தமிழகத்தில் விரைவில் கால் பதிக்கிறது லூலூ குழுமம்! கட்டியம் கூறும் 2 நாள் துபாய் நிகழ்வுகள்!
சென்னை: அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கேரளாவை பூர்வீகமாக கொண்டு ஐக்கிய அரபு அமிரகத்தில் மிகப்பெரும் தொழிலதிபராக திகழும் யூசுப் அலியை சந்தித்து முதலீடு ஈர்ப்பு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
கேரளாவிலும், கல்ஃப் நாடுகளிலும் தனது தொழில் சாம்ராஜ்யத்தை பரந்து விரிந்து நடத்தி வரும் யூசுப் அலி, விரைவில் தமிழகத்திலும் தனது நிறுவனத்தை தொடங்குவார் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் லூலூ குழுமம் கால் பதித்தால், நேரடியாகவும் மறைமுகமாகவும் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாய் பயணம்
உலக மூதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவும், துபாய் சர்வதேச கண்காட்சியில் தமிழக அரங்கை திறந்து வைக்கவும் 4 நாள் பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலினை, வியாபார சாம்ராஜ்யத்தின் மன்னன் என வர்ணிக்கப்படும் கேரள தொழிலதிபர் யூசுப் அலி சந்தித்து பேசியிருக்கிறார். இந்தச் சந்திப்பின் போது தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

யூசுப் அலியுடன் சந்திப்பு
இதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவருடன் ஒன்றாக பயணித்து கலந்து கொண்டு வருகிறார் தொழிலதிபர் யூசுப் அலி. முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகனான சபரீசனோடும் நல்ல முறையில் இணக்கமாக பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து யூசுப் அலி விவாதித்திருக்கிறார். இதன் மூலம் விரைவில் கேரளாவில் உள்ளது போல் தமிழகத்திலும் லூலூ குழுமம் கால் பதிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சூப்பர் மார்கெட்
சூப்பர் மார்க்கெட், ஷாப்பிங் மால்கள் மூலம் உலகம் முழுவதும் குறிப்பாக அரபு நாடுகளில் தனது தொழில் சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் யூசுப் அலி, கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர். ஐக்கிய அரபு அமீரக அரசுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வரும் யூசுப் அலி மூலம் தமிழகத்திற்கு பெருமளவில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்படும் எனத் தெரிகிறது.

வேலைவாய்ப்பு
லூலூ சூப்பர் மார்கெட் நிறுவனங்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோர் உலகம் முழுவதும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இந்தச் சூழலில் தமிழகத்திலும் லூலூ குழுமம் கால் பதிப்பதை கட்டியம் கூறும் வகையில் கடந்த 2 நாட்களாக துபாய் நிகழ்வுகள் அமைந்துள்ளன.












Click it and Unblock the Notifications