‛‛ஓராண்டு காத்திருக்கணும்’’.. திமுக கூட்டணியில் கமல் எப்போது ராஜ்யசபா எம்பியாவார் தெரியுமா? விபரம்
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்துள்ளது. அந்த கட்சிக்கு லோக்சபா இடங்களுக்கு பதில் ஒரு ராஜ்யசபா சீட்டை திமுக தலைவர் ஸ்டாலின் வழங்கி உள்ளார். இந்த ராஜ்யசபா சீட்டில் கமல்ஹாசன் போட்டியிடுவார் என கூறப்படும் நிலையில் அவர் எப்போது ராஜ்யசபா எம்பியாவார் என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
வரும் லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இன்று இணைந்தது. திமுக கூட்டணியில் இணைய கமல்ஹாசன் மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். 2 நாடாளுமன்ற தொகுதி அல்லது ஒரு ராஜ்யசபா சீட், ஒரு நாடாளுமன்ற தொகுதி தரும்படி கமல்ஹாசன் திமுகவிடம் பேசிவந்தார்.

அதற்கு திமுக உடன்படவில்லை. இதனால் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் சேருமா? இல்லையா? என்ற பெரிய கேள்வி இருந்து வந்தது. இந்நிலையில் தான் இன்று மதியம் ஒரு மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைந்தது. இதுதொடர்பாக ஸ்டாலின், கமல்ஹாசன் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கு லோக்சபா தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. ஒரேயொரு ராஜ்யசபா சீட் மட்டுமே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாவிட்டாலும் கூட கமல்ஹாசன் தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.
இதற்கிடையே தான் மக்கள் நீதி மய்யத்துக்கு திமுக ஒரு ராஜ்யசபா சீட் வழங்குவதாக தெரிவித்துள்ளதே அதனை எப்போது வழங்கும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இந்த கேள்விக்கான விடையை இந்த செய்தியில் பார்ப்போம். தமிழ்நாட்டை பொறுத்தவரை மொத்தம் 18 ராஜ்யசபா சீட் உள்ளது. தற்போது 18 ராஜ்யசபா இடங்களும் நிரம்பி உள்ளன. திமுகவில் 10 பேர், திமுக கூட்டணியில் 2 பேர், அதிமுகவில் 4 பேர், தமிழ் மாநில காங்கிரஸ், பாமகவில் ஒருவர் என மொத்தம் 18 பேர் ராஜ்யசபா எம்பிக்களாக உள்ளனர்.
திமுக சார்பில் திருச்சி சிவா, என்ஆர் இளங்கோ, அந்தியூர் பி செல்வராஜ், கனிமொழி சோமு, பி வில்சன், எம் சண்முகம், எம்எம் அப்துல்லா, எஸ் கல்யாணசுந்தரம், கேஆர்என் ராஜேஷ் குமார், கிரிராஜன் ஆகியோர் எம்பியாக உள்ளனர். அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ப சிதம்பரமும், மதிமுகவின் வைகோவும் ராஜ்யசபா எம்பியாக உள்ளனர்.
அதேபோல் அதிமுகவுக்கு 4 ராஜ்யசபா எம்பிக்கள் உள்ளனர். சிவி சண்முகம், ஆர் தர்மர், எம் தம்பித்துரை, சந்திரசேகரன் ஆகியோர் அதிமுக ராஜ்யசபா எம்பிக்களாக இருக்கிறார். மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் ஜிகே வாசன், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் எம்பியாக உள்ளனர். இதனால் திமுக ஆதரவில் உடனடியாக மக்கள் நீதி மய்யத்துக்கு ராஜ்யசபா எம்பி என்பது கிடைக்காது.
இருப்பினும் தற்போது உள்ள ராஜ்யசபா எம்பிக்களில் திமுகவை சேர்ந்த பி வில்சன், எம் சண்முகம், எம்எம் அப்துல்லா, மதிமுகவின் வைகோ, அதிமுகவின் சந்திரசேகரன், பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பதவிக்காலம் என்பது 2025 ஜுலை மாதம் 24ம் தேதி முடிவுக்கு வர உள்ளது. இந்த 6 இடங்களுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ராஜ்யசபா தேர்தல் நடக்கும். இந்த வேளையில் தான் திமுக எம்எல்ஏக்கள் ஆதரவில் மக்கள் நீதி மய்யத்தை சேர்ந்தவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி என்பது கிடைக்கும்.
மக்கள் நீதி மய்யத்தை பொறுத்தவரை ராஜ்யசபா எம்பி பதவிக்கு கமல்ஹாசன் தான் போட்டியிடுவார் என கூறப்படுகிறது. இது உறுதியாகும் பட்சத்தில் அடுத்த ஆண்டு (2025) நடக்கும் ராஜ்யசபா தேர்தல் மூலம் தான் கமல்ஹாசன் எம்பியாக முடியும். இதனால் இன்னும் ஓராண்டு வரை அவர் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications