ஆவணமின்றி கையில் எவ்வளவு பணம் எடுத்து செல்லலாம்? தேர்தல் நடத்தை விதியால் கட்டுப்பாடு! உஷார் மக்களே
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் தான் பொதுமக்கள் எவ்வளவு பணத்தை ஆவணங்களின்றி கையில் எடுத்த செல்லலாம். ஒருவேளை அதிக பணத்தை எடுத்து சென்று பறக்கும்படையிடம் சிக்கினால் அடுத்து என்ன நடக்கும்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் கடந்த 2019ல் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது. அதேபோல் தான் வரும் லோக்சபா தேர்தலும் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் எப்போதும் தேர்தல் நடத்தப்பட உள்ளது என்பதை நேற்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார்.

அதன்படி லோக்சபா தேர்தல் என்பது ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 என 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுகள் வரும் ஜுன் மாதம் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் தான் எந்த கட்சி எத்தனை லோக்சபா தொகுதிகளில் வெல்கிறது என்பது தெரியவரும்.
இந்நிலையில் தான் நேற்றைய தினம் மதியம் 3 மணிக்கு தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்து தேர்தல் தேதி அறிவித்தார். பொதுவாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலே பல்வேறு நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த நடத்தை விதிகள் தேர்தல் ரிசல்ட் வெளியாகும் வரை அமலில் இருக்கும்.
முறைகேடுகள் நடைபெறுவதை தடுத்து அமைதியான முறையில் தேர்தல் நடத்துவத்காக தான் இந்த நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் நேற்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியாக நடத்தை விதிகள் செயல்பாட்டில் உள்ளன. பல இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது ஆவணங்கள் இன்றி எடுத்த செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மக்கள் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. அதாவது நடத்தை விதி அமலில் உள்ளதால் எவ்வளவு பணம் கையில் எடுத்து செல்லலாம் என பலரும் குழம்பி உள்ளனர். இனி குழப்பம் வேண்டாம். அதாவது நடத்தை விதி அமலில் இருந்தாலும் கூட பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்குள்ளான ரொக்கப்பணத்தை தாராளமாக எடுத்து செல்லாம். பறக்கும்படையினர் மறித்தால் பணத்துக்கான உரிய காரணத்தை கூறிவிட்டு செல்லலாம்.
மாறாக ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை கையிலோ, பைக், காரிலோ எடுத்த செல்லும்போது பறக்கும்படையினர், போலீசார் தடுத்து நிறுத்தினால் அதற்கான ஆவணங்களை கட்டாயம் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்த கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். மேலும் ரூ.10 லட்சம் மற்றும் அதற்கு அதிகமான பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அதுபற்றி உடனடியாக வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படும்.
இப்படி பணம் பறிமுதல் செய்யப்படும்போது பணத்துக்கான ஆவணத்தை வீடு, அலுவலகங்களுக்கு சென்று எடுத்து வந்து காண்பிக்கலாம். அது சரியான ஆவணமாக இருக்கும்பட்சத்தில் உங்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மீண்டும் ஒப்படைக்கப்படும். இல்லாவிட்டால் அந்த பண பறிமுதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications