அடிக்கடி பாக்கெட்ட தொட்டு பாத்துக்கங்க..பட்ஜெட்டை பதம் பார்த்த மோடி அரசு! ஈரானால் உயர்ந்த இட்லி விலை
சென்னை: ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதலால் ஏற்பட்டுள்ள சர்வதேச அரசியல் பதற்றம் இந்தியாவிலும் அதன் தாக்கத்தை ஆரம்பிக்கத் தொடங்கியுள்ளது. ஈரான் போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதன் தொடர்ச்சியாக, வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென அதிகரித்துள்ளது. இந்த உயர்வு பொதுமக்கள் வாழ்க்கையையே நேரடியாக பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலை ஒரே முறையில் ரூ.993 உயர்த்தப்பட்டிருப்பது ஓட்டல் தொழிலாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு சிலிண்டரின் விலை ரூ.3,200-ஐ கடந்துள்ளது. இதேபோல், டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களிலும் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு ஒரு நாள் நிகழ்வாக மட்டுமே நடக்கவில்லை.

கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டே வருகிறது. மார்ச் மாதத்தில் ரூ.144 உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் மேலும் ரூ.200 உயர்த்தப்பட்டது. இப்போது மீண்டும் ரூ.993 உயர்த்தப்பட்டுள்ளதால், மொத்தத்தில் வணிக சிலிண்டர் விலை சுமார் 80 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது.
எரிவாயு விலை உயர்வு
இதனால் ஓட்டல்களை நடத்துவது சிரமமான ஒன்றாக மாறிவிட்டது என்கின்றனர் உணவக உரிமையாளர்கள். இந்நிலையில், வணிக சிலிண்டர் விலை உயர்வின் நேரடி தாக்கம் உணவகங்களில் தெரிய ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே பொருட்களின் விலை உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போது எரிவாயு செலவும் அதிகரித்துள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலை உயர்த்துவதைத் தவிர ஓட்டல் உரிமையாளர்களுக்கு வேறு வழியில்லை.
ஓட்டல் செலவு
குறிப்பாக தேநீர், டிபன் வகைகள், சாதம் போன்ற அன்றாட உணவுப் பொருட்களின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கம் நேரடியாக நடுத்தர மற்றும் ஏழை மக்களின் பட்ஜெட்டை பாதிக்கக் கூடும். மேலும், உணவு வீடு தேடி கொண்டு செல்லும் சேவைகளின் கட்டணமும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், ஓட்டல்களின் செலவு அதிகரிக்கும்போது அதனை சமாளிக்க அவர்கள் கட்டணங்களை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும். இதனால் மக்களுக்கு செலவுகள் மேலும் உயரும்.
சிலிண்டர் விலை
இதே நேரத்தில், வீட்டு பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை என்பது ஓரளவு நிவாரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால், வெளியில் சாப்பிடும் மக்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். சிறிய டீ கடைகள், உணவகங்கள் போன்றவை ஏற்கனவே பொருளாதார சுமையில் இருந்த நிலையில், இந்த விலை உயர்வு அவர்களுக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது. பல இடங்களில் சிலிண்டர் தட்டுப்பாடும் நிலவுகிறது என்று கூறப்படுகிறது.
வணிக சிலிண்டர் விலை
தேவைக்கு போதுமான அளவில் சிலிண்டர்கள் கிடைக்காததால், சில சிறிய கடைகள் மூடப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே பல கடைகள் செயல்பாட்டை நிறுத்திய நிலையில், இப்போது மீண்டும் அதே நிலை திரும்புமோ என்ற அச்சம் நிலவுகிறது. சர்வதேச அரசியல் பதற்றம் இந்தியாவின் உள்ளூர் சந்தையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், வணிக சிலிண்டர் விலை உயர்வு என்பது பலத்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால், உணவுப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications