கூட்டணி உறுதியா? என்றதும் வேலுமணி தந்த ரியாக்சன்! அதிமுகவில் ஐக்கியமாகும் தேமுதிக? திரும்பும் பாஜக
சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தலைவர்கள் இன்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது இல்லம் தேடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அரைமணிநேரம் வரை இந்த சந்திப்பு நடந்தது. அதன்பிறகு தேமுதிகவுடன் கூட்டணி உறுதியா? என்ற கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தந்த ரியாக்சன் பேசும் பொருளாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. திமுக தனது கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை விரைவாக நடத்தி வருகிறது. மாறாக எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக சார்பில் பாமகவிடம் மட்டும் கூட்டணி பேச்சுவார்த்தை வெளிப்படையாக நடத்தப்பட்டுள்ளது. பாமக தலைவர் ராமதாசை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் சந்தித்து பேசினார். இருப்பினும் இருகட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை.

அதேபோல் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸை கூட்டணியில் இழுக்க அதிமுக முயன்று வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் இன்று அதிமுக தலைவர்கள் மறைந்த நடிகர் விஜயகாந்தின் கட்சியான தேமுதிகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர்.
தேமுதிக வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் இணையலாம் என கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் இன்று அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி, தங்கமணி, கேபி அன்பழகன், பெஞ்சமின் உள்ளிட்டவர்கள் சென்னை சாலி கிராமத்தில் உள்ள நடிகர் விஜயகாந்த் வீட்டுக்கு இன்று சென்றனர்.
அங்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவர்கள் சந்தித்தனர். இந்த வேளையில் பிரேமலதாவின் சகோதரர் சுதீஷ் உடனிருந்தார். இவர்கள் வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக விவாதித்தனர். தேமுதிக, அதிமுக கூட்டணியில் இணைய வேண்டும் என அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதேபோல் பிரேமலதாவும் அதிமுக கூட்டணியில் இணைய சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அதுபற்றிய விபரம் எதுவும் வெளியாகவில்லை. ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. தேமுதிக-அதிமுக தலைவர்கள் இடையேயான சந்திப்பு என்பது மொத்தம் அரை மணிநேரம் வரை நடந்துள்ளது.
அதன்பிறகு அதிமுக தலைவர்கள் வெளியே வந்தனர். முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணையின்படி தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இல்லத்துக்கு வந்து கட்சியின் பொதுசெயலாளர் பிரேமலதா சகோதரியை சந்தித்தோம். சுதீஷ் உடன் இருந்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடத்தப்பட்டது. தேர்தல் தொடர்பாக இருபக்கமும் குழு அமைக்கப்படும். அந்த குழு மூலம் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது'' என்றார்.
இந்த வேளையில் பத்திரிகையாளர்கள், ‛‛கூட்டணி உறுதி என்று எடுத்து கொள்ளலாமா?'' என்ற கேள்வியை முன்வைத்தார். இந்த கேள்வியை கேட்டவுடன் எஸ்பி வேலுமணி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நோக்கில் பிற தலைவர்களை திரும்பி பார்த்து சிரித்தார். அதன்பிறகு அவர், ‛‛நேரடியாக வந்து சந்தித்து பேசினோம் என்றால் நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். இன்று மரியாதை நிமித்தமாக பேசினோம். கூட்டணி பற்றி இருதரப்பும் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுப்போம்'' என புறப்பட்டு சென்றார்.
இருப்பினும் கூட ‛கூட்டணி உறுதி என்று எடுத்து கொள்ளலாமா' என்ற கேள்வியின்போது எஸ்பி வேலுமணி சிரித்தபடி கொடுத்த பதில் என்பது அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய அதிக வாய்ப்புள்ளதை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இன்றைய சந்திப்பு பற்றி இன்னும் தேமுதிக தரப்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை. இதற்கிடையே இந்த நடவடிக்கையை பாஜக உன்னிப்பாக கவனிக்க தொடங்கி உள்ளது. ஏனென்றால் தேமுதிகவை, பாஜகவும் கூட்டணியில் இணைக்க விரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications