"பாஜக உடன் கூட்டணி அமைக்கும் பாமக!" அதிகாரப்பூர்வ தகவல்- ஒரே நாளில் மொத்தமாக மாறிய அரசியல் களம்
சென்னை: லோக்சபா தேர்தலில் அதிமுக பாமக இடையே கூட்டணி இறுதியாகும் எனச் சொல்லப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் பாஜக பாமக கூட்டணி இப்போது இறுதியாகி இருக்கிறது.
நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த சனிக்கிழமை வெளியிட்டார். மொத்தம் 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் நிலையில் ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பொதுவாக இரண்டாம் கட்டத்தில் தான் லோக்சபா தேர்தல் நடக்கும். ஆனால், இந்த முறை முதல் கட்டத்திலேயே, அதாவது ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. ஒரு மாதம் மட்டுமே அவகாசம் இருப்பதால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தி உள்ளது.
திமுக கூட்டணி: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஏற்கனவே திமுக கூட்டணியை உறுதி செய்து தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துவிட்டது. ஆனால், அதிமுகவும் சரி, பாஜகவும் சரி இன்னும் கூட்டணியை உறுதி செய்யவில்லை. இந்த இரு கட்சிகளுமே பாமகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வரத் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அதிமுக பாமக இடையே கூட்டணி இறுதியாக உள்ளதாக நேற்று தகவல் வெளியானது.
இதற்கிடையே ஒரே நாளில் மொத்தமாக நிலைமை மாறி இருக்கிறது. லோக்சபா தேர்தலில் பாஜக உடன் பாமக கூட்டணி அமைக்கிறது. இதை பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் உறுதி செய்துள்ளார்.
கூட்டணி உறுதி: பாஜகவுடன் பாமக கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிடும் என்ற பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியை அன்புமணி ராமதாஸ் சந்திக்க வாய்ப்புள்ளது என்றும் பாஜக உடன் கூட்டணி என்பது ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் சேர்ந்து எடுத்த முடிவு தான் என்றும் அவர் தெரிவித்தார்.
என்ன நடந்தது: முன்னதாக கூட்டணி தொடர்பாக பாமக அதிமுக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடந்தது. இதன் காரணமாகவே முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் 2 முறை ராமதாஸை சந்தித்துப் பேசியதாகவும் கூறப்பட்டது, ராமதாஸுக்கு அதிமுக உடன் கூட்டணி அமைக்கவே விருப்பம் என்ற போதிலும் அவரது மகனும் அக்கட்சியின் தலைவருமான அன்புமணிக்குத் தான் பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருந்துள்ளது.
அவர் டெல்லி வரை கூட சென்று பாஜக தலைவர்களுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் பாமக இந்த முறை யாருடன் கூட்டணி என்பதில் சஸ்பெண்ஸ் இருந்தே வந்தது. இந்த நேரத்தில் தான எடப்பாடி பழனிசாமியை பாமக எம்எல்ஏ அருள் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.
இதன் மூலம் அதிமுக பாமக கூட்டணி இறுதியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் திங்கள்கிழமை யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒரு அறிவிப்பை பாமக வெளியிட்டுள்ளது. அதாவது பாமக மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைக்க உள்ளது. எத்தனை இடங்கள் பாமகவுக்கு ஒதுக்கப்படும். எந்த இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்த கூட்டணி அறிவிப்பு லோக்சபா தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications