சிதம்பரத்தில் டெபாசிட் காலி.. பாஜகவின் வாக்கு சதவிகிதம் ஒரு மாயை.. சீனுக்குள் வந்த திருமாவளவன்!
சென்னை : சிதம்பரம் தொகுதி மட்டுமல்லாமல் பாஜக போட்டியிட்ட பல தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்துள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்த லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக 2004க்கு பின் தமிழ்நாட்டின் அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் வென்ற கட்சி என்ற பெயர் திமுகவுக்கு கிடைத்துள்ளது. இதனிடையே இந்த லோக்சபா தேர்தலில் பல்வேறு கட்சிகளின் வாக்கு சதவிகிதமும் அதிகரித்துள்ளது.

அதிமுகவின் வாக்கு சதவிகிதம் சுமார் 22ஆக உயர்ந்துள்ள நிலையில், பாஜகவின் வாக்கு சதவிகிதம் சுமார் 12 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இதனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதிமுகவை விடவும் அதிக வாக்குகளை இம்முறை கைப்பற்றியுள்ளோம். ஏராளமான தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி 2வது இடத்திற்கு வந்துள்ளோம் என்று கூறினார்.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பாஜக தனித்துப் போட்டியிட்டு இவ்வளவு வாக்கு சதவிகிதத்தை பெற்றிருந்தால் அவர்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட ஏராளமான கட்சிகளுடன் இணைந்து வாக்குகளை பெற்றுள்ளார்கள். இவை தற்காலிகமான வாக்குகள் தான். பாஜகவுக்கு உரித்தான வாக்குகள் அல்ல.
சிதம்பரம் தொகுதியில் கூட பாஜக போட்டியிட்டது. 1.5 லட்சம் வாக்குகள் பெற்றபோதும் டெபாசிட் இழந்துள்ளார்கள். அந்த வாக்குகள் பாஜகவின் வாக்குகள் அல்ல. அது பாமகவின் வாக்குகள் தான். அதனால் பாஜகவின் வாக்கு சதவிகிதம் என்பதே ஒரு மாயை. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை என்பதை தான் தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது.
பாஜக போட்டியிட்ட ஒரு சில இடங்களில் தான் 2 லட்சம் வாக்குகள் பெற்று டெபாசிட்டை காப்பாற்றி இருக்கிறார்கள். பெரும்பாலான இடங்களில் டெபாசிட்டை காப்பாற்ற முடியவில்லை. இந்த முறை பாஜக பிற கட்சிகளின் தயவை நாட வேண்டிய நெருக்கடி நிலைக்கு தள்ளியிருக்கிறார்கள். இந்த தேர்தல் முடிவு என்பது பாஜகவுக்கு எதிராக மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பு என்பதை இந்தியா கூட்டணி உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications