வங்கக்கடலில் நவ.9ல் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகும்..நகரும் திசை.. பாலச்சந்திரன் சொன்னது இதுதான்
சென்னை: வங்கக் கடலில் வரும் 9ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த 3 தினங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது தென்மண்டல வானிலை இயக்குனர் பாலச்சந்திரன் பேட்டியளித்துள்ளார். தஞ்சை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
நவம்பர் 9ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் இது 10,11ஆம் தேதிகளில் தமிழகம் புதுச்சேரி திசையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்தத்தின் நகர்வு வலிமை குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும் எனவும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
தமிழக கடலோரப் பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. வட தமிழகத்தில் பெய்யத் தொடங்கிய மழை தென் மாவட்டங்கள் நோக்கி நகர்ந்து அங்கு நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று மாலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை கொட்டியது.

விட்டு விட்டு பெய்யும் மழை
சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை கொட்டியது. தென் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது. இன்று காலை முதல் பிற்பகல் வரை மழை சற்றே ஓய்வெடுத்த நிலையில் மாலைக்கு மேல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. அதேநேரத்தில், இன்று காலையில் டெல்டா மாவட்டங்களில் அதிகாலையில் இருந்தே மழை பெய்து வருகிறது.

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன், இலங்கையை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வரும் 9ஆம் தேதி உருவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

காற்றழுத்தம் நகரும் திசை
இது 10,11ஆம் தேதிகளில் தமிழகம் புதுச்சேரி திசையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்தத்தின் நகர்வு வலிமை குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும் எனவும் பாலச்சந்திரன் கூறினார். மீனவர்கள் 8, 9ஆம் தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார் என்று கூறினார்.

வடகிழக்கு பருவமழை
வடகிழக்குப் பருவமழையை பொறுத்தவரைக்கும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை பதிவான மழையின் அளவு 210 மில்லி மீட்டர். இந்த கால கட்டத்தின் இயல்பு அளவு 202 மில்லி மீட்டர். இது இயல்பை விட 4 சதவிகிதம் அதிகமாகும்.

சென்னையில் 27% அதிகம்
சென்னையை பொறுத்தவரைக்கும் பதிவான மழையின் அளவு 413 மி.மீ இந்த கால கட்டத்தில் பதிவாகும் மழையின் அளவு 325 மில்லி மீட்டர் ஆகும். இது இயல்பை விட 27 சதவிகிதம் அதிகமாகும். சென்னையைப் பொறுத்தவரை 31ஆம் தேதி வரைக்கும் 141 மில்லி மீட்டர். கால கட்டத்தில் இயல்பு அளவு 214 மில்லி மீட்டர். 48 சதவிகிதம் இயல்பை விட குறைவாகும். நவம்பர் மாதத்தில் இயல்பை விட அதிகம் மழை பெய்துள்ளதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications