3 புரட்சி திட்டங்களை தந்த திமுக! அழிவை நோக்கி இந்தியாவை இழுத்துவிடும் பாஜக- ப.சிதம்பரம் ”சரவெடி”
சென்னை: தமிழ்நாட்டில் ஆளும் திமுக ஆட்சி மகளிர் உதவித் தொகை, பெண்கள் கல்லூரியில் படிக்க மாதம் ரூ1,000 உதவி; காலை உணவுத் திட்டம் என 3 புரட்சிகரமான திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பாராட்டு தெரிவித்தார். மேலும் இந்தியாவை மத்தியில் ஆளும் பாஜக அழிவுப் பாதையை நோக்கி இழுத்துச் செல்கிறது எனவும் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.
தென் சென்னை லோக்சபா தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது: 3 ஆண்டுகாலத்தில் திமுக ஆட்சியில் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. இதில் சந்தேகமே இல்லை. நிதிப் பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை கணிசமாக குறைந்துள்ளது. இந்தியாவின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கூறுகையில், சீனாவில் குழப்பம் இருக்கிறது; சீனாவில் இருந்து வெளியேறும் முதலீடு வியட்நாமுக்குப் போகிறது. ஆனால் கணிசமாக இந்தியாவுக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்கு வருகிறது. அதாவது தொடக்கத்தில் வியட்நாமுக்கு போன இந்த முதலீடுகள் பின்னர் இந்தியாவை பார்த்து அதில் தமிழ்நாட்டைத் தேர்வு செய்துள்ளன. இதற்கு காரணம், தமிழ்நாட்டின் நிதி நிலைமை சீராக இருப்பதுதான்.

3 புரட்சிகரமான திட்டங்கள்: அத்துடன் திமுகவுக்கே உரிய பாணியில் நலத் திட்டங்களை அமல்படுத்துகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மகளிர் உரிமைத் தொகை- 1.15 கோடி குடும்பங்களில் பெண்களுக்கு ரூ1,000 மாதம் உதவித் தொகை போய்ச் சேருகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் பெண்கள், அரசு கல்லூரிகளில் சேர்ந்தால் மாதம் ரூ1,000 உதவித் தொகை- புதுமைப் பெண் திட்டம். இது மிகப் பெரிய புரட்சி. பலபேருக்கு இதன் வீரியம் தெரியவே இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சைக்கிள் கொடுத்தது ஒரு சுதந்திரத் திட்டம். பின்னர் திமுக ஆட்சியில், நகரப் பேருந்துகளில் இலவசம் என்றனர்.. இது சுதந்திரத்தை பல மடங்கு விரிவடையச் செய்தது. இப்ப கல்லூரி செல்லும் பெண்களுக்கு ரூ1,000 தருவது என்பது மிகப் பெரிய சுதந்திரம். இதை எல்லாம் விழா எடுத்து கொண்டாடனும். அடுத்தது காலை உணவுத் திட்டம். ஏழை குழந்தைகள் வெறும் வயிற்றுடன் பசித்த வயிற்றுடன் பள்ளிக்கு வருகிறார்கள். காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்தது போல மற்றொரு புரட்சிகரமான திட்டம் இது. இதை திமுக அரசு செய்துள்ளது. இந்த 3 திட்டங்கள், புரட்சிகரமானவை. இதை ஏன் முந்தைய அதிமுக அரசு செய்யவில்லை? இந்த 3 திட்டங்களை நிறைவேற்றியதற்காகவே திமுக அரசை நான் பாராட்டுவேன்.
ரூ3722 கோடி அபராதம்: ஜனநாயகத்தைக் காப்பாற்ற இதுதான் கடைசி வாய்ப்பாக இருக்கும். 139 ஆண்டுகால காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்குகிறார்கள். அரசியல் கட்சிக்கு வருமான வரியே கிடையாது. எந்த ஒரு அரசியல் கட்சியும் வருமான வரி கட்டியதே கிடையாது. கட்ட வேண்டியதும் கிடையாது. சட்டத்தில் அந்த மாதிரி விதியே கிடையாது. இருந்தாலும் 10, 20 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் கணக்குகளில் பிழை இருப்பதாக கூறி இப்ப ரூ3722 கோடி வரி, வட்டி, அபராதம் செலுத்த வேண்டும் என்கின்றனர். பாவம்.. இந்த கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ11 கோடி அபராதம். கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் ரூ11 கோடியை கண்ணால் கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
காங்கிரஸை அழிக்க சதி: எதற்காக இதெல்லாம்? தேசம் முழுவதும் அனைத்து கட்சிகளையும் ஒழிக்க வேண்டும் என்பதுதான். நாடு முழுவதும் தடம் பதித்துள்ள காங்கிரஸ் கட்சியை முதலில் ஒழித்தாக வேண்டும் என நினைக்கிறது பாஜக. தமிழ்நாட்டில் திமுகதான் வலிமையான முதல் கட்சி. ஆனால் திமுக, மாநில கட்சி. மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் வலிமையான கட்சி- ஆனால் மாநில கட்சி. பஞ்சாப்பில் அகாலி தளம் வலிமையான மாநில கட்சி. ஒடிஷாவில் பிஜூ ஜனதா தளம் வலிமையான மாநிலக் கட்சி. ஆனால் நாடு முழுவதும் தடம் பதித்தது காங்கிரஸ் கட்சி. ஆகையால் காங்கிரஸ் கட்சியை ஒடுக்கி அழித்துவிட நினைக்கிறது பாஜக.
மாநில கட்சிகள் ஒழிப்பு: முதலில் காங்கிரஸை அழித்துவிட்டால் பின்னர் மாநில கட்சிகளை ஒவ்வொன்றாக விளையாடி தூக்கி எறிந்துவிடலாம் என நினைக்கிறது பாஜக. இதற்கு முன்னோட்டமாகத்தான் ஜார்க்கண்ட் முதல்வரை கைது செய்கிறார்கள்; டெல்லி முதல்வரை கைது செய்கிறார்கள். நானும் சட்டம் படித்தவன். ஆனால் அண்மைக் காலத்தில் நடப்பதைப் பார்க்கும் போது சட்டம் படித்ததே மறந்துவிட்டது எனக்கு.
முதல்வரை கைது செய்ய முடியுமா?: 2 ஆண்டுகளுக்கு முன்னர், நாட்டின் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை கைது செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு இருக்கிறது என யாராலும் கற்பனை செய்து பார்த்திருக்க முடியுமா? சினிமாவில் கூட நான் பார்த்தது கிடையாது. ஒரு முதலமைச்சரை மத்திய அரசு கைது செய்ய முடியுமா? யோசித்துப் பாருங்கள். கெஜ்ரிவாலை 3 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்ய முடியும் என்றால் 3 மாதங்களிலேயே கைது செய்திருக்கலாமே? 3 வாரத்தில், 3 நாட்களில் ஏன் 3 மணி நேரத்திலேயே கூட கைது செய்ய முடியும்தானே? அப்படியானால் எது ஜனநாயகம்? எதற்காக ஜனநாயகத் திருவிழா எனும் தேர்தல்?
அழிவுப் பாதையில் இந்தியா: இந்தியா இப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறது தெரியுமா? பலநாடுகளைப் போல இந்தியா அழிவுப் பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. ரஷ்யாவில் இருக்கிற ஜனாதிபதி மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் உருவாக்கிய ஜனாதிபதி வேட்பாளர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகிறார். அந்தமான் சிறை போல சைபீரிய சிறைக்கு அனுப்பப்பட்ட அந்த எதிர்க்கட்சித் தலைவர் கீழே விழுந்து இறந்தும் போனார் என்கிறது ரஷ்யா. இதே நிலைமைதான் வெனிசுலேவியாவிலும்.. இந்தப் பாதையில்தான் இந்தியா போகிறது.
ஒரே நாடு- ஒரே தேர்தல்- ஒரே கட்சி- ஒரே மோடி: ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது கண்கட்டி வித்தை. இது எங்கே போய் முடியும் தெரியுமா? ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி என முடியும். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி, ஒரே தலைவர்; ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கட்சி , ஒரே தலைவர், ஒரே மோடி என போய் முடியும். நரேந்திர மோடி என்பவர் நிரந்தர மோடியாக மாறிவிடுவார். சீனாவிலும் ரஷ்யாவிலும் வாழ்நாள் முழுவதும் ஜனாதிபதிகளாக இருக்கின்றனர். கம்போடியா, வியட்நாம், பர்மா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் எல்லாம் வாழ்நாள் முழுவதும்தான் ஜனாதிபதி, பிரதமர். இந்தப் பாதையில்தான் இந்தியா போய்க் கொண்டிருக்கிறது. ஆகையால் இந்த முறை ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications