மத்திய அரசு துரோகம் செய்கிறது.. திமுகவிற்கு எங்களை பார்த்து பயம்.. இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்
சென்னை: அதிமுகவுக்கு பயந்து திமுக தொகுதி பங்கீட்டை அவசர அவசரமாக செய்கிறது என்றும், லோக்சபா தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கிறது. எனவே அதிமுக கூட்டணியில் அப்போது யார் யார் இணைகிறார்கள் என்று பாருங்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அதிமுக மீதான அச்சத்தால் திமுக அவசர அவசரமாக தொகுதி பங்கீட்டை முடிக்கிறது. லோக்சபா தேர்தல் வரும் மார்ச் மாதம் 2 வது வாரத்தில் அறிவிப்பு வெளியாகலாம். எனவே இன்னும் 10 நாள் இருக்கிறது. இன்னும் 10 நாட்கள் இருக்கின்ற நிலையிலே, கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்.. கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்து தான் ஆக வேண்டும்.

எனவே இன்னும் 10 நாட்களிலே யார் யார் எங்கு வந்து சேர்கிறார்கள் என்று பாருங்கள். அது வரைக்கும் இண்டெர்வேல்.. மத்திய அரசு, மாநிலங்களுக்கான நிதி பகிர்வாக ரூ1.42 லட்சம் கோடி வரிப்பகிர்வு நிதியை வழங்கி இருக்கிறது. இதில், நம் தமிழகத்திற்கு பார்த்தோமானால், ரூ. 5,797 கோடி வரிப் பகிர்வு நிதியாக வழங்கி இருக்கிறது. ஆனால் உத்தர பிரதேசத்திற்கு பார்த்தீர்கள் என்றால், ரூ. 25,495 கோடியை வரிப் பகிர்வு நிதியாக மத்திய அரசு வழங்கியிருக்கிறது.
நம்முடைய மாநிலத்தில் இருந்து வரி வருவாயாக மத்திய அரசுக்கு போவது பல லட்சம் கோடி ரூபாய். ஆனால் மத்திய அரசு நமக்கு திருப்பி அளிப்பது எப்படியென்றால் யானை பசிக்கு சோளப்பொறி போலத்தான். இப்படி மத்திய அரசு துரோகம் செய்யக்கூடாது. காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறது. அப்போது 7000 கோடி ரூபாய் மத்திய அரசு தமிழகத்திற்கு தரவேண்டி இருந்தது.
ஜெயலலிதா கேட்டு பார்த்தார். ஜெயலலிதா சார்பில் நாங்களும் கேட்டு பார்த்தோம். ஆனாலும் அந்த ரூபாயை மத்திய அரசு வழங்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்றால், அதிமுக தானே ஆட்சி செய்கிறது. நாம ஏன் வாங்கி கொடுக்க வேண்டும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி. ஆனால் எங்களுக்கு அந்த காழ்ப்புணர்ச்சி கிடையாது.
மக்கள் நலன் சார்ந்து அடிப்படையில் மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடம், பாரபட்ச தன்மையுடன் வெண்ணெய் ஒரு கண்ணிலும், சுண்ணாம்பு ஒரு கண்ணிலும், வடக்குக்கு ஒரு நிலையும், தமிழ்நாட்டுக்கு ஒரு நிலையையும் மத்திய அரசு ஏற்படுத்தக்கூடாது. வரி பகிர்வை பொறுத்தவரை சீரானதாக இருக்க வேண்டும். சமநிலையுடன் இருக்க வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. சும்மா சொல்வார்களே தவிர எந்த அழுத்தமும் கொடுக்க மாட்டார்கள். எனவே முழுக்க முழுக்க தமிழ்நாட்டை வஞ்சிக்கிற, தமிழ் மக்களை வஞ்சிக்கிற கட்சி என்றால் அது திமுக தான். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications