மது பாட்டில்களுக்கு தமிழில் பெயர்! கடல் நீரில் மதுபானம் தயாரிக்கணும்! வேற லெவல் வேட்பாளர்
சென்னை: மதுபானம் கடல் நீரில்தான் தயாரிக்க வேண்டும் என மத்திய சென்னையில் போட்டியிடும் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க வேட்பாளர் நாகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்டமாக லோக்சபா தேர்தல் தொடங்குகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து தேர்தல் பரப்புரையில் வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். திமுக, அதிமுக, பாஜக , நாம் தமிழர் என 4 முனை போட்டிகள் நடைபெறும் நிலையில் சுயேச்சைகளும் போட்டியிடுகிறார்கள்.
அந்த வகையில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பாக மத்திய சென்னையில் நாகராஜ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் அரும்பாக்கத்தை சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஆவார். ஊழலை ஒழிப்போம் என்ற வாசகத்துடன் பூஜ்யம் மதிப்பில் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிந்து கொண்டு மனு தாக்கல் செய்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் மது குடிப்போர் சங்கத்தின் ஆதரவில் மத்திய சென்னையில் போட்டியிடுகிறேன். மாநிலத்தில் மது குடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பாஜகவினர் பக்திமான்கள், திமுகவினர் பகுத்தறிவாளர்கள், நாங்கள் பாட்டில் பிரியங்கள், பார் வீரர்களாக தேர்தலில் களமிறங்குவோம்.
வெற்றி பெற்றால் மதுவுக்கு அடிமையானவர்களை மீட்க மையம் திறப்போம். அரசுக்கு வருமானம் தரும் எங்களை போன்ற குடிமகனின் வாகனங்களை போலீஸார் பிடிக்காத வகையில் சிவப்பு நிறத்தில் தனி நம்பர் பிளேட் உருவாக்க வேண்டும். இது போல் நிறைய கோரிக்கைகள் உள்ளன. இவற்றிற்கு லோக்சபாவில் குரல் கொடுப்போம். இவ்வாறு அவர் பேசினார்.
மது குடிப்போர் சங்கம் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் முதல்முறையாக போட்டியிடுகிறார் எம்.எஸ்.ஆறுமுகம். அவர் செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்றைய தினம் வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்திருந்தார். அப்போது அவர் கழுத்தில் தாலி அணிந்து கொண்டு வந்திருந்தார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் , இந்தியா முழுவதும் உள்ள இளம் விதவைகளை கணக்கெடுத்து அவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை தர வேண்டும். மது இந்தியா முழுவதும் தயாரிக்கிறார்கள். அந்த மதுவை கடல் நீரில்தான் தயாரிக்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தண்ணீர் பாக்கெட் 10 ரூபாய், 20 ரூபாய்க்கு விற்கிறார்கள். அதற்கு பதிலாக எல்லா கடைகளிலும் சின்டெக்ஸ் டாங்க் வைக்க வேண்டும்.
மதுபிரியர்களுக்கு தனி நம்பர் பிளேட் வைக்க வேண்டும். ஆண்டுதோறும் மது விற்பனை மூலமாக தினமும் நாங்கள் பணமாக கோடிக்கணக்கில் அரசாங்கத்திற்கு கொடுக்கிறோம். வீரர்கள் என மதுபாட்டில் வந்திருக்கிறது. நாங்கள் பார் வீரர்கள் என்பதால் அனைத்து மது பாட்டில்களுக்கும் தமிழில் பெயர் வைக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications