“இனி இளையராஜா பாட்டை பயன்படுத்தவே மாட்டோம்”.. அஜித் பட தயாரிப்பாளர் வழக்கு முடித்து வைப்பு!
சென்னை: 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. படத்திலிருந்து பாடல்கள் நீக்கப்பட்டதாகவும், இனி இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த மாட்டோம் என மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உறுதி அளித்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில், தன் அனுமதியில்லாமல், 'இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி' ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த தடையை நீக்கக் கோரி 'குட் பேட் அக்லி' திரைப்படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது. 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களின் உரிமையை, சோனி நிறுவனத்திடம் இருந்து பெற்று பயன்படுத்தியதாகவும், தற்போது இளையராஜா பாடல்களை திரைப்படத்தில் இருந்து நீக்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது இளையராஜா தரப்பில், திரைப்பட தயாரிப்பாளர்களிடமிருந்து பாடல் உரிமையை வாங்கியதாக கூறுகிறார்கள். பதிப்புரிமை சட்டப்படி, இசையமைப்பாளர்களிடம் தான் பாடல் உரிமைகள் உள்ளன. ஒட்டுமொத்த திரைப்படத்திற்கு தயாரிப்பாளருக்கு உரிமை இருந்தாலும், பாடல்களை தனியாக எடுத்து மூன்றாம் நபருக்கு விற்க தயாரிப்பாளருக்கு எந்த உரிமையும் இல்லை. இந்த திரைப்படத்தில் மூன்று பாடல்கள் உருமாற்றம் செய்யப்பட்டுள்ளன என வாதிடப்பட்டது.
இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குட் பேட் அக்லி படத்திலிருந்து பாடல்கள் நீக்கப்பட்டதாகவும், இளையராஜாவின் பாடல்களை இனி பயன்படுத்த மாட்டோம் எனவும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உறுதி அளித்ததை அடுத்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.












Click it and Unblock the Notifications