அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்; தமிழ் அர்ச்சனை.. வரலாற்று சாதனை படைத்த தமிழக அரசு- கவிஞர் வைரமுத்து
சென்னை: அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்பட்டுள்ளதும் தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யப்படுவதும் தமிழக அரசின் வரலாற்று சாதனைகள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் 75வது சுதந்திர சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார் கவிஞர் வைரமுத்து. அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கவிஞர் வைரமுத்து கூறியதாவது:
கத்தியின்றி ரத்தமின்றி பெற்ற சுதந்திரம் என்ற கவிதை வாசகம் கத்தியின்றி ரத்தமின்றி பெறப்பட்டது அல்ல இந்தியாவின் சுதந்திரம். தேசிய கொடியின் கீழ் எத்தனை ரத்தம் சிந்தப்பட்டது, எத்தனை சடலங்கள் கிடந்தது, எத்தனை தியாகம் செய்யப்பட்டது என்பதை இந்தியர்கள் ஒவ்வொருவரும் நினைத்துப் பார்க்கவேண்டும்.

சுதந்திரத்துக்கான தியாகம்
தியாகம் இல்லாமல் சுதந்திரமில்லை; இந்தியர்கள் இதை நெஞ்சில் எழுதிக் கொள்வதுதான் நாட்டு மக்களுக்கு நான் விடுக்கும் செய்தியாக இருக்கும். தமிழ்நாட்டின் வரலாற்றில் இரண்டு சாதனைகளை தமிழக அரசு நிறைவேற்றி இருக்கிறது.

கோவில்களில் தமிழில் அர்ச்சனை
கடவுள் தமிழில் அர்ச்சனை செய்தால் புரிந்து கொள்ள மாட்டாரா...? இந்த பிரபஞ்சத்தைப் படைத்தவர் கடவுள் என்றால் தமிழ்மொழியையும் அவர்தானே படைத்திருக்க முடியும். அவர் படைத்த மொழியில் அர்ச்சனை செய்தால் ஒப்பாக இருக்காதா...!

தமிழ் மொழிக்கு அதிகாரம்
தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டது தான் எங்களுக்கு புரிகிறது- கடவுளுக்கு புரிகிறதா என்பது இரண்டாம் பட்சம். முதலில் மனிதனுக்கு புரிகிறதா என்பது தான் பார்க்க வேண்டும். இது தமிழ் மொழிக்கு கிடைத்த உரிமை என்று சொல்வதைவிட தமிழ் மொழிக்கு கிடைத்த அதிகாரம் என்று கூறுவேன். தமிழ் மொழியில் அர்ச்சனை என்ற திட்டத்தை நான் பெரிதும் வரவேற்கிறேன்.

அனைத்து ஜாதியினர் அர்ச்சகர்
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஆணை வழங்கப்பட்ட போது கண்ணீரோடு கவனித்தேன் தமிழ் மொழிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய உரிமை. வரலாற்றில் மிகப்பெரிய சாதனை. இவ்வாறு வைரமுத்து கூறினார்.












Click it and Unblock the Notifications