'மேடம் N'.. இந்தியாவில் மிகப்பெரிய பாகிஸ்தான் உளவு நெட்வொர்க்கை உருவாக்கிய பெண்? நடந்தது என்ன?
டெல்லி: பாகிஸ்தானைச் சேர்ந்த நொஷாபா மசூத் என்ற பெண், இந்தியாவில் ஊடுருவியுள்ள ISI உளவாளிக் குழுவின் பின்னணியில் மூளையாக இருந்து செயல்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் உளவாளிகள் இந்த பெண் ISI உளவாளிக் குழுவில் முக்கியப் பங்கு வகிப்பதாக கூறி உள்ளனர். ISI அமைப்பால் 'மேடம் N' என்று அழைக்கப்படும் இவர் ISI உளவாளிக் குழுவில் மிக முக்கிய தலை என்று இந்தியாவில் கைதானவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் இந்தியாவின் பஞ்சாபில் உளவு பார்த்ததாக 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் பாகிஸ்தானின் சதித்திட்டங்கள் தொடர்ந்து அங்கே அதிகரித்து வருவதையும், பஞ்சாப் அதன் இலக்காக இருப்பதையும் தெளிவாகக் காட்டுகிறது. புள்ளிவிவரங்களின்படி, பஞ்சாப் மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் உளவு அமைப்பான ISI-ன் பார்வையில் உள்ளது உறுதியாகி உள்ளது.

நொஷாபா மசூத்: மத சுற்றுலா என்ற போர்வையில் உளவுக் குழு
இந்த உளவு குழுக்களுக்கு பின்னால் நொஷாபா மசூத் என்ற பெண் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. லாகூரைச் சேர்ந்த நொஷாபா ஷெஹ்சாத் மசூத் என்பவர், மத சுற்றுலா என்ற போர்வையில் இந்திய நகரங்களை குறிவைத்து ரகசிய உளவியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார். ISI அமைப்பால் 'மேடம் N' என்று அழைக்கப்படும் இவர், மத சுற்றுலாவை பயன்படுத்தி ஒரு பெரிய உளவு வலையமைப்பை இந்தியாவில் உருவாக்கியுள்ளார். இதன் மூலம் இந்திய சமூகத்தில் ஊடுருவி, நாடு முழுவதும் 500 உளவாளிகளைக் கொண்ட ஒரு குழுவை நிறுவ திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
மசூத், ஜெய்லானா டிராவல் & டூரிசம் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ISI உடன் நெருக்கமாக பணியாற்றியதாக சந்தேகிக்கப்படுகிறது. ஹரியானா, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து கைது செய்யப்பட்ட உளவாளிகள் பலர் இவரின் பெயரை வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
நொஷாபா, ஓய்வுபெற்ற பாகிஸ்தானிய அதிகாரியின் மனைவி ஆவார். இவர் இந்திய மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களை, குறிப்பாக சீக்கிய மற்றும் இந்து சமூகங்களைச் சேர்ந்தவர்களை பாகிஸ்தானில் உள்ள மத தளங்களுக்கு புனித யாத்திரை அழைத்துச் சென்றுள்ளார். இதன் வழியாகவே தங்களின் உளவு வேலைகளுக்கு ஆட்களை இவர்கள் தேர்வு செய்துள்ளனர். இந்த பயணங்கள் மூலம் தங்களின் உளவு டீமிற்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட வேண்டியவர்களை அடையாளம் கண்டுள்ளனர்.
இதில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய விஷயம் என்னவென்றால், விசா வழங்கும் நடைமுறையில் இவருக்கு இருந்த முழுமையான கட்டுப்பாடுதான். நொஷாபாவுக்கு டெல்லி உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் மூத்த பாகிஸ்தானிய தூதவர்களுடன் நேரடித் தொடர்பு இருந்தது என்று உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் அழைப்பு விடுத்தவர்களுக்கு விசா மறுக்கப்பட்டதே இல்லை. அதாவது இந்தியாவில் ஒருவரை தேர்வு செய்து அவரை பாகிஸ்தான் அழைத்தால்.. அந்த நபருக்கு எளிதாக விசா கிடைத்துவிடும். அவர் பரிந்துரை செய்த 100% விசாக்கள் அங்கீகரிக்கப்பட்டன என்று கூறப்படுகிறது.
ஆறு மாதங்களில் 4500 இந்தியர்கள் குறி
ஆறு மாதங்களில், மருத்துவர்கள், செல்வாக்கு மிக்க நபர்கள் மற்றும் டிக்டாக் பிரபலங்கள் உட்பட 4,500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு இவர் பயண ஏற்பாடு செய்துள்ளார். பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்துக்களை அவர்களிடையே விதைத்து, அவர்களை உளவாளிகளாக மாற்றுவதற்கான பணிகளை செய்துள்ளனர்.
மசூத்தின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானின் ETPB எனப்படும் மத ரீதியான அறக்கட்டளை சொத்து வாரியம் (ETPB) ஆதரவளித்தது. பாகிஸ்தானில் உள்ள இந்து தலங்களுக்கு உங்களை அழைத்து செல்கிறோம் என்று கூறி இந்தியர்களை அங்கே வரவழைத்து பணம், பொருள் கொடுத்து மூளை சலவை செய்து அவர்களை பாகிஸ்தான் உளவாளிகளாக மாற்றும் பணியை இவர் செய்து வந்துள்ளார்.
இன்னும் கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால், இந்த சுற்றுப்பயணங்களிலிருந்து கிடைக்கும் வருவாய் பாகிஸ்தானின் பல்வேறு நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கக்கூடும் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் ISI அமைப்பின் உளவாளிக் குழுவின் முக்கிய நபராக நொஷாபா செயல்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. டெல்லி மற்றும் பிற இந்திய நகரங்களில் தனது நிறுவனத்தின் சேவைகளை ஊக்குவிப்பதற்கும், தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கும் அவர் உளவாளிகளை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வலையமைப்பு எவ்வளவு தூரம் ஊடுருவியுள்ளது, இந்திய நகரங்களில் இவரின் உளவாளிகள் இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன.
நொஷாபா மசூத் மத சுற்றுலா என்ற போர்வையில் இந்தியாவிற்குள் ஊடுருவி உளவாளிக் குழுவை அமைத்தது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், இது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications