முதுகலை சிறப்பு மருத்துவ படிப்பில் 50% இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டே அமல்படுத்தலாம்: ஹைகோர்ட்
சென்னை: அரசு மருத்தவர்களுக்கு முதுகலை சிறப்பு மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை சட்ட பூர்வ தடையில்லாத நிலையில் நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் அரசு மருத்துவரான டாக்டர் டி.சுரேஷ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியக்கூடிய மருத்துவர்களுக்கு முதுகலை சிறப்பு மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.. அந்த உத்தரவில் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இட ஒதுக்கீடு நிறுத்தப்பட்டது என்றும்,பின்னர் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் அரசு இட ஒதுக்கீடு தொடர்பாக உத்தரவிட்டு வெளியிட்டதாக தெரிவித்துள்ளார். அந்த உத்தரவில் அரசு மருத்துவர்களுக்கு முதுகலை சிறப்பு மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று தெரிவித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் இது தொடர்பாக கடந்த ஆண்டு உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது,2020-2021 ஆம் கல்வியாண்டு செயல்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டதாகவும், எனவே கடந்த ஆண்டு வழங்கப்படவில்லை என்றும் மனுவில் தெரிவித்துள்ளார். எனவே உச்சநீதிமன்ற உத்தரவு கடந்த ஆண்டு மட்டுமே பொருந்தும் என்றும், இந்த கல்வி ஆண்டில் உரிய ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.தண்டபாணி இந்த கல்வி ஆண்டில் அரசு மருத்துவர்களுக்கு சிறப்பு மருத்துவ படிப்பு 50 சதவீத இட ஒதுக்கீட்டை , எந்த ஒரு சட்ட தடையும் இல்லாத பட்சத்தில் செயல்படுத்தலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications