ஆபரேஷன் 11.. மொத்தமாக 11 மாஜி எம்எல்ஏக்களை தட்டி தூக்கும் அண்ணாமலை.. அதிமுகவிற்கு பாஜக ஷாக்
சென்னை: 11 மாஜி எம்எல்ஏக்கள் உட்பட முக்கியமான தலைவர்கள் அதிமுகவில் இருந்து விரைவில் பாஜகவிற்கு தாவ வாய்ப்பு உள்ளதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலுக்காக தமிழ்நாட்டில் பாஜக தீவிரமாக தயாராகி வருகிறது. பாஜக மூன்றாவது அணியை லோக்சபா தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி பாஜக + ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் + பாரி வேந்தரின் ஐஜேகே + மற்றும் சில சிறிய கட்சிகள் இணைந்து மூன்றாவது கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உறுதியாக இருக்கும் அதிமுக: அதன்படி ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதில் அதிமுக உறுதியாக இருக்கிறது. அதிமுக - பாஜக மோதல் காரணமாக அந்த கூட்டணி முறிந்தது. இதனால் பாஜக தனியாக 3வது அணியை உருவாக்க முயன்று வருகிறது.
பாஜக உருவாக்கும் இந்த அணியில் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஓ பன்னீர்செல்வம் + டிடிவி தினகரன் ஆகியோர் வழங்கும் முக்குலத்தோர் வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும்.
மேலும் பாமகவின் வன்னியர் வாக்குகள், தேமுதிகவிடம் இருக்கும் 2-3 சதவிகித வாக்குகள் பாஜகவிற்கு சாதகமாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இந்த நிலையில்தான் 11 மாஜி எம்எல்ஏக்கள் உட்பட முக்கியமான தலைவர்கள் அதிமுகவில் இருந்து விரைவில் பாஜகவிற்கு தாவ வாய்ப்பு உள்ளதாக பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி தாவும் மாஜிக்கள்: பாஜகவில் தற்போது பெரிய முகமாக, கட்சியின் சீனியர் தலை என்று மக்களிடம் பிரபலமாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு யாரும் இல்லை. சீனியர்கள் பலரும் ஆளுநர்கள் ஆகிவிட்டனர். இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக ஒரு சில அதிமுக தலைகள் பாஜக பக்கம் செல்ல திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வருகின்றன. கட்சிக்கு முகமாக இருக்கும் விதமாக ஒரு சிலரை தூக்க அக்கட்சி திட்டமிட்டு வருகிறதாம்.
அதிமுக பாஜக இடையே தமிழ்நாட்டில் உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில்தான் தமிழ்நாடு பாஜக தலைவர்கள் இந்த திட்டத்தில் இறங்கி உள்ளார்களாம். அதிமுக பாஜக இடையே தற்போது தீவிர மோதல் நிலவி வருகிறது. தேசிய அளவில் பாஜக அதிமுக நட்பாக இருந்தாலும் உள்ளூர் அளவில் அதிமுக பாஜக இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. முக்கியமாக பாஜக தலைவர் அண்ணாமலையின் சில பேச்சுக்கள் காரணமாக அதிமுக - பாஜக இடையே மோதல் உச்சத்தில் உள்ளது.
முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது
அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசி உள்ளார். இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் வைத்த விமர்சனத்தில், அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை வசூல் யாத்திரை. மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அதனால்தான் அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார், என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக கட்சியின் 11 டாப் லீடர்களை பாஜக தங்கள் பக்கம் இழுக்கும் என்கிறார்கள். முக்கியமாக லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு முகமாகும் விதமாக கொங்கு மண்டலத்தில் இருந்து அதிமுகவின் "கெளுத்தி" மீன்களை அள்ளிப்போடும் திட்டத்தில் தமிழ்நாடு பாஜக இருப்பதாக அக்கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications