2 லோக்சபா சீட் ப்ளஸ் 1 ராஜ்யசபா சீட். தனிச் சின்னத்தில் போட்டி- திமுகவிடம் கறாராக சொன்ன மதிமுக!
சென்னை: லோக்சபா தேர்தலில் மதிமுகவுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு தொடர்பாக திமுக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். 2 லோக்சபா தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட்டை திமுகவிடம் கேட்ட மதிமுக, தனிச் சின்னத்தில்தான் போட்டியிடுவோம் எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளதாம்.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திமுக கூட்டணியில் திமுகவுக்கு அடுத்த பெரிய கட்சியான காங்கிரஸுடன் முதலில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இப்பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் 21 தொகுதிகளை கேட்டு பட்டியல் கொடுத்ததாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இதனை திட்டவட்டமாக மறுத்தது. இதன்பின்னரே காங்கிரஸுக்கு வெறும் 4 அல்லது 5 தொகுதிகளைத்தான் திமுக கொடுக்க முன்வந்ததாகவும் இது அக்கட்சி தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்ததாகவும் தகவல்கள் கசிந்தன. இதனால் திமுகவுடன் முட்டி மோதி எப்படியாவது 2019 தேர்தலில் போட்டியிட்ட 9 தொகுதிகள் அல்லது வெற்றி பெற்ற 8 தொகுதிகளைப் பெறுவது என்பதில் தீவிரமாக இருக்கிறது காங்கிரஸ்.
இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் திமுக குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். 2019 தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த 2 தொகுதிகளையும் அக்கட்சி வென்றது. இம்முறை 3 தொகுதிகளாவது ஒதுக்க வேண்டும் என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை. ஆனால் திமுக தரப்பு 1-ல் இருந்து கணக்கை தொடங்கி இருக்கிறது என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.
காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தொடர்ந்து மதிமுகவுக்கு பேச்சுவார்த்தைக்கு வர திமுக அழைப்பு விடுத்தது. இதனடிப்படையில் சென்னையில் இன்று திமுக குழுவினருடன் மதிமுக குழு பேச்சுவார்த்தை நடத்தியது. மதிமுகவைப் பொறுத்தவரை 6 தொகுதிகளை தேர்வு செய்து எப்படியாவது 2 தொகுதிகளைப் பெறுவது என்பதில் உறுதியாக உள்ளது. அதிலும் இம்முறை திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாமல் தங்களது பம்பரம் அல்லது தனி சின்னத்தில் போட்டியிட்டாக வேண்டும் என்பதில் மதிமுக உறுதியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications