வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - 5 நாட்களுக்கு கனமழை வெளுக்கும்
வங்கக்கடலில் 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: மத்திய வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வட மேற்குப் பகுதியில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பகல் நேரங்களில் பங்குனி மாத வெயில் போல சுட்டெரித்தாலும் மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மட்டும் நேற்று 1 செமீ மழை பதிவாகியுள்ளது பல ஊர்களில் 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோயம்புத்தூர்,தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர்,தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் சேலம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், திண்டுக்கல் , திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
14ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி,கோயம்புத்தூர்,திண்டுக்கல், திருப்பூர், தென்காசி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கக் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு வட மேற்குப் பகுதியில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும் இதன்காரணமாக 10,11ஆம் தேதிகளில் மத்திய வங்கக் கடல் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
அதே போல 12 முதல் 14ஆம் தேதி வரைக்கும் வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதி ஒடிசா, மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.
10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரைக்கும் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடை இடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications