Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மோடி, கெஜ்ரிவால், மமதா தொடங்கி ராகுல் வரை- கூட்டணி புயலில் சிக்கி கரைசேர தத்தளிக்கும் கமல்ஹாசன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி ராகுல் காந்தி வரை கூட்டணிக்கான நட்புக்கரம் நீட்டுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன். தேர்தல் கூட்டணி தொடர்பாக தெளிவான முடிவுக்கு வர முடியாமல் கமல்ஹாசன் தொடர்ந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறார் என்பதையே இத்தகைய சந்திப்புகள் வெளிப்படுத்துகின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Loksabha Elections 2024: Kamal Haasans MNM will join hands with DMK-Congress alliance?

2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றியை பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மத்திய அரசு அதிகாரத்தைக் கைப்பற்றியது. பிரதமரா மோடி பதவியேற்ற சில மாதங்களிலேயே தூய்மை இந்தியா- ஸ்வச் பாரதம் திட்டத்தில் இணைய நடிகர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பையும் ஏற்றுக் கொண்ட கமல்ஹாசன், மோடியின் தூதராக தூய்மைப் பணி திட்டங்களில் தம்மையும் தமது சகாக்களையும் ஈடுபடுத்தினார். அப்போது கமல்ஹாசனுடன் இணைந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் தமிழக பாஜக தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன். இதனால் கமல்ஹாசன் அப்போது பாஜகவுக்கு நெருக்கமானவராக கருதப்பட்டார்.

ஆனால் பிரதமர் மோடி, பாஜகவுக்கு நெருக்கமானவர் கமல்ஹாசன் என்கிற பிம்பம் சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. பிரதமர் மோடியி தூய்மை இந்தியா திட்டத்தின் தூதர்களுக்கு 2015-ல் டெல்லியில் ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜி தேநீர் விருந்து அளித்தார். அந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனும் பங்கேற்றார். அதே தருணத்தில் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கமல்ஹாசன் சந்தித்து பேச அரசியல் களம் அதிரி புதிரியானது. பாஜக, காங்கிரஸுக்கு மாற்றாக உருவெடுக்கப் போகிறதா? அல்லது பாஜகவின் பி டீமாக காங்கிரஸை அழிக்க களமிறக்கப்பட்டதா? என ஆம் ஆத்மி மீது கருத்துகள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட சூழ்நிலையில் கமல்ஹாசனின் இந்த சந்திப்பு பெரிதும் பேசப்பட்டது. தமிழகத்தில் ஆம் ஆத்மிக்கு தலைவராக கமல்ஹாசன் களமிறங்கக் கூடும் என்கிற யூகங்களும் முன்வைக்கப்பட்டன.

2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கும் வரை இப்படித்தான் ஆம் ஆத்மியின் முகமாக கமல்ஹாசன் வெளிப்படுத்திக் கொண்டார். சென்னைக்கு வந்தார் அரவிந்த் கெஜ்ரிவால்.. கமல்ஹாசனை அவரது வீட்டில் சந்தித்தார். 2017-ல் இந்த சந்திப்பு நடந்த போது, நான் கமல்ஹசானின் ரசிகன். ஊழலுக்கு எதிரானவர்கள் அனைவருமே ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கமல்ஹாசனும் ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து வருகிறார். அதனால் அவரைச் சந்தித்தேன். கமல்ஹாசன் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும். ஊழலுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம் என கூறினார் அரவிந்த் கெஜ்ரிவால். இந்த சந்திப்புகளுக்கு முன்னர் கமல்ஹாசன் ராகுல் காந்தி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களை சந்தித்தாலும் கெஜ்ரிவாலுடனான உறவு மிக முக்கியமானதாகவே பார்க்கப்பட்டது. இது தொடர்பாக கமல்ஹாசன் கூறுகையில், ஊழலுக்கு எதிரான யாரும் எனக்கு உறவினர்களாகி விடுகிறார்கள் என்பது தான் உண்மை. அந்த உறவு தான் இங்கு தொடர்கிறது என குறிப்பிட்டிருந்தார்.

2018-ம் ஆண்டே லோக்சபா தேர்தல் ஜூரம் அடித்துக் கொண்டிருந்தது. 2019 லோக்சபா தேர்தலுக்காக திமுக கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்துக் கொண்டு இறுதிப்படுத்தி வந்தது. அப்போது கமல்ஹாசன் தெரிவித்த கருத்துகள், திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு போகப் போகிறாரோ? என்கிற விவாதத்தைக் கிளப்பியது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழாவின் போது இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. சோனியா சென்னை வரும் போது, திமுக அணியில் கமல்ஹாசன் இணைவார் எனெஅ செய்திகள் பரவின. இதனை திட்டவட்டமாக மறுத்து கமல்ஹாசன் அறிக்கையும் வெளியிட்டார். லோக்சபா தேர்தல் நெருங்கிய தருணத்தில், திமுக- அதிமுக கட்சிகளுடன் கூட்டணியே கிடையாது என்றார்.

பின்னர் திடீரென மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா சென்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மமதா பானர்ஜியை சந்தித்தார் கமல்ஹாசன். தமிழகத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே இல்லாத போதும் 2019 தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை எதிர்கொண்டார் கமல்ஹாசன். அத்தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. கமல்ஹாசனின் மநீம சுமார் 3.72% வாக்குகளைப் பெற்றது. கமல்ஹாசன் கட்சியின் இந்த வாக்குகள் அனைவரையும் திரும்பிப் பார்க்கவும் வைத்தது.

இதன்பின்னர் 2021-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் களம்.. அப்போதும் கமல்ஹாசன், அந்தப் பக்கமா? இந்தப் பக்கமா? என்கிற கூட்டணி குழப்பங்கள் ரெக்கை கட்டிப் பறந்தன. ஆனால் ஒருவழியாக கமல்ஹாசனும் ஒரு கூட்டணியை அமைத்தார். அந்த கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி இடம்பெற்றன. கமல்ஹாசனின் மநீம கட்சியானது 154 தொகுதிகளில் போட்டியிட்டது. மொத்தம் 2.45% ஓட்டுகளைத்தான் மநீம பெற்றது. வாக்கு எண்ணிக்கை சதவீதம் அடிப்படையில் மநீம, 8-வது இடத்தில் இருந்தது. கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியைத் தழுவினார்.

இதன்பின்னர் மநீம என்ற கட்சி கலகலகத்துப் போனது. அக்கட்சியின் பெரும்பாலான 2-ம் கட்ட தலைவர்கள் மநீமவை விட்டு வெளியேறி திமுக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்தனர். இதனால் மநீமவின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியானது. அதேநேரத்தில் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன், காங்கிரஸின் பி டீமாகத்தான் செயல்பட்டார்; அதிமுக- பாஜகவுக்கான வாக்குகளைப் பிரிக்க கமல்ஹாசன் களமிறக்கப்பட்டார் என்கிற விமர்சனங்களும் கூட இப்போதும் முன்வைக்கப்பட்டன. இந்த விமர்சனங்களுக்கு அப்போது ஆதாரங்கள் ஏதும் இல்லை என்றே நிராரிக்கப்பட்டன.

ஆனால் கமல்ஹாசனின் தொடர் நடவடிக்கைகள், கடைசியாக 2024 லோக்சபா தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் ஐக்கியமாவதை உறுதிப்படுத்தும் வகையிலான போக்குகள், ஆஹா, கமல்ஹாசன் அன்று காங்கிரஸின் பி டீமாகத்தான் இருந்தாரோ என்பதை உறுதிப்படுத்துகின்றன என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதல் இணக்கமான மற்றும் நெருக்கமா உறவைத்தான் கடைபிடித்து வருகிறார் கமல்ஹாசன். அரசியல் ரீதியாகவும் சினிமா ரீதியாகவும் இந்த இணக்கம் நீடிக்கிறது. இதன் அடுத்த கட்டமாக ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றது, ராகுல் காந்தியுடனான ஆலோசனைகள் என்பவை எல்லாம் கமல்ஹாசனின் அடுத்த பாதை எது என்பதை யூகிக்கக் கூடியதாக இருக்கிறது. 2024 லோக்சபா தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசனின் மநீம இடம் பெறுவதும் அக்கூட்டணியில் ஒன்று அல்லது 2 தொகுதிகளைப் பெறுவதும் ஏறத்தாழ உறுதியாகி இருக்கிறது. இப்படியும் அதை சொல்லலாம்.. நேற்று காங்கிரஸின் பி டீமாக இருந்த மநீம எனும் பூனைக்குட்டி இன்று வெளியே வந்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+