நள்ளிரவில் ஓட்டலில் சந்திப்பு.. பாஜக - ஓ பன்னீர் செல்வம் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன? முழுவிபரம்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைய உள்ளதாக ஓ பன்னீர் செல்வம் தொடர்ந்து கூறி வந்தார். இந்நிலையில் தான் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் பாஜக தலைவர்களுடன் ஓ பன்னீர் செல்வம் அணியினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் என்ன நடந்தது? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் முதல்வரான ஓ பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அதேபோல் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவும் கழற்றி விடப்பட்டுள்ளது. இதனால் வரும் லோக்சபா தேர்தலில் பாஜக தனியாக கூட்டணி அமைத்து களம் காண உள்ளது.
மேலும் பாஜகவுடன் எந்த காரணம் கொண்டும் கூட்டணி அமைக்க மாட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக தலைவர்கள் தொடர்ந்து தெரிவித்துள்ளனர். இருப்பினும் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ பன்னீர் செல்வம் தரப்போ தாங்கள் பாஜக கூட்டணியில் தான் உள்ளோம். பிரதமர் மோடி மீண்டும் 3வது முறையாக பிரதமராக ஆதரவு அளிப்போம் என தெரிவித்து வந்தனர்.

ஆனால் பாஜக மேலிடத்துக்கோ அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இதனால் ஓ பன்னீர் செல்வம் தரப்பிடம் பாஜக பேசாமல் இருந்து வந்தது. ஆனால் பாஜகவுடன் இணையமாட்டோம் என அதிமுக உறுதியாக தெரிவித்த நிலையில் தற்போது பாஜக அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோருடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளது.
ஏற்கனவே ஓ பன்னீர் செல்வம் மத்திய அமைச்சர்கள் விகே சிங், கிஷண் ரெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தி பாஜகவுடன் கூட்டணி அமைக்க ஆர்வமாக இருந்ததை வெளிக்காட்டி இருந்தார். இத்தகைய சூழலில் தான் நேற்று 12 மணியளவில் சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஓட்டலில் ஓ பன்னீர் செல்வம் அணியினர், பாஜக தலைவர்களை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை கிண்டி தனியார் ஓட்டலில் ஓ பன்னீர் செல்வம் அணி தரப்பில் ஓ பன்னீர் செல்வம், எம்எல்ஏக்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட மேலும் சில நிர்வாகிகளும், பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் விகே சிங், கிஷண் ரெட்டி, எல் முருகன், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையின்போது ஓ பன்னீர் செல்வம் தனது அணிக்கு தேவையான தொகுதியை ஒதுக்கும்படி கேட்டுள்ளார். மேலும் ஓ பன்னீர் செல்வம் தரப்பினரை தாமரை சின்னத்தில் போட்டியிடுவது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை என்பது சுமார் அரை மணிநேரம் கடந்தும் நடந்தது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ஓ பன்னீர் செல்வம் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: முதற்கட்டமாக பாஜகவுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதேபோல் இன்று (அதாவது நேற்று) 2வது கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 2 கட்ட பேச்சுவார்த்தைகளும் சுமூகமாக நடந்து முடிந்துள்ளது. இது ஒரு மெகா கூட்டணி. கூட்டணியில் அதிக கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதனால் கூட்டணியில் ஒரே தொகுதியை 2, 3 பேர் கேட்டுள்ளனர். சமூகமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தொகுதி பங்கீடு செய்யப்படும்.
நாங்கள் இரட்டை இலைக்கு கண்டிப்பாக உரிமை கோருவோம். இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலில் போட்டியிடுவோம். இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு வழங்குவது என்பது தேர்தல் ஆணையத்தின் கையில் தான் உள்ளது. சாதக, பாகதங்களை ஆராய்ச்சி விசாரணை நடத்தி இந்திய தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும். பொறுத்திருந்து பாருங்கள். அவசரப்படாதீர்கள் எங்களுக்கான தொகுதி எத்தனை என்பதை நாங்கள் அனைவரும் அமர்ந்து பேசி இறுதி செய்த பிறகு உங்களிடம் தெரிவிப்பது தான் நாகரீகமாக இருக்கும் என கருதுகிறேன்'' எனக்கூறிவிட்டு சென்றார்.
இதன்மூலம் பாஜக கூட்டணியில் ஓ பன்னீர் செல்வம் அணி இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. இருப்பினும் எத்தனை தொகுதிகள் பாஜக சார்பில் ஓ பன்னீர் செல்வம் அணிக்கு வழங்கப்பட உள்ளது. அவர்கள் பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளனரா? இல்லாவிட்டால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உள்ளனரா? அல்லது வேறு ஏதேனும் தனி சின்னத்தில் களமிறங்க உள்ளனரா? என்பதை அறிய இன்னும் சில நாட்கள் நாம் காத்திருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications