ஆக்ஷன் “ரெடி”.. வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்தில் 5 நாள் மழைக்கு வாய்ப்பு
சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இதன் காரணமாக 21 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.
தென் மாவட்டங்களில் இன்று மழைக்கான வாய்ப்பு உள்ளதாகவும், வட மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்த நிலையில் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த 18 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

கனமழைக்கு வாய்ப்பு
புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக 20 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் நவம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இடி மின்னல்
இதன் காரணமாக நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், 19 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கூறி உள்ளது.

சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருக்கிறது.

சூறாவளிக் காற்று
காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென்று என வானிலை மையம் எச்சரித்து இருக்கிறது.












Click it and Unblock the Notifications