எப்போது அழைப்பு வருமோ? காத்திருக்கும் திமுக தலைமை கழக பேச்சாளர்கள்.. அறிவாலயம் அழைக்குமா?
சென்னை: தமிழ்நாட்டின் ஆளும் திமுகவின் தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ பேச்சாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையிலும் கட்சித் தலைமை எப்போது அழைக்கும்? என ஏக்கத்துடன் காத்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பேசிப் பேசியே வளர்ந்த இயக்கம் திராவிடர் இயக்கம். திமுககாரனுக்கு பேசவா சொல்லித் தரனும்? என்பதுதான் கிராமங்களில் இன்றளவும் உள்ள அடையாளம். திமுகவின் பேச்சாளர்கள் என்றாலே பெரும் கெத்துதான். அதிரடியான அடை மொழிகள், அனல் பறக்கும் வசனங்கள், அடுக்கடுக்கான புள்ளி விவரங்கள் என பேசும் பேச்சாளரை நம்பவே முடியாது... இவரா இப்படி தெறிக்க விடுகிறார் என்பதாக இருக்கும்.

இதனால்தான் திமுகவின் பேச்சாளர்களுக்கு ஒரு தனி மரியாதை எப்போதும் உண்டு. திமுக மட்டுமல்ல அதிமுகவிலும் இப்படித்தான். வசனங்கள்தான் வேறு மாதிரியாக இருக்கும். திராவிட கட்சிகளைப் பொறுத்தவரை ஜனவரியில் தொடங்கும் தை பொங்கல், எம்ஜிஆர் பிறந்த நாள், மொழிப் போர் தியாகிகள் நாள், ஜெயலலிதா பிறந்த நாள், ஸ்டாலின் பிறந்த நாள், கருணாநிதி பிறந்த நாள், பெரியார் அண்ணா பிறந்த நாள், என ஒவ்வொரு மாதம் அல்லது சில மாதங்களுக்கு ஒரு முறையேனும் தலைமை கழகம் அறிவிக்கும் தமிழகம் தழுவிய பொதுக் கூட்டங்களில் இவர்களது பெயர் ஏதேனும் ஒரு ஊரில் இடம் பெற்றிருக்கும். இதற்குத்தானே காத்திருந்தேன் என்ற ஆவலில் இந்த பேச்சாளரும் பஸ், ரயில் ஏறி மேடையில் கர்ஜித்துவிட்டு வீடு திரும்புவார். அப்போது கிடைக்கும் சொற்பத் தொகையை வைத்து மாதத்தை ஓட்டிவிடுவர். இவர்களது பெரும் வருவாயாக நம்புவதும் இந்த சொற்பத் தொகையைத்தான் என்பது வேறு கதை.
ஆனால் அண்மை காலமாக திமுகவில் தலைமை கழக பேச்சாளர்கள் கண்டு கொள்ளப்படாமலேயே இருக்கின்றனர் என்ற அதிருப்தி இருந்து கொண்டே வந்தது. இதனால்தான் திடீரென திமுகவின் ஒட்டுமொத்த பேச்சாளர்கள் - சொற்பொழிவாளர்களை தமது இல்லத்துக்கு அழைத்து பேசி மகிழ்வித்து அனுப்பினார் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின்.
அப்பாடா! இப்போதாவது தலைமை கழகம் நம்மை பார்த்ததே என்ற திகைப்பிலும் திளைப்பிலும் வீடு திரும்பினர் பேச்சாளர்கள். ஆனால் இந்த மகிழ்ச்சி சில நாட்கள் கூட நீடிக்கவில்லையாம். முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டங்களில் தங்களது பெயர்கள் இடம் பெறும் என எதிர்பார்த்து காத்திருந்த இந்த பேச்சாளர்களுக்கு பெரும் ஏமாற்றம்தானாம். ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் 10,15 பேச்சாளர்கள்தான் அழைக்கப்பட்டுள்ளனராம்.. இவர்களுடன் ஊடக, சமூக வலைதள பிரமுகர்களும் இணைந்து கொண்டுள்ளனராம்.
லோக்சபா தேர்தல் களம் அனலடிக்க தொடங்கும் நிலையிலும் கூட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கரிசனமாக பேசி அனுப்பிய பின்னரும் கூட தலைமை அலுவலகத்தின் பார்வை எங்கள் பக்கம் ஏன் திரும்பவில்லை? என்பதுதான் திமுக பேச்சாளர்களின் குமுறல். ஒருவேளை இதற்கு எல்லாம் ஏதோ ஒரு லாபி இருக்கிறது போல.. குக்கிராமத்தில் இருக்கும் நம்மால் எல்லாம் இந்த லாபியை செய்ய முடியுமா? பக்கத்து ஊருக்கு பஸ் ஏறிப் போவதற்கே திமுகவின் காசை நம்பி வாழ்கிற நம்மால்தான் லாபியிஸ்டாக முடியுமா? என்ற குமுறலை நம்மிடமே கொட்டுகின்றனர் திமுக தலைமை கழக பேச்சாளர்கள்.
திமுகவின் தலைமை கழகப் பேச்சாளர்களைப் பொறுத்தவரை அதீத முக்கியத்துவத்தை எல்லாம் எதிர்பார்க்கவில்லையாம்.. கட்சித் தலைமை அறிவிக்கும் மாவட்டந்தோறும் நடைபெறும் சிறப்பு பொதுக் கூட்டங்களுக்கு 300க்கும் மேற்பட்ட பேச்சாளர்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டாலே இந்த குமுறலுக்கு இடமே இல்லை என்கிற கருத்தையே முன்வைக்கின்றனர்.












Click it and Unblock the Notifications