Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

39 வயதில் காதல் கல்யாணம்; நடத்தி வைத்த ஸ்டாலின்! ’விக்ரம் வேதா’ நடிகரின் வேறு முகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரம் வேதா நடிகர் ராஜ்குமார் தனது காதல் கல்யாணத்தைப் பற்றிய பல்வேறு விசயங்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் மூலம் அதிகம் அறியப்பட்டவர் நடிகர் ராஜ்குமார். விஜய் சேதுபதியின் நண்பர்களாக நடித்திருந்த நடிகர்களில் ஒருவர். பிறகு 'விக்ரம் வேதா' இவருக்கு வேறு அடையாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. சினிமா பின்புலமே இல்லாமல் திடீரென்று நடிக்க வந்து பலரையும் கவனிக்க வைத்தவர் ராஜ்குமார். அவரது பார்வையே சினிமா ரசிகர்களை யார் இவர்? என யோசிக்க வைத்தது. சில மாதங்கள் முன்பாக இவரின் திருமணத்தை முதல்வர் ஸ்டாலின் நடத்திவைத்தார்.

cm stalin tamil cinema news

ஒருவேளை இவர் சினிமா அடையாளத்தை வைத்து முதல்வரை அழைத்திருக்கலாம் எனப் பார்த்தால், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஸ்டாலின் மிகப்பெரிய ஒரு கதையைப் போட்டு உடைத்தார். ராஜ்குமாரின் தந்தை கோபால் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாகக் கருணாநிதியின் மெய்க்காப்பாளராக இருந்தவர். 1962இல் இந்தப் பணிக்காக வந்த இவர் 2005இல் இறக்கும் வரை தொடர்ந்திருக்கிறார்.

அந்தப் பழைய நினைவுகளை எல்லாம் ஸ்டாலின் அசைபோட்டுப் பேசிய போதுதான் ராஜ்குமார் பின்னால் இவ்வளவு பெரிய அரசியல் பின்புலம் இருந்தது தெரியவந்தது. இந்த ஜோடி தங்களின் மண வாழ்க்கைக்குப் பிறகு ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளனர். அதில், தங்களின் காதல், குடும்ப பின்னணி எனப் பலவற்றை ஜாலியாக பேசி இருக்கிறார் ராஜ்குமார்.

நடிகர் ராஜ்குமார் அளித்துள்ள பேட்டியில், "என் குடும்ப பின்புலம் பற்றி பலருக்கும் தெரியாது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் என் திருமணம் நடந்த பிற்பாடுதான் பலருக்கும் என் சொந்த வாழ்க்கை பற்றி அதிகம் வெளியே தெரியவந்துவிட்டது. என் அப்பா முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலராக ஒரு 35 வருடங்களாகக் கூடவே இருந்தவர். ஆனால், என் கல்யாணத்தின் போது ஸ்டாலின் பேசும்போதுதான் எங்களுக்கே அப்பா 40 வருடங்களுக்கு மேல் கலைஞருடன் இருந்திருக்கிறார் என்பது தெரிந்தது. அப்பா 2005இல் தான் இறந்தார். அதுவரையும் அவர் கலைஞருடன்தான் இருந்தார்.

cm stalin tamil cinema news

என் அப்பாவுக்குக் கலைஞர்தான் திருமணம் செய்துவைத்தார். என் மூன்று சகோதரிகளுக்கும் அவர்தான் செய்துவைத்தார். என்னை படிக்கவைத்ததுக்கூட அவர்தான். அப்பா இறந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தாலும் என் கல்யாணத்தை நடத்தி வைக்கவேண்டும் எனக் கேட்டவுடன் முதல்வர் ஸ்டாலின் அனுமதி அளித்துவிட்டார்.

நான் படித்தது மெக்கானிக்கல் இஞ்ஜினியரிங். அதைப் படிக்கும்போது அப்பா தவறிவிட்டார். எனக்கு அரசியல் அறிவு வராத காலம். அதனால் அப்பா கலைஞருடன் இருக்கிறார் என்று தெரியும். என்ன? ஏது? என்ற விவரம் அறியாத பருவம். முடித்ததும் ஜெர்மனி போய் பெரிய கார் கம்பெனியில் வேலை செய்ய வேண்டும் என கனவு கண்டேன். சினிமா பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. திடீரென்று வந்த வாய்ப்புதான் சினிமா.

cm stalin tamil cinema news

மெட்ராஸ் ஐஐடிக்காக ஒரு விளம்பர படம் எடுக்க உதவி இயக்குநராக வேலைக்குச் சேர்ந்தேன். அந்த முதல் நாளே எனக்கு இதுதான் நம் துறை என்பது புரிந்துவிட்டது. அப்படித்தான் சினிமாவுக்குள் வந்தேன்" என்கிறார். இவருக்கும் சஜுவுக்கும் கடந்த சில மாதங்கள் முன்பாக தான் திருமணம் நடந்தது. சரியான வேலை இல்லை என்பதால் 38 வயதுவரை ராஜ்குமார் கல்யாணம் செய்து கொள்வதைத் தள்ளிப் போட்டுள்ளார். இறுதியில் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சஜுவை தற்செயலாகச் சந்திக்க, அது காதலாக மலர்ந்துள்ளது.

"பல வருஷமா கல்யாணம் பண்ணாமல் காலத்தைக் கடத்திவிட்டேன். ஒரு கட்டத்திற்கு மேல் நமக்கு இனிமே பஸ் வராது. இதுதான் கடைசி பஸ் என மனம் சொன்னது. சந்தித்து ஒரு வாரத்திற்குள் காதலைச் சொல்லிவிட்டேன். எங்கள் காதலுக்கு 2 வீட்டுத் தரப்பிலும் சம்மதம் கிடைத்தால்தான் கல்யாணம் என முன்பே முடிவு செய்திருந்தோம். சஜு அவர் வீட்டில் பேசினார். உடனே சமதித்துவிட்டார்கள். நான் சினிமா ஃபீல்டு. அவர் ஐடி ஃபீல்டு. ஆகவே ஒத்துக்கொள்வார்களா எனப் பயந்தேன். இறுதியில் இரண்டு வீட்டிலும் சம்மதம் கிடைத்துவிட்டது.

cm stalin tamil cinema news

அதன்பிறகு எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. நான் சஜுவை சந்தித்த போது எனக்கு 37 வயது. அவளைப் பார்த்தால் வயது குறைவாகத் தெரிந்தது. வயது வித்தியாசம் இருவருக்குள் அதிகம் இருக்கக்கூடாது என்று நினைத்து சஜுவை விசாரித்தேன். அவள் வயதைச் சொன்ன போது நம்பிக்கை இல்லை. டிரைவிங் லைசென்ஸ் வாங்கி பார்த்து அவள் ரொம்ப சின்ன பெண் இல்லை எனத் தெரிந்த பிறகே வீட்டில் சொன்னேன்" என்கிறார் ராஜ்குமார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+