"அந்த கனவு வந்து போகுது".. அடிக்கோடிட்டு குற்றஞ்சாட்டிய மாங்காடு மாணவி- தற்கொலையில் முக்கிய குழப்பம்
சென்னை: மாங்காடு பள்ளி மாணவி பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிலையில் போலீசார் இரண்டு கோணங்களில் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.
Recommended Video
தமிழ்நாட்டில் சமீப நாட்களில் பள்ளிகளில் மாணவிகளுக்கு நேரும் பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருகிறது. அதிலும் கடந்த 2 மாதங்களில் அடுத்தடுத்து மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாணவி தொடங்கி வரிசையாக அடுத்தடுத்து மரணங்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. இந்த நிலையில்தான் தற்போது சென்னை மாங்காட்டில் 11ம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.

தற்கொலை
பாலியல் தொல்லை காரணமாக அந்த 11 வகுப்பு மாணவி நேற்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் எழுதிய கடைசி கடிதம் போலீஸ் தரப்பிடம் சிக்கி உள்ளது. அதில் அந்த மாணவி, பாலியல் அத்துமீறல்களை நிறுத்துங்கள் என்று கூறி தனது கஷ்டங்களை எழுதி இருக்கிறார். எனக்கு ஆறுதல் சொல்ல யாருமே இல்லை. உங்கள் மகன்களுக்கு பெண்களிடம் எப்படி நடக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுங்கள்.

பெண்கள்
இந்த சமூகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் தொல்லைகளை நிறுத்துங்கள். எனக்கு அந்த கனவு வந்து போகிறது. மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் கூட பாதுகாப்பான இடம் கிடையாது. கருவறையும், கல்லறையும்தான் பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்று அந்த மாணவி இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

என்ன குழப்பம்
இந்த கடிதம் காரணமாக தற்போது விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரிகள் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மாணவி எழுதிய கடிதத்தில் உறவினர்கள், ஆசிரியர்கள் என்று யாரையும் நம்ப கூடாது என்று அந்த மாணவி குறிப்பிட்டு இருக்கிறார். இதுதான் தற்போது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் இருந்து தொல்லை வந்ததா அல்லது உறவினர்களே தொல்லை கொடுத்தனரா என்று கேள்வி எழுந்துள்ளது.

போலீசார் கோணம்
இதனால் இரண்டு தரப்பில் இருந்தும் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உறவினர்கள், ஆசிரியர்கள் என்று யாரையும் நம்ப கூடாது என்பதை அந்த மாணவி அடிக்கோடிட்டு காட்டி இருப்பதுதான் போலீசுக்கு கிடைத்து இருக்கும் துப்பு. அதோடு எனக்கு இதை பற்றி சொல்ல கூட யாருமே இல்லை.. பள்ளிக்கூடமும் பாதுகாப்பு இல்லை என்று அந்த மாணவி குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு இல்லை
இதனால் அந்த மாணவிக்கு உறவினர் தரப்பில் இருந்தும், பள்ளிக்கூடத்தில் இருந்தும் பாலியல் தொல்லை வந்து இருக்கலாம் என்றே போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதனால் இரண்டு கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளியிலும் பாலியல் தொல்லையை எதிர்கொண்டு, உறவினர் தரப்பிலும் பாலியல் தொல்லையை எதிர்கொண்டு, அதை வீட்டிலும் சொல்ல முடியாமல் அந்த மாணவி தவித்து வந்ததாக நம்பப்படுகிறது.

தற்கொலை
இது தொடர்பாக போலீஸ் தரப்பிடம் விசாரித்த போது, மாணவி மரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். கடிதத்தில் இருக்கும் விஷயங்களை அடிப்படையாக வைத்து பள்ளியிலும் அதே சமயம் உறவினர்களிடமும் விசாரித்து வருகிறோம். தோழிகளிடம் ஏதாவது சொல்லி இருக்கிறாரா என்றும் விசாரித்து வருகிறோம். தற்கொலைக்கான முழு காரணம் இன்னும் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications