முதல்வர் ஸ்டாலின் சொன்ன மும்பை கூட்டத்தில் முக்கிய முடிவு "இந்தியா" அணி பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு?
சென்னை: "இந்தியா" கூட்டணியின் மும்பை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட இருக்கிறது என தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதுதான் இப்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.
எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி கூட்டம் வரும் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மும்பையில் நடைபெற உள்ளது. "இந்தியா" கூட்டணியின் 3-வது கூட்டம் இது. பீகார் தலைநகர் பாட்னா, கர்நாடகா மாநிலம் பெங்களூரில் ஏற்கனவே 2 கூட்டங்களை "இந்தியா" கூட்டணி நடத்தி இருக்கிறது. பெங்களூர் கூட்டத்தில்தான் "இந்தியா" கூட்டணி என பெயர் வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மும்பையில் நடைபெறும் "இந்தியா" கூட்டணி கூட்டத்தில் குறைந்தபட்ச பொது செயல் திட்டம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்பட்டு வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் பேச்சு: இதனிடையே நாகையில் நேற்று பேசிய தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மும்பையில் நடைபெறும் "இந்தியா" கூட்டணி கூட்டம் குறித்து விரிவாக பேசினார். மும்பை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்படலாம் எனவும் கூறியிருந்தார். இதனால் மும்பை கூட்டத்தில் என்ன முடிவு அறிவிக்கப்படும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

ராகுல் vs நிதிஷ்: மும்பையில் "இந்தியா" கூட்டணி கூட்டம் நடைபெறும் நிலையில் அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பிரதமர் வேட்பாளர் குறித்து மாறுபட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் முதல்வராக ராஜஸ்தானின் அசோக் கெலாட், சத்தீஸ்கரின் பூபேஷ் பாகல் ஆகியோர் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்கின்றனர். ஆனால் இதற்கு பதிலடி தரும் வகையில் உ.பி, பீகார், சத்தீஸ்கர் மாநில மக்கள், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரையே பிரதமராக்க விரும்புகின்றனர் என ஜேடியூ மூத்த தலைவரும் பீகார் அமைச்சருமான ஸ்வரண் குமார் தெரிவித்திருந்தார்.
பிரதமர் வேட்பாளர்: இதனடிப்படையில் மும்பையில் நடைபெறும் "இந்தியா" கூட்டணி கூட்டத்தில் அதன் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதம் களைகட்டக் கூடும் என தெரிகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்தி வரும் நிலையில் அதற்கு பதிலடி தரும் வகையில் விரைவாகவே பிரதமர் வேட்பாளரை "இந்தியா" கூட்டணி அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை எனவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் "இந்தியா" கூட்டணியில் அவ்வளவு எளிதாக கருத்து ஒற்றுமை உருவாகிவிடாது எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications