மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை சாடிய எடப்பாடி! அமைச்சர் மா.சு-க்கு வந்ததே கோபம்! சுளீர் பதிலடி
சென்னை: தலைநகர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஓமிக்ரான் கொரோனாவுக்கு பின்னர், கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. இடையில் சில காலம் திடீரென பாதிப்பு மெல்ல அதிகரித்தது.
இதையடுத்து தமிழ்நாட்டில் மீண்டும் மெகா வேக்சின் முகாம்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன்படி நேற்றைய தினம் 33ஆவது மெகா வேக்சின் முகம் நடைபெற்றது.

பூஸ்டர் டோஸ்
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 75 நாட்களுக்கு பூஸ்டோர் டோஸ் வேக்சினும் இலவசமாகப் போடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு நடத்தும் இலவச வேக்சின் முகாம் மூலம் பூஸ்டர் டோஸ் வேக்சின்களை போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. சென்னையில் மட்டும் நேற்று நடைபெற்ற மெகா வேக்சின் முகாமில் சுமார் 200 இடங்களில் இந்த மெகா வேக்சின் முகாம் நடைபெற்றது.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்த வேக்சின் முகாமை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், "தமிழக அரசு கொரோனா பாதிப்பைத் தடுக்க எல்லா முயற்சிகளையும் மிகத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் பரவலை நிலையை கண்காணித்து அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம்.

பொய் மூட்டைகள்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இந்த மகத்தான திட்டம் மூலம் எத்தனை பேர் பயனடைகிறார்கள் என்று தினசரி செய்தித்தாள்களில் வரும் செய்திகளே இதன் சாட்சி. மிகச் சமீபத்தில் கூட இது தொடர்பாகச் செய்தி வெளியாகி இருந்தது. ஆனால், இதையெல்லாம் எதையும் பார்க்காமல் எதிர்க்கட்சி தலைவர் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு உள்ளார்.

வதந்திகள்
எடப்பாடி பழனிசாமி வதந்திகளைப் பரப்பக் கூடாது. முன்னாள் முதல்வருக்கு இது அழகு இல்லை. அவர் தொடர்ச்சியாக இல்லாததையும் பொல்லாததையும் அறிக்கையாக வெளியிட்டு வருகிறார். அம்மா கிளினிக் செயல்படாததால் பொதுமக்கள் மருத்துவம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டு உள்ளதாக அப்பட்டமான பொய்யை எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். அப்படிப் பாதிக்கப்பட்டவர்களை அவரால் காட்ட முடியுமா?

எத்தனை பேர்
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 45 லட்சம் பேர் தான் பயன் பெற்றுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். ஆனால், உண்மையில் இந்த திட்டம் மூலம் இதுவரை சுமார் 83,45,942 பேர் பயன் பெற்று உள்ளனர். ஒவ்வொரு நாளும் இந்தத் திட்டம் மூலம் ஏழை மக்கள் மிகப் பெரிய அளவில் பயன் பெறுகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications