்
சென்னை: "ஒரு சவாரி வந்திருக்கு எஸ்தர்.. நல்ல காசு வரும்.. போயிட்டு வந்துடட்டுமா" என்று கணவன் கேட்க, இதுவே பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. இறுதியில் மனைவி உயிரிழக்க.. கணவன் தற்கொலைக்கு முயல, இந்த சம்பவம் சென்னையை அதிர வைத்துள்ளது.
தற்போது ஊரடங்கு அமலில் என்பதால் போக்குவரத்து எதுவும் இயக்கப்படவில்லை.. தளர்வு இருக்கும் என்றாலும், போக்குவரத்தில் எத்தகைய மாறுதல்கள் இருக்க போகிறது என்பது தெரியவில்லை.

ரயில், பஸ்களை விட ஆட்டோ, கார்கள் போன்றவைகளை இயக்குவதில் நிறைய சிக்கல்களும் உள்ளன.. இதனால் அனைத்து டிரைவர்களுமே வருமானமின்றி தவித்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு கார் டிரைவருக்கு ஒரு சவாரி கிடைத்தது.

சென்னை மதுரவாயல், ஜானகி நகரை சேர்ந்தவர் தாமஸ்.. இவர் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார்.. 32 வயதாகிறது.. இவருடைய மனைவி எஸ்தர்.. அவருக்கு 27 வயது. இவர்களுக்கு 3 குழந்தைகளும் உள்ளனர். சம்பவத்தன்று மராட்டிய மாநிலம் செல்ல வேண்டும் என்று தாமசுக்கு ஒரு சவாரி வந்தது. அதனால் எஸ்தரிடம் சென்று, மராட்டியம் போய் வருகிறேன்.. இந்த சவாரி கிடைத்தால் நல்ல காசு வரும்.. இந்த கஷ்ட நேரத்துல அந்த பணம் உதவும் என்று சொல்லி உள்ளார்.

ஆனால், எஸ்தரோ ஊரடங்கு சமயத்தில் எங்கும் போக வேண்டாம் என்றும், வீட்டிலேயே என்னுடனும் குழந்தைகளுடனும் இருக்க வேண்டும் என்றும் சொல்லி உள்ளதாக தெரிகிறது. இதுதான் தம்பதிக்குள் தகராறாக உருவெடுத்தது.. குழந்தைகளை கவனித்து கொள்ள சொல்லியும், கேட்காமல் சவாரி போகிறாரே என்று விரக்தி அடைந்த எஸ்தர், வீட்டில் காருக்கு வைத்திருந்த டீசலை உடலில் ஊற்றி நெருப்பை பற்ற வைத்து கொண்டார்.
எஸ்தரின் அலறல் சத்தத்தை கேட்டு தாமஸ் ஓடிவந்தார்.. உடம்பெல்லாம் பற்றி எரிந்து கொண்டிருந்த நெருப்பை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் சேர்த்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று எஸ்தர் உயிரிழந்துவிட்டார்.. மனைவி இறந்துவிட்டதாக சொல்லவும், அந்த அதிர்ச்சியில் இருந்து தாமஸால் மீள முடியவில்லை.. அதனால் துக்கம் தாங்க முடியாமல் நேராக வீட்டுக்கு போய் கதவை பூட்டிக்கொண்டு தூட போட முயன்றார்.

அதற்குள் உறவினர்கள் விரைந்து சென்று கதவை உடைத்து தூக்கில் தொங்கிய தாமசை மீட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கொண்டு சென்று சேர்த்தனர்... அங்கு ஆபத்தான நிலையில் தாமஸ் சிகிச்சை பெற்று வருகிறார்.. இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தம்பதி 2 பேருமே தங்களது 3 குழந்தைகளை பற்றி கொஞ்சமும் யோசிக்கவில்லை.. தந்தையோ இப்போது ஆஸ்பத்திரியில்.. தாயில்லாமல் அந்த குழந்தைகளும் தவியாய் தவித்து வருகின்றன.. தீயில் வெந்த இறந்த ஜெயஸ்ரீயையே இன்னும் மறக்க முடியாத நிலையில் இன்னொரு தீக்குளிப்பு மரணம் நம்மை நிலைகுலைய வைத்துள்ளது... லாக்டவுன் இழப்புகளும் நம்மை பாடாய் படுத்தி வருகின்றன!












Click it and Unblock the Notifications